அன்றொரு நாள்: ஜனவரி:24
கொல்கொத்தாவிலிருந்து கபூர்தலா வரை
‘...இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து...’
~ நாலடியார்:132
அன்று சொன்னது என்றும் பொருந்தும். ஆம். இப்புவியில் கல்விக்கு ஈடு யாதும் இல்லை. கொடுக்க, கொடுக்க, குறையாத செல்வம். கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. சிரஞ்சீவி. அறியாமையை தீர்க்கும் மாமருந்து.
ஒரே காலகட்டத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் வியப்பை அளிக்கின்றன. 1857ம் வருடம் ஒரு மாபெரும் வன்முறை புரட்சியை ஒழிப்பதில் முனைந்திருந்த இந்தியாவின் கலோனிய அரசு, ஜனவரி 24, 1857 அன்றே மற்றொரு ஆக்கப்பூர்வமான புரட்சிக்கு வித்திட்டது.~கல்கத்தா பல்கலைக்கழகம்; கூடப்பிறந்தது காலேஜ் சாலை, போனஸ் பள்ளியாக. காலேஜ் ரோடு தலபுராணம் ஒரு நாள் எழுதவேண்டும். சொல்லப்போனால்,1845லிலேயே, வங்காளத்தின் கல்வி ஆர்வத்தை கவனத்தில் கொண்டு, ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதை பற்றி பேச்சு எழுந்தது. 1853ல் கல்வித்துறைத்தலைவர் சி.ஹெச்.கேமரனும், ராஜா ராதாகிருஷ்ண தேப் அவர்களும், இங்கிலாந்து பிரபுக்கள் சபையிடம் விண்ணப்பித்தார்கள். ஜூலை 19, 1854 அன்று கல்வித்துறைத்தலைவர் உட் அவர்களின் ஆலோசனை குறிப்பிடத்தக்கது:’...நான் பல்கலைக்கழகங்களை வரவேற்கிறேன். அதை விட முக்கியம், அதை அத்யாவசியம் என்போர்களின் ஆதரவு தேவை... தாங்களே ஏற்பாடு செய்து கொண்டால் தப்பில்லை. நாமே நம்மை குறை கூறுவோர்கள், எதிர்ப்பாளர்கள், முணுமுணுப்போர் ஆகியோரை வளர்ப்பானேன்?...’. பாயிண்ட் அன்மேட். கல்கத்தா பல்கலைக்கழகம் தான், பிரிட்டீஷாரை குறை கூறுவோர்கள், எதிர்ப்பாளர்கள், முணுமுணுப்போர் ஆகியோரை உற்பத்தி செய்தது! ~ கொல்கொத்தாவிலிருந்து கபூர்தலா வரை.
ஆம். அதனுடைய ஆளுமை பரவி இருந்தது. பம்பாயிலிருந்து 2 லக்ஷம் நன்கொடை வந்தது. மாடல், லண்டன் பல்கலைக்கழகம். மதராசிலும், பம்பாயிலும் பல்கலைக்கழகங்கள் அமைப்பது, உறுதியானது. தீர்க்கதரிசனத்துடன், ஒரு முக்கியமான ஆலோசனை, திரு வுட் அவர்களின் மடலில்: ‘எக்காரணம் கொண்டும், மதம் சார்ந்த பட்டப்படிப்புகள், பரிக்ஷைகள் இருக்கக்கூடாது.’
சட்டமன்றத்தில் நிறைவேறிய பல்கலைக்கழகச்சட்டம் (சட்டம் II of 1857) கவர்னர் ஜெனரலின் ஒப்புதலை ஜனவரி 24, 1857 அன்று பெற்றது. 40 சான்றோர்கள், ஸ்தாபன அங்கத்தினர்களாக, அறிவிக்கப்பட்டனர்.
டைம்லைன்:
1857: முதல் நுழைவு தேர்வு;
1858: முதல் பீ.ஏ: பங்கிம் சந்திர சட்ற்ஜி & ஜாது நாத் போஸ்;
1861: முதல் எம்.ஏ;
1886: ‘இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் ஒரு மேல்மட்ட கல்லூரியை தான் அமைப்பதாக நினைத்தார்கள். அமைக்கப்பட்டதோ, மக்களுக்கான கலாசாலை.’ ~ ஹென்ரி சம்னர் மெயின்: துணை வேந்தர்.
1868: பம்பாய் கோடீஸ்வரர் ப்ரேம்சந்த் ராய்சந்தின் பரிசிலை முதலில் பெற்றவர் அஷுடோஷ் முக்கோபாத்தியாயா: வங்காளத்தின் தவப்புதல்வன். பிற்காலம் பல்கலைக்கழகத்தின் நீண்டகால துணைவேந்தர். பின்னர் அவருடைய மகனார், ஷ்யாம்பிரசாத் முக்கர்ஜியும் (33 வயதில்). அவர்களை பற்றி பக்கம், பக்கமாக எழுதலாம்.
1882 வரை: கிட்டத்தட்ட இந்திய அளவில் பரந்த ஆளுமை;
1890: முதல் பெண் பட்டதாரிகள்:காதம்பினி கங்குலி & சந்திரமுகி பாசு.
1937: குருதேவ் ரபீந்தரநாத் தாகூர் பல்கலைக்கழகத்திற்க்காக, இரு பாடல்களை இயற்றினார். பங்காலியில் வருடாந்திர உரையாற்றினார்.
2009: இந்திய பல்கலைக்கழகங்களில், மேன்மையில், இதற்கு மூன்றாவது இடம்.
இன்னம்பூரான்
24 01 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment