அன்றொருநாள்: மார்ச் 3
"தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"
மார்க்கம் ஒன்று தான்; வழிநடைகள் தான் பல; அடிச்சுவடுகள் எங்கெங்கும். சர்வமதமும் சம்மதம் என்றாலும், சமயங்கள், கிளை சமயங்கள், ஒற்றையடி பாதைகள் என ஆன்மிக தேட்டல்கள் என்றுமே இருந்து வந்தன. அவற்றில் ‘அய்யா வழி’ ஒன்று. அது தோன்றியது கடந்த இரு நூறு ஆண்டுகளுக்குள் தான் என்றாலும், பேசப்படும் ஆன்மிகம், தொன்மை, சங்கேதங்கள் எல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. எனக்கு அவரை பற்றி தெரியாது. அறிந்து கொண்டதை, உசாத்துணையுடன், சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.
முத்துக்குட்டி பிறந்த தினம், மார்ச் 3, 1809 என்று ஒரு குறிப்பு; குமரி மாவட்டத்தின் தாமரைகுளம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட சாணார் இனத்தில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு ஆண்மகவு சுபஜனனம். ஶ்ரீமன்நாராயணனின் அவதாரமாக கருதப்படும் இவருக்கு, 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். தாத்தா சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. புலையன் வீட்டில் பிரசவம். ‘பெருமாள்’ என்று பாட்டி நாமகரணம் செய்கிறாள். எஜமான் கிட்ட சேதி சொன்னால், அவர் எரிந்து விழுகிறார். ‘இன்னாழ்தா பெழ்ம்மாழ்? த்திமிரா? மாழ்த்து சத்துபுழ்த்துணு’ என்று கர்ஜித்து விட்டு, தாம்பூலத்தை உமிழ்கிறார். மறுநாள் தரிசனத்தின் போது, புலையன் சொன்ன புது பெயர், ‘பெத்த பெருமாள்’! அந்த மாதிரி,‘முத்துக்குட்டி’யாக படியிறக்கப்பட்ட 'முடிசூடும் பெருமாள்‘ அய்யா வைகுண்டர் ஆன வரலாறு அகில திரட்டு அம்மானை என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அந்த நூல் முத்துக்குட்டி என்ற குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன், சம்பூரணதேவனின் ஆத்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. சம்பூரணதேவனே, அய்யா வைகுண்டரின் ஸ்தூல/சூக்ஷ்ம தேஹங்களை தாங்கி, தாமரைக்குளம் என்ற ஊரில் பிறந்திருக்கிறார். அவர் ஒரு தெய்வலோகவாசி. வைகுண்ட அவதாரம் வரை, இந்த அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. விஷ்ணுபக்தனான முத்துக்குட்டிக்கு 17 வயதில் திருமாலம்மாள் என்ற ஏற்கனவே மணம் புரிந்துள்ள பெண்ணுடன், திருமணம் ஆகிறது.
ஶ்ரீமன்நாராயணைனின் ஆணைகுட்பட்டு, தாயும், தனயனும் திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம் செய்கிறார்கள். இவர் திரும்பவில்லை. மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20ல் (1833?) வைகுண்டராக கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும், கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார்.
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"
வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த அவதாரப்பதி என்ற இடம் அய்யாவழி வழிப்பாட்டின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். இது, செந்தூர் பதி என்று அகிலத்தில் கூறப்பட்டுள்ளது.
1833ல் ‘அய்யா வழி’ என்ற ஹிந்துமத ஒற்றையடி பாதை, இவ்வாறு, உருவாகிறது. சுவாமிதோப்பு என்ற இடத்தில், அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. வியப்புறச்செய்யும் பல செய்திகள் இருந்தாலும், "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட, இந்த நாராயண பண்டாரத்தால், மக்கள் ஊக்கிவிக்கப்பட்டனர். அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதாக, அய்யாவழியில் அறியப்படுகிறது. எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா? மன்னன் இவரை கைது செய்ததாகவும், அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.
வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம்,திங்களன்று வைகுண்டம் சென்றார் என்றும் அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் மண்ணறையில் வைக்கப்படுகிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அதற்கு மாறாக, அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்றும் வாதங்கள் நிகழ்கின்றன. வாதமில்லையேல்...!
எனக்கு அறிமுகம் இல்லாத இந்த அய்யா வழியை பற்றி, பல உசாத்துணைகள். ஒன்று என்னை கவர்ந்தது. திரு அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி ஆகியோர் தமிழ்ஹிந்து இதழில் சாதிகளை பற்றி ‘சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3’
என்று ஃபெப்ரவரி 22, 2010 அன்று எழுதிய கட்டுரை. காப்புரிமையையும், நன்றியையும் கூறி, அதிலிருந்து ஒரு பகுதியை கீழே அளிக்கிறேன். கிருத்துவமதத்தை பற்றி அங்கு கூறப்பட்டதுடன், எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் என்ன? பரவாயில்லை.
***
“...உயர் குலத்தவன் என தன்னை கருதுபவன் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தைக் கூறவும் தகுதியற்றவன் என குந்தி தேவி கிருஷ்ணரை துதிக்கும் போது கூறுகிறாள் (ஸ்ரீ மத் பாகவதம்: 1.8.22)
கீதை, புராணங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிக் கூறினீர்கள். பிற்பட்ட காலங்களிலும் சாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த அருளாளர்கள் இருந்தார்களா?
அய்யா வைகுண்டர் எனும் அவதார புருஷரின் உதாரணம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
சாணார்/நாடார் என்று பேச்சுவழக்கில் அழைக்கப் படும் சான்றோர் சமுதாயம், அந்நிய மதப் பிரச்சாரகர்கள் மற்றும் வெள்ளையர் ஆதிக்கக் கைப்பாவையான திருவிதாங்கூர் மேல்சாதி வர்க்கத்தால் அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தது. அந்தச் சமுதாயத்தை சுரண்டல், அடக்குமுறை, மதமாற்றம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி, உரிமைகளை வென்று மானுடத்தின் வெற்றிக்குக் காரணமான தெய்வீக புருஷர் அய்யா வைகுண்டர்.
அவரது அகிலத்திரட்டு எனும் அருள் நூலை நோக்கினால் சனாதனமாக பாரதம் முழுமைக்கும் அருள் வழங்கும் சத்தியம் அய்யா வைகுண்டரின் சமுதாய எழுச்சிக்கும் உள்ளொளியாக வெளிப்பட்டதை அறியலாம்.
மேற்கத்திய மதங்களில் இறைத்தூதன் அல்லது மீட்பர் எனக்கருதப்படுபவரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட மேல்சாதியிலேயே நிகழும். உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறப்பார் என முன்னறிவிக்கப் பட்டு அந்த குலத்தில்தான் ஏசு பிறந்ததாக கிறிஸ்தவர் கூறுகின்றனர். ஆனால் இறைவன் அவதரிக்க சாதி குலம் எதுவும் தடை இல்லை என்பது இந்து தத்துவம். இறைவன் ஆயனாகவும் அவதரிப்பார். சமுதாயத்தால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகவும் வருவார். இது இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறும் உண்மை ஆகும்.
எனவே, அய்யா வைகுண்டர் அவதார புருஷர் என்று அடியார்கள் அவரைப் போற்றுவதைக் கேள்விப் பட்டவுடன், வெளிநாட்டு ஆதிக்கக் கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் (அன்னிய மத தாக்கத்தினால்) ”அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா?” எனக் கேட்டான். அதற்கு சாஸ்திரி ஒருவர்,
“எளிமையாம் குலங்கள் என்று எண்ணுற மனுவே அல்ல
பளிரென ஆதிநாதன் பார்க்கவே மாட்டார் அய்யா”
என்று கூறினார். மேலும் பூவண்டன் எனும் அமைச்சர் அரசனுக்கு இந்து ஞான மரபில் எந்த குலத்திலும் இறைவன் அவதரிப்பார் எனக் கூறும் போது அனைத்து விளிம்பு நிலை குலங்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திலும் இறைவன் பிறந்திருக்கிறார் எனக் கூறுகிறார் -
“பாணனாய்த் தோன்றி நிற்பார்; பறையனாய்த் தோன்றி நிற்பார்
குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக்குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்.”
பகவான் புத்தர், மகாவீரர் ஆகியோர், மகான் ஞானேஸ்வர், மகான் துகாராம், மகான் ஏகநாதர், மகான் ரவிதாஸர், மகான் ராமானந்தர் ஆகிய வடநாட்டு பெரியவர்களும் சாதியத்தை எதிர்த்து போராடியவர்கள் ஆவர். மகான் ஞானேஸ்வர் பகவத் கீதையை மராட்டி மொழியில் எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றார் . மகான் துகாராம் உயர்ந்த ஆன்மீகக் கருத்துக்களை மராட்டிய மொழியில் அபங்கங்கள் என்னும் எளிய பாட்லகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னாளில் ஜோதிபா புலே, சாகு மகராஜ் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், தலித் போராளிகள் மராட்டிய மண்ணில் தோன்றுவதற்கு இந்த அருளாளர்களின் உபதேசங்களும் ஒரு முக்கியப் பங்கை ஆற்றின என்றே சொல்லலாம். அண்ணல் அம்பேத்கரும் இந்த அருளாளர்களின் உபதேசங்களால் உந்துதல் பெற்றார்...”
***
இன்னம்பூரான்
03 03 2012
உசாத்துணை: