அன்றொருநாள்: ஃபெப்ரவரி 10:
கண்டி: சுண்டியா? மண்டியா?
ஒரே ஒரு ஊர்லே ஒரே ஒரு ராஜாவாம். அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தாராம். அசப்பிலெ அடுத்தாத்து மனுஷன் போல இருந்தாராம். வேட்டி கட்டி, சொக்காய் போட்டுக்கிணு, தாடியும், ஜில்ப்பாவுமா...ஹிப்பியோ! ஆனா ஞானஸ்தன், சுவாமி. சிங்களம் அறிவார். பழங்கால பாலி அறிவார். பெளத்தரோ இல்லையோ, சாகா பக்ஷிணி. ஊருக்கு பெரிய மனுஷன். செத்தும்பூட்டாராம். பெரியதாக கல்லறை எழுப்பி, தடபுடலா அலங்காரம் செய்து, இன்று வரை கன கச்சிதமாக வைத்து பராமரிக்கரார்களாம்.பேரு: ஸர் ஜான் டாய்லி. ஸார்! இவர் கபட சன்யாசி. வஞ்சகம் பல செய்தார். கண்டியை தவிர. ஈழம் பூரா ஆங்கிலேயரின் கலோனிய ஆட்சி கொடி கட்டி பறந்த காலமது. சின்ன வயதில், நுவாரா எலியா, அனுராதபுரம் பெளத்த விஹாரம் ( சாக்யமுனியின் பல் ஒன்றை புனிதமென போற்றும் தேவாலயம்.), கண்டி ராஜ்யம் பற்றிய சேகரித்த தபால் தலைகள் இன்னும் இருக்கின்றன. அவை என்னை சுண்டியிழுக்கும் கதை கேளும்.
கண்டி ராஜ்யம் கெட்டியாகத்தான் இருந்தது. இலங்கையின் மீது போர்ச்சுகீசியர்கள் கண் வைத்தது, 1505ல். அவர்களை துரத்தியடித்து, தீவு முமுவதையும் டச்சுக்காரர்கள் ஆக்ரமித்தது, 1658ல். முழுவதும் என்றால், தீவின் மத்தியில் இருந்த கண்டி ராஜ்யம் அதில் அடங்கவில்லை; அவர்களுக்கும் அடங்கவில்லை. அங்கு அண்டவந்த பிடாரிகளுக்கு தோல்வி தான். ஆங்கிலேயர்கள், தமக்கே உரிய கலோனிய சுரண்டல் வகையில், இலங்கையை 1796லியே கபளீகரம் செய்ய தொடங்கியும், ஒரு துரோகியின் உதவியுடன் 1803ல் கண்டியின் மீது போர் தொடுத்தும், அங்கு, ஆங்கிலேயர்களால் காலூன்றமுடியவில்லை. அவர்களின் பொம்மை ராஜா முத்துசாமிக்கு மக்களின் ஆதரவு கிட்டவில்லை. ஒரு கட்டத்தில், பிரிட்டீஷ் படையில், ஒருவர் மட்டுமே தப்பினார். சூழ்ச்சிகள் பெருகின. சகுனி தோற்றான், போங்கள். ஸர் ஜான் டாய்லி, அப்படி பிரதான துரோகிகளுடன், நாயக்க வம்சாவளியை சார்ந்த ராஜா ஶ்ரீ விக்ரமராஜசிங்காவை கவிழ்க்க, மந்திராலோசனை நடத்தியவண்ணமிருந்தார்.
ஃபெப்ரவரி 10, 1815 அன்று கண்டி வீழ்ந்தது. தடபுடலாக, ஸர் ஜான் டாய்லி தலைமையில், அமீனா புகுந்த மாதிரி, ஆங்கிலேயரின் படை நுழைந்தது. ராஜா ஶ்ரீ விக்ரமராஜசிங்கா தமிழ்நாட்டின் வேலுருக்கு நாடு கடத்தப்பட்டு, 17 வருடங்கள் கழிந்து மறைந்தார். ஸர் ஜான் டாய்லியின் உச்சகட்ட சாதனை: 1815ம் வருட ‘உடன்படிக்கை’. அதை படித்தால், விளக்கில் வீழ்ந்த விட்டில்பூச்சி போல, கண்டியை சுண்டி பிடிக்கவில்லை. கண்டி மண்டிப்போட்டதாக்கும் என்று தோன்றும். ஹூம்...!
வரலாற்றின் சில செயல்பாடுகள் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி விடும். கண்டியின் நாயக்கர் பரம்பரை ஆட்சி 400 வருடங்கள் தான். ஆனால், அவர்களின் ஆட்சியை குலைத்ததினால், காடும் போச்சு; வனாந்திரமும் போச்சு; இயற்கை ஒழிந்தது; ரோடும், ரயிலும் வந்தது. தேயிலை தோட்டங்களும் வந்தன. தமிழ்நாட்டிலிருந்து கொத்தடிமைகளும் வந்தனர்; புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ யாக கொதித்தது பூமி. இத்தனைக்கும், 2500 வருடங்களாக, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் சுகுமமான போக்குவரத்து இருந்திருக்கிறது. ஒரு கலோனிய தலையீட்டினால், பயங்கர விபரீதங்கள்.
இன்னம்பூரான்
11 02 2012
Sri Wickrama Rajasinghe (AD 1798 - 1815) the last king of this Vaduga ...
உசாத்துணை:
No comments:
Post a Comment