அன்றொரு நாள்: ஜனவரி: 2
பன்முகப்புலமை
“ ப்ளேட்டோ ஆத்மா அழிவற்றது என்கிறார்; உவமைகள் பல உரைத்து ‘உளவியலுக்கு’ அடி கோலினார்... மனிதன் உயிர்தரித்து இருப்பதை அவனது ஆசாபாசங்கள், சினம், பகுத்தறிவு மூலம் நிரூபணம் செய்கிறான் என்கிறார். கிரேக்கமொழியிலிருந்து மொழிபயர்ப்பது கடினம். அவற்றை காமம், சச்சரவு, சிந்தனை என்றும் சொல்லலாம். அவற்றையெல்லாம் விழைகிறோம், வெறுக்கிறோம், உதறுகிறோம். இதையெல்லாம் ஆட்டுவிப்பது ஒரு நிர்ணய கோட்பாடு; உகந்ததையும், தகாததையும் பிரித்து இயங்குவது, அந்த அணுகுமுறை தனக்கு என்று வழி வகுத்துக் கொள்வது.
பகுத்து அறிவதுடன், இது தற்காலத்தில், ‘சுய தீர்மானம்’ (‘வில்’) என்று நாம் புரிந்து கொள்ளும் தன்மை. அது தான் ஆத்மா. இந்த காமம், சச்சரவு, சிந்தனையெல்லாம் ஆத்மாவின் தொண்டர்கள், வாழ்வின் பகுதிகளின் உருக்கள்; உயிர்மையின் வரத்துப்போக்குகள்...மற்றொரு இடத்தில் ப்ளேட்டோ விளக்குகிறார் ~‘ஒரு சாரட்; இரண்டு புரவிகள்; ஒன்று சோம்பேறி, கீழ்நோக்கி. மற்றொன்று துணிச்சல், பாய்ச்சல், விரைந்தோடி வரும் கடுமா. மனிதனோ அவற்றை அடக்கியாண்டு, லாகவமாக செலுத்துவதல்லாமல், வழி நடக்கும் பாதையையும் நிர்ணயிக்க வேண்டும். அவனுக்கு இந்த கட்டத்தில் பேருதவி செய்து, மார்க்க பந்துவாக இயங்குவது சாரதி. அந்த சாரதி தான் ஆத்மா...’
~ கில்பெர்ட் முர்ரே: 1918: ‘ஆத்மாவும், அதை கையாளுவதும்’: ஹிப்பெர்ட் ஜர்னல்: ஜனவரி 1918: மீள்பதிவு: பிரம்மஞான சங்கம்: சென்னை: அடையார்’
கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. புலமையும், பரந்த மனப்பான்மையும், புன்னை மரத்தடி போதனை ஆற்றலும் , உலகளாவிய சிந்தனையும், தொன்மையின் மரபை பேணும் ஆர்வமும், திறந்த மனமும், சிரித்த முகமும், கனிவும், பரிவும் ஆன குணமும்,ஒன்றுக்கொன்று போட்டியிடாமல், ஒருவரிடம் ஒண்டுக்குடித்தனம் செய்தால், அதை விட பெரும்பேறு ஒருவருக்கும் கிட்டப்போவதில்லை. நேற்று மதிய உணவுக்கு ஒரு விருந்தினர். அவருக்கு தமிழுடன், நம் எல்லாரையையும் விட பழைமையாக உள்ள உறவைக் கண்டு நான் மகிழ்ந்தேன். பிறகு அதை பற்றி எழுதுகிறேன். நாங்கள் அளவளாவும் போது ஏழு தலைமுறைகளாக, இங்கிலாந்திலும், இந்தியாவிலும் கல்வி அளிப்பது நடந்த விதத்தை ஆக்கப்பூர்வமாக விவாதிக்க இயன்றது. அவரவர் கருத்துக்கள், அனுபவங்கள், கேட்டறிந்தது, சுருக்கமாக:
1800 ~ 1900: வீட்டுப்பாடம், ஓலைச்சுவடி, திண்ணைப்பள்ளிக்கூடம், சில கிராமங்களில் குடத்துள் குத்துவிளக்கு போன்ற புலவர்கள், சைவ மடங்களின் தமிழார்வம், நகரங்களில் பட்டணங்களில், அதுவும் கிருத்துவ பள்ளிகளில் படிப்போருக்கு, எளிதில் ஆங்கிலப்புலமை;
1900 ~1950: மேற்கண்டவை வேகமாக பரவின. கும்பகோணம் கல்லூரி போன்ற அரசு உயர்கல்வி, நகரத்தார் =கொடை: காரைக்குடியில் பெண் கல்வி, சென்னையில் கலவலக்கண்ணன் செட்டியார், எம்ஸிட்டி பள்ளிகள், பார் அட் லா அழகப்பச்செட்டியார், ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் கல்வி வள்ளல்கள், புதுக்கோட்டை குலபதி பாலையா, தம்புடு சார் போன்றோரின் கல்வி தானம், ஒரு பக்கம் உ.வே.சா, திரு.வி.க. தலையெடுத்தது; ஒரு பக்கம் ஐ.சி. எஸ். அதிகாரிகள். ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கல்வி பெற்று, இங்கிலாந்து மேல்படிப்பில், கிரேக்க/ரோமாபுரி இலக்கியங்கள் கற்று, நமது மரபுகளை கற்றுக்கொண்டு, நுண்கலை, இலக்கியம், ஓவியம் எல்லாம் அறிந்து, தன்னுடைய துறையில் வல்லுனராக விளங்கியது பற்றி பேசப்பட்டபோது, கல்வியின் தரம், முழுமை, விசாலம், தொடர் நிலை, வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவை முன் வைக்கப்பட்டன.
1950 ~1975: அகில இந்திய கல்விக்கொள்கைகள் முக்கியத்துவம் பெற்றாலும், மாநிலங்களில் கல்வி தீவுகள் கோலோச்சின. தமிழ்நாடு பொருத்தவரை, அது கண்கூடு. கல்வியின் விலை கணிசமாக ஏறியது, பிற்பகுதியில்
1975 ~ 2011: குலபதிகள் கடந்த கால வரலாறு. கல்வித்தந்தைகளின் யதேச்சதிகாரம் தலை தூக்கியது. கல்வியின் விலை தாறுமாறாக ஏறியது. தமிழ் தாழ்ந்தது. ஆங்கிலத்துக்கு ஆதரவு மிகுந்து வருகிறது. இது நடைமுறையில். பேச்சளவில், ஆங்கிலம் தாழ்ந்தது. தமிழுக்கு அமோக ஆதரவு. 2011 ஆண்டு பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் இங்கிலாந்து மாணவர்களின் அறிவுகிடங்கு, சராசரி தமிழ்நாட்டு பட்டதாரியின் படிப்புக்கு சமானம் என்றால், அது மிகையல்ல,
இத்தருணம், ஜனவரி 2, 1866 அன்று ஆஸ்ட் ரேலியாவில் பிறந்த பேராசிரியர் கில்பர்ட் முர்ரே அவர்களை பற்றி பேச்சு வந்தது. 23 வயதில் க்ளாஸ்கோ பல்கலை கழகத்தில் கிரேக்க இலக்கிய பேராசிரியர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 1926ம் வருடம் கவிதை இலக்கிய பேராசிரியாக இருந்ததைத் தவிர, 1906லிருந்து 28 வருடங்கள் ஆக்ஸ்ஃபோர்ட்டில் ரீஜியஸ் பேராசிரியர் என்ற உயர்பதவியிலமர்ந்து, கிரேக்க இலக்கியத்தை புன்னை மரத்தடி போதனை செய்தார். அருமையான மொழி பெயர்ப்பாளர். 1897லிருந்து 1960 வரை அநேக நூல்கள் எழுதியுள்ளார். உலக சமாதானத்திற்கு உழைத்தார். ஐ.நா. சம்பந்தமான மையத்துக்கும், அதற்கு முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் சம்பந்தமான மையத்துக்கும் தலைவராக தொண்டு செய்தார். துவக்கத்தில் பட்டியல் இடப்பட்ட நற்குணங்களுக்கு உறைவிடமாக இருந்தார். அவரை பில் கேட்ஸ் மாதிரி சாதனையாளர் என்று சொல்ல முடியாது. ஆனால், அவருடைய ஆசிரியர்கள் அளித்த கல்வியின் கடலாழத்தாலும், சுய விசாரணை தன்மையாலும் ஒரு பூரணத்துவம் அடைந்த மாமனிதரவர் என்றால், அது மிகையாகாது. அவரை துருவநக்ஷத்திரமாகப் பாவித்து, கல்வித்தீக்கு ஆஹூதி செய்வோமாக.
இன்னம்பூரான்.
02 01 2012
பி.கு. ‘ஆத்மாவும் அதை கையாளுவதும்’ என்ற தலைப்பில் அரிஸ்டாட்டிலும், அண்ணல் காந்தியும் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதை ‘கட் அண்ட் ஒட்’ செய்வது எளிது. அப்படி செய்தால், ஆத்மா கேலி செய்யும்! என்றோ ஒரு நாள், தமிழாக்கம் செய்கிறேன், அவற்றை. ஒரு வியப்பு. நேற்று சிசுவை தரிசித்தோம். கில்பர்ட் முர்ரேயை பல வருடங்கள் படித்த எனக்கு, இன்று தான் அவர் அதை பற்றி எழுதியது கிடைத்தது. அதுவும் திருமதி. கீதா சாம்பசிவம் ஆத்மார்த்தமாக எழுதியதின் நல் வரவு என்று நினைக்கிறேன். ப்ளேட்டோ பேசுவது பகவத் கீதா சாரமா?
உசாத்துணை:
Christopher Stray (2007) Gilbert Murray Reassessed: Hellenism, Theatre, and International Politics
No comments:
Post a Comment