அன்றொருநாள்: ஃபெப்ரவரி 11
மொழி தொழுகை
இந்தியாவில் புத்தகம் பிரசுரிப்பது எளிதல்ல. புத்தகம் இரவல் வாங்கிப் படிப்பதே அரிது. இது பொதுவாக உலவும் கருத்து. ஒரு நூறு வருடங்கள் முன்னால் கேட்கவே வேண்டாம். அதுவும் இந்திய மொழியில் என்றால், ஒரு தாழ்வு மனப்பான்மை. இந்த அழகில், புத்தகப்பிரசுர உலகில் லஹேரியாஸெராய் என்ற சிறிய ஊரில் இருந்த புஸ்தக பண்டார் என்ற பிரசுரநிலையம் 1915லியே பிரபலம். அதை நிறுவிய ஆசார்யா ராம்லோசன் சரன் அவர்கள் புஸ்தக பண்டாருக்கு விழா எடுத்தபோது,‘தம்பி ராம் லோசன், உன் பணியை மெச்சுகிறேன். தொடருக. ஆசிகள்.’ என்று அண்ணல் காந்தி வாழ்த்து அனுப்பியிருந்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு பிரசுரம் பற்றி எல்லா திறன்களையும் கற்றுக்கொடுத்து,500 பேரை வேலைக்கு வைத்துக்கொண்டிருந்தார். வாழ்நாள் முழுதும் தாய்மொழிக்காகவே தன்னை அர்ப்பணம் செய்து கொண்டார். பணி செய்து கிடந்த அவர் விளம்பரமும், ஆடம்பரமும் நாடியதே இல்லை. பதிப்பாசிரியர் மட்டுமல்ல. இதழாசிரியரும் கூட. ‘பாலக்’, ‘ஹிமாலாய’, ‘ஹோன்ஹார்’ எனப்பட்ட அவருடைய இதழ்களுக்கு அக்காலம் மதிப்பு மிகவும் இருந்தது. ‘மனோஹர் போத்தி’ என்ற அவருடைய பால பாடபுத்தகம் இன்றளவும் போதிக்கப்படுகிறது. ராமவிருக்ஷ பேனிபுரி, ராம்தாரி சிங் ‘தின்கர்’ (என் குருநாதர்). ஆசார்ய சிவபூஜன் சஹாய், பண்டித் ஹரிமோஹன் ஜா போன்ற கியாதி பெற்ற புலவர்களை, பிரசுரித்து, பிரசுரித்து, ஊக்குவித்தவர், இவர் தான். டாக்டர் காளிதாஸ் நாக் எழுதிய ‘டால்ஸ்டாய் & காந்தி’ என்ற ஆங்கில நூலையும், காந்திஜியின் நூல்களையும் முதன்முதலாக பிரசுரித்தவர், இவரே. அதையெல்லாம் விடுங்கள். நசித்துப்போகும் நிலையில் இருந்த மைதிலி (ஹிந்தியின் கிளை மொழிகளில் ஒன்று; எழில் வடியும் மொழி. தின்கர் சாஹேப் பாடினால், திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.) நூல்களை மைதிலி எழுத்துக்களில் பதிப்பித்து, அன்னையின் நன்றிக்கு உரியவர் ஆனார். அவருடைய அரிய பெரும் சாதனை யாதெனில், துளசிதாஸரின் படைப்பு யாவற்றையும் மைதிலி மொழியிலியே பதிப்பித்தார். துளசிராமாயனத்தின் சித்தாந்த பாஷ்யத்தையும் பதிப்பித்தார். பாட்னாவுக்கு 1929ல் வந்து விட்ட ஆசார்யா அவர்களை போல, அந்த சுற்றுவட்டாரத்தில் விருந்தோம்ப ஆட்கள் இல்லை. ஆன்மீக குரு, கவிஞர், கலைஞர், தத்துவ வாதி, சமுதாய ஆர்வலர், அரசு ஊழியர்கள் என்று எப்போதும் ஜமா தான். ஊரும், நாடும் செழித்தது இவரால் என்றால், மிகையாகாது. இன்று அவருடைய ஜன்மதினம். ஃபெப்ரவரி 11, 1889ல் பிறந்த ஆசார்யா மே 14, 1971 அன்று மறைந்தார். அன்று இந்தியன் நேஷன் என்ற இதழ், ‘பீஹாரில் ராம் லோசன் பாபு பிறக்காவிடின், ஹிந்தி இலக்கியம் இருபது, முப்பது வருடங்கள் பின் தங்கியிருக்கும்.’ என்று எழுதியது. உண்மை.
தமிழுக்கு, ஆசார்யா ராம்லோசன் சரன் மாதிரி, பணி செய்யப்போவது யார்?
இன்னம்பூரான்
11 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment