Tuesday, August 20, 2013
சென்னை குறிப்புகள் ~5
ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!
உங்களுக்கு பண்டாரவாடை வெற்றிலை கதை தெரியுமோ? கும்போணம் துளிர் வெற்றிலைக்கு உள்ள மவுசுக்கு உற்பத்திஸ்தானம் பண்டாரவாடையில் படரும் வெளிர்பச்சை வெற்றிலை கொடிகள். பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் திறன்மிக்க பணி, அதன் சாகுபடியில். மத நல்லிணக்கத்துக்கு வெற்றிலை ஒரு எடுத்துக்காட்டு. கோயில்களுக்கு அங்கிருந்து தானே வருகிறது. ஆனா ஒண்ணு. தொட்டாச்சுணுங்கி மாதிரி, கவனம் குறைந்தால், அழுகிவிடும். உடனே விற்றுவிடவேண்டும், சல்லிசு விலைக்கு. ஆனால், நாள் தோறும் அழுகிய வெற்றிலை தான் விற்க நேரிடும். அல்லது ஒரு நாள் அழுகலை அழிக்கவேண்டும். நிதி அமைச்சரையோ அல்லது திட்டக்கமிஷனையோ கேட்டால், தினந்தோறும் அழுகிய வெற்றிலையை விற்கச்சொல்லுவார்களோ, என்னமோ, ஆடிட்காரன் மீது பழியை போட்டு விட்டு!
இத்தனை அருமையான உவமையை முன்னிறுத்துவதற்குக்காரணம், என் தற்கால நிலைமை தான். நாள் தோறும் செந்தமிழேணியில் பேலன்சிங்க்! சூறாவளி பயணங்கள். நண்பர்களுடன் சந்திப்பு. ஓயாதக் கைச்செவி. காதோ மந்தம். அது தான் போகிறது என்றால் இணையம் கிட்டாது. கிட்டினாலும் எட்டாது. எட்டினால் மீட்டிங்கில். திருவேங்கடமணி மாதிரி அநேக நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த அழகில் அன்றாட நினைவுகள் மங்கிப் போய்விடுவதால், வாசகர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு, முன்னும் பின்னுமாக எழுதுகிறேன். இல்லாவிடின், அவை மக்கிப்போய்விடக்கூடும். ஜூலை 7 அன்றே, இறங்கிய களைப்புத் தீராமல் சென்னை உலா வந்ததை (காரைக்குடிக்கு வந்து என்னை வாழ்த்திய கீதா சாம்பசிவம் தம்பதிகள் நோட்டுக.) எழுதி முடிக்கும் முன் ஆகஸ்ட் 16 வந்து விட்டது. ஆண்டவா?. அதான் இப்படி.
ஆகஸ்ட் 13 அன்று இரவு, இன்னம்பூர்/காரைக்குடி விஜயம் முடிந்த பின் ( அது பிறகு வரும்.), மறுபடியும் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம், கங்கை கொண்டான் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்து, சிற்பங்களை கண்டு வியந்து, திருவண்ணாமலையில் தமிழ்ச்செல்வி குடும்பத்தினருடன் அளவளாவி விட்டு, இராத்தங்கல் கிரோம்பேட்டையில். 14 அன்று என் தந்தையின் திதி. அவருடைய ஞாபகம் பூரணமாக மனதில் இருக்க, அவருக்கு அஞ்சலி செலுத்தினோம், நானும் என் தம்பியும். அன்றே சாஸ்திரி நகர் பயணம்.
சாஸ்திரி நகரில் ஒரு அடுக்கு மாடி வாசிகள் வாரச்சாப்பாடு போட்டார்கள், இந்த ‘ஐந்து நாள் வைபோகத்தில்’. சுகுமார்-டொரதி என்ற தம்பதியுடன் வாசம். உடனிருந்த பெண்ணரசி எவாஞ்சலின். வெளியூரில் வசிக்கும் பாலீன் தினந்தோறும் மாலை கைபேசியில். அன்று இரவு அங்கு விருந்து. பிறகு, காலை, மதியம், மாலை இந்த மாடி வீடு அல்லது அந்த மாடி வீடு என்று விருந்து. ஆகஸ்ட் 18 அன்று வழியில் உண்ண டொரதி கொடுத்த சாண்ட்விச் வரை அங்கு தான் டேரா; விருந்தோம்பல் எல்லாம். அங்கிருந்த குடித்தனக்காரர்கள் யாவரும் என்னை உபசரித்தது ஒரு மென்மையான அனுபவம். அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும், கனிவான அன்பும், என் ஆரோக்கியத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட கவனிப்பும் சொல்லில் அடங்கா. ஒரு வீடு பஞ்சாபி நண்பரின் வாசஸ்தலம். என்னிலும் முதியவரான அவருடைய மாமனாரும், அவரது சஹதர்மிணியும் உபசரித்தனர். மற்றொரு வீட்டில் ஒரு இளம்பெண்ணும், பெற்றோர்களும். கவனித்துப்போட்டதுமில்லாமல், உணவு சம்பந்தமான என் ஆசாபாசங்களை கணக்கில் எடுத்துக்கொண்டனர். மற்றொரு வீட்டில் இளந்தம்பதி, முதியவர்கள், விசால தள நேத்ரியான ஒரு ஸ்தீரி பிரஜை. சமத்து குழந்தை. அவளுடைய தங்கை, கைக்குழந்தை. அவர்கள் வைரமுத்துவின் நூல்களை எனக்கு படிக்கக்கொடுத்தனர்.
நான் விருந்தாளியாக இல்லை, டொரதி வீட்டில். வீட்டுக்கு ‘பெரிசாக’ இருந்தேன். அன்பும் கனிவும், அக்கறையும், கவனிப்பும் இயல்பாகவே அமைந்து விட்டது பூரணமாக. நாள் தோறும் ஹை-லைட்ஸ். காலை எட்டு மணிக்கு வேலைக்கும், கல்லூரிக்கும் அவர்கள் சென்று விடுவதால், எல்லாம் திட்டமிட்ட முன்னேற்பாடு. மாலை/இரவு மணிக்கணக்காக அளவளாவுதல். பாமரகீர்த்திகள் பல பாடப்பட்டன. கை பேசிகள் படம் எடுத்த வண்ணம். ஒரு நாள் மாலை என் மகளும், பேருக்கு தாதியாகவும், உள்ளபடி மற்றொரு மகளாக எங்களுக்கு இருந்த புஜம்மாவும் அவளுடைய மகளும், புது மாப்பிள்ளையும் எஞ்சினீயர் மகனும் வந்திருந்தார்கள். ‘ஆதி ஆந்திர திராவிட இனம்’ என்று சொல்லப்பட்டு, சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட புஜம்மாவின் குடும்பத்தின் தற்கால உன்னத நிலை எனக்கு அளித்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. பல வருடங்கள் வரை சாத்தியமாகாத இந்த சந்திப்பு வஸந்தாவின் ஞாபகார்த்தமாக அமைந்தது.
டொரதி குடும்பத்தில் நான் ‘புதிய தாத்தா’ என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு மனநிறைவு தரும் நிகழ்வு. அங்கிருந்த ஐந்து நாட்களும், வினாடி தோறும், குடும்பத்தில் ‘பெரியவராக’ ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு நினைவைக் கிளறியது. கேரளத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க சான்றோன், என் சிறு வயதில் எனக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தார். இத்தனைக்கும் அந்த காலகட்டம் சோகமயமானது. அவருடைய மூத்த மகனும், என் கடைசி தம்பியும் டைஃபாயிடில் இறந்த காலகட்டம். ஐம்பது வருடங்களுக்கு பின் அவருடைய கடைசி மகன் டில்லியில் என்னை சந்தித்தார். அப்போது அவர் சொன்னது, ‘நீங்கள் தான் இனி எங்கள் பெரிய குடும்பத்தின் மூத்தமகன்’ என்று எங்கள் தந்தை அடிக்கடி சொல்லுவார்.’. அந்த இனிய சம்பவமும் சரி, பாலீனுக்கும், எவாஞ்சலினுக்கும் நான், ‘the Other Thaathaa’ ஆனதும் எனக்கு பரமபிதாவும், கர்த்தரும் அளித்த வரன்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு குறை. ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் மாதாகோயிலுக்குப் போவதாக திட்டம். உடனுக்குடன் அமெரிக்கா போய் சேர்ந்த பெண்ணுடன் பேச, அப்போது தான் நேரம் அமைந்தது. ஆகவே, மாதாகோயிலுக்கு போக இயலவில்லை.
பத்துப்பக்கம் எழுதுவதை ஒரு சித்திரம் சொல்லி விடும். அத்தகைய சித்திரங்களை எடுத்தது, டொரதி. குடும்பமே கலைக்குடும்பம். அவர்களுடன் ‘சிசு தரிசனம்’ பற்றியும், ராகத்துடன் தோத்திரபாடல்கள் இயற்றிய மரியாதைக்குரிய வேதநாயகம் சாஸ்திரிகளை பற்றியும் சம்பாஷணை நடந்தது. நான் பயணம் செய்ய கிளம்பும்போது, நாங்கள் நால்வரும் கைகோத்து பிரார்த்தனை செய்தது, மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு:
ஆண்டவனின் பரிபூர்ணமான அரவணைப்பு அந்த குடும்பத்திற்கு என்றென்றும் கிட்டவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
இன்னம்பூரான்
14 ~ 18 ஆகஸ்ட் 2013/ 20 ஆகஸ்ட் 2013
சித்திரங்கள்: டொரதி உபயம்.