அம்மா சொல்படி ராஜூ: (நெடுங்குறிப்பு:1) பகுதி 21: 5 11 2009
இணைப்பு 1
நெடுங்குறிப்பு: 1
பொது:
விளக்கம் தர, விவரமான குறிப்புகள் எழுதியிருந்தாலும், தடம் மாறுமோ, என்னை முன்னிலையில் வைத்துவிடுவோனோ என்ற அச்சத்தில், அவற்றை சுருக்கினேன். அவ்வப்போது, ஒரு நெடுங்குறிப்பு உதவலாம், என இந்த இடுகை. அரும்பதவுரைக்கு, ஒரு glossary அமைக்கப்படும். அது வரை, தக்க பதவுரையை இடுகைகளில் தர முயலுவேன். வாசகர்களின் feedback சீர் செய்யவும், புரிய வைக்கவும் உதவும்.. குற்றம் குறைகள் இருந்தால், தயை கூர்ந்து, சொல்லவும். இப்போ அம்மா மின் தமிழின் கர்ப்பத்தில்னா வாசம் பண்றா.
அம்மா கிட்டத்தட்ட எழுபது வருட வாழ்வை - அவளுக்கு நினைவு வந்ததிலிருந்து நான் ஓய்வு பெறும் வரை - எழுதியிருக்கிறார். தொடர்ந்தும், காலம் தாழ்த்தியும், சுருக்கியும், விரித்தும், எழுதியதாக தோன்றுகிறது. சில விஷயங்கள் போக, போகத்தான் புரியும். கடவுளைப்பற்றியும், அமானுஷ்யத்தைப் பற்றியும் அம்மா ஆங்காங்கே குறிப்பால் உணர்த்தியுள்ளாள். காத்திருந்து நோக்குக. சில விஷயங்கள் இங்கேயும் பேசப்படுகின்றன.
சுற்றம்
அம்மா ‘என் அப்பா’, ‘என் புருஷன்’, ‘பெரியவன்’ என்று தந்தை ஸ்ரீ ரெகுநாத தாத்தாச்சாரியர் அவர்களையும், ‘பட்டப்பா’, ‘தேசிகன்’, ‘ஐ.எஸ்’ என்ற பெயர்களுடன் வரும் கணவன்
ஸ்ரீ. ஐ.எஸ். ஸ்ரீநிவாசன் அவர்களையும், ‘ராஜூ’, ‘பெரிய ராஜூ’ என்ற என்னையும் பெயர் சொல்லாமல் குறிக்கிறார். அவரது வாழ்க்கையில் இந்த மூவரும் தான் பெரிதும் இயங்கியவர்கள். பெயர் கூறா மர்மம் அறியேன். எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லப் பெயர்கள், காரணப்பெயர்கள், கேலிப்பெயர்கள் உண்டு. அப்பா ‘ரூத் (Ruth) ருக்மிணி’ என்று சொன்னால், குஷி அல்லது கிருத்துவ மத போதகர் வியர்த்தமாக (வீணாக) வந்து விட்டுப்போனார் என்று பொருள். எனக்கு ‘போக்குவரத்து சுப்ரமண்யம்’ என்றும் ஒரு பெயர். அடுத்தவள் ஜெம்பகத்திற்கு சில சமயம், ‘கணக்கு ராணி’ என்று பெயர். அடுத்து வந்த ரெகுநாதனுக்கு, ‘நமுட்டு விஷமம்’ என்று பெயர். சத்தமில்லாமல் க்ருத்திரமம் (விஷமம்) செய்வான். அடுத்தவள் கமலா, சவலை/ நீலி. குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தால், மூத்தது ஏங்கும். இளையதும் அடம் பிடிக்கும். அது தான் சவலை; இவள் அழுதால், மூச்சு நிற்கும்; உடல் நீலம் பாரிக்கும். (ரத்த ஓட்டம் தடை படுவதால், உடல் நீல நிறம்.) வீடே surrender. அடுத்தவன் பார்த்தசாரதி கள்ளுளி மங்கன் (பேசாமல் கழுத்தறுப்பான்). களைத்து போய் விட்டோமோ என்னவோ, பிறகு வந்த சந்திரா, முரளி என்ற ஜெகன்னாதன், ஹேமாவுக்கு செல்லப்பெயர்கள் இல்லை. சந்திராவை இப்போது நான் ‘அவ்வையார்’ என்று கூப்பிடுவேன். பார்த்தசாரதி, ரகு, ஜெம்பகம் ஆகிய மூவரை இழந்து விட்டோம்.
எந்தை தந்தை ‘இன்னம்பூர் சிங்கம்’ ‘பட்டாமணியம்’ (village chieftain) ஸ்ரீ. செளந்தரராஜ அய்யங்கார். ஊரை இரண்டு பன்ணுபவர்கள் அவருக்கு பக்ஷணம். அவர்களை மூன்று/ நான்கு கூறாக்கிவிடுவார்! பிறகு, நார், நாராகக் கிழித்து விடுவார். அவருக்கு ஒரு அனுபந்தம். (இணைப்பு) என் தந்தையோ இளகிய சிங்கம்! உணர்ச்சிப்பிரவாகம். 1 அத்தைகள், வேதம், நாமு, கோமளம் நன்முத்துக்கள். கோமளம் என்னை ஆளாக்கினவள். அவளுக்கும் ஒரு அனுபந்தம்,
பார்த்தசாரதி:
அவன் வந்ததும் போனதும் புரியவில்லை. புதுக்கோட்டையில் புதுக்குளம் என்றொரு பெரிய குடிநீர்க்குளம். சுற்றி ஓடினால் ஒரு மைல். அது தான் எனக்கு தேஹாப்பியாஸம், அதி காலையில். ஒரு நாள், 4/5 வயதான பார்த்தசாரதியும் கூட வந்தான். அருகில் இருந்த சுடுகாட்டிலிருந்து ஒரு ஜடாமுனி வந்தார். நான் அஞ்சினேன். அவர் வானை நோக்கி ‘இவன் இந்த நக்ஷத்திரம் போல் ஜொலிப்பான்’ என்றார். இன்னும் ஜொலிக்கிறானோ?
இந்த கள்ளுளிமங்கன், ஒரு நாள் பெந்தகோஸ் என்ற கிருத்துவ சபையில் ஐக்யமாகி விட்டான். திருப்புவது பெரும்பாடாகி விட்டது. இவன் உசிலம்பட்டியில் படித்த கத்தோலிக்க பள்ளியில் ஸ்கேலால் தலையில் அடித்தார்கள் என்று அங்கு போவதை நிறுத்தி விட்டான். கன்யாஸ்த்ரீகள் வீட்டுக்கு வந்து கெஞ்சினார்கள். ஐயா ‘நோ’ என்று விட்டார். அருமையாக இங்கிலீஷ் பேசுவான்: அஃபா, என்றால் அப்பா; ஃபென்சில் என்றால் பென்சில்! பாளையங்கோட்டையிலலிருந்து, அப்பாவை தஞ்சாவூருக்கு மாற்றி விட்டார்கள், எனக்கு ஜுரம் வந்த அன்று. இவன் ஏதோ பழைய பாடப்புத்தகங்களை வாங்கி வந்துவிட்டான். (தமிழ் பாடம் இன்றும் என்னிடம் உள்ளது; மின்னாக்கம் செய்யத் தகும்: 1948). அப்பா, ‘என்னடா! மாற்றல் ஆன சமயத்தில்’ என்றார். மறு நாள் அதையெல்லாம் விற்று விட்டு, அப்பாவிடம், ‘இந்தா உன் பணம்’ என்று கொடுத்தான். வயது 10. அன்று படுத்தவன் எழுந்திருக்கவில்லை. எந்த ஊர் கணக்கு இது? அப்பா கடைசி வரை இதை சொல்லி கண்ணீர் சிந்துவார். அவருக்கு புத்திரசோகம் தீரா வியாதி. அம்மாவோ அசலம். (அசையா மலை; உதாரணம்: அருணாச்சலம்).
கடவுளும், அமானுஷ்யமும்:
புதுக்கோட்டையில் ஒரு சமயம் குழந்தை சந்திரா இரத்த பேதியால் சாகக்கிடந்தாள். அப்பாவுக்கு தெரிந்த மருந்துக்கடைக்குப் போனேன். அங்கு ஒரு சாமியார். அவர் ‘ஏ’ ‘பி’ என்று சில பொட்டணங்கள் கொடுத்தார். அன்றே குணம். மருந்துக்கடை மாமா, சாமியாரைப்பற்றி கேட்டால், மழுப்புவார். சில மாதங்களுக்குள்ளோ என்னமோ, சரியாக நினைவு இல்லை, மாமாவுக்கு பேதி. போய் சேர்ந்தார். ஏன் இந்த விசனம்?
மூன்று சகோதர்களும் ஆஸ்பத்திரியில் கிடந்த போது, கத்தோலிக்க துறவிமார் வருவார்கள். ஃபாதர் ஜாலி என்பவர், ‘Trust in God; Trust Absolutely’ என்று சொல்லிக்கொண்டே வருவார். வார்டே முறுவலிக்கும். ஒரு இஸ்லாமியர் எங்களுக்கு துவா (ஆசி) வழங்குவார். பார்த்தசாரதியின் படுக்கையில் ஒரு காலேஜ் பையனை சேர்த்தார்கள். அப்பா அங்கே வேண்டாம் என்று கெஞ்சினார். வேறு இடமில்லை. அவன் தந்தை ஒரு கத்தோலிக்கர். கேரளாவில் பிரபல வக்கீல். தினந்தோறும் என் படுக்கைக்கு வந்து சத் விஷயங்கள் சொல்வார். மத போதனை செய்யவில்லை. It is he, who cast my moral fibre. அவர் கொடுத்த நூல்கள் என் வம்சாவளிக்கும் உதவியன. பல வருஷங்கள் தொடர்பில் இருந்தார். அவரது பையன் பிழைக்கவில்லை. அவரது மனைவி வரவில்லை. அப்போது தான் அவளுக்கு ஒரு குழந்தை. அவரது மனோதிடத்தைப் பார்த்து, பாளையங்கோட்டையே வியந்தது. ஒரு சமயம் நான் டில்லி போனபோது, ஒரு பிரபல வக்கீல் வந்து என்னைப் பார்த்தார். அவர் தான் அந்த குழந்தை. அவர் குடும்பம் என்னை தான் மூத்த மகனாக கருதியது என்றார்.
அம்மா தெய்வநாயகம் பிள்ளையைப் பற்றி சொன்னது சரியே. வீட்டில் அம்மை போட்டிருக்கிறது. வெளியில் போகக்கூடாது என்று மரபு. வீட்டின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் டோனாவூர் வந்தார். அவர் வந்து நின்றாலே, சாந்தி நிலவும். துள்ளி வருவது வேல் அல்ல. சாக்யமுனியின் ஒளி வட்டம். பல வருடங்களுக்கு பின், ஒரு முதிய அந்தணரைப்போல சென்னை வந்தார். குடும்பத்துடன் சென்று அவரை வணங்கினேன். அவர் சொன்னார், இவர் தான் எனக்கு ‘முத்திரை’ போடுவார் என்று. நெல்லைச்சீமையில் சிறுவர்களையும் பன்மையில் தான் குறிப்பிடுவார்கள்.
டோனாவூரில் 40 வது நாளாக நினைவு இழந்து கிடந்த கமலா ஒரு நாள் காலை (ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் புரிந்தது) இட்லி, மிளகாய் பொடி கேட்டாள். வேறு ஒன்றுமில்லை. கத்தோலிக்க கன்யாஸ்திரீக்கள் கொடுத்த ஸிஸ்டர் (now Saint) அல்ஃபான்ஸாவின் உடையின் ஒரு சிறிய துண்டு கொடுத்தார்கள். அதை தலையணைக்கு அடியில் வைத்தேன், முந்திய இரவில். டோனாவூரோ ப்ராடெஸ்டெண்ட் மிஷன். அவர்கள் சிரித்தார்கள்.
அங்கும் ஒரு கடவுள். ஆண்கள் அண்ணாச்சி, பெண்கள் அத்தை. வாடகை ஒரு ரூபாய் ஒரு நாளுக்கு, அதுவும், ஒரு குடிலுக்கு; சின்னத்தோட்டம் வேறே. பணக்காரனுக்கு ஒரு சார்ஜ்; ஏழைக்கு ஒரு சார்ஜ். இமாலயம் ஏறிய டாக்டர் சோமர்வில், நெய்யூரிலிருந்து அங்கு வருவார். கண்டிப்பாக, வாராவாரம் பில் செட்டில் செய்யவேண்டும். ஒரு வாரம் பில் ரூபாய் 281 போல. நினவு இல்லை. ‘ராஜூ! ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாய்?’ என்றாள் ஜெர்மானிய நூரானி அத்தை. ‘பணம் இல்லையே’ என்றேன், கண்ணில் நீர் துளிக்க. 15 வயது. ரோஷக்குடும்பம். பில்லை வாங்கிக்கொண்டே, செட்டில் செய்யணும் என்று சொல்லி, பில்லை திருப்பிக்கொடுத்தார். பில்லில் 2, 8 அடிக்கப்பட்டு, 1 மட்டும் தான் இருந்தது. ஒன்றோ, ஒன்பதோ. அது பாயிண்ட் அல்ல. நான் சொன்னேன், ‘அத்தை! இதை வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். எல்லாரிடமும் சொல்வேன்’ என்று. அம்மா சொல்படி, உங்களிடமும் சொல்லிவிட்டேன்.
நேயம் தமிழில் இருந்தால் என்ன? வடமொழியில் இருந்தால் என்ன? ஹீப்ரூவில் இருந்தால் என்ன? கடவுள் எங்கே இருக்கிறான்? தெய்வநாயகம் பிள்ளையும், நூரானி அத்தையும், இடம், பொருள், ஏவல் என்று பேசப்பட்டால், தெய்வம் இல்லையா? ஜடாமுனியும், மருத்துவ சாமியும், ஸைண்ட் அல்ஃபான்ஸாவும், அமானுஷ்யரா? . அது சரி, அமானுஷ்யத்திற்கு தமிழ் என்ன?
பார்த்தேளா? குறிப்பு நீண்டே விட்டது. நானும் பேச ஆரம்பித்து விட்டேன். இது நிற்க.
இன்னம்பூரான்
குறிப்பு 1: அப்பா எனக்கு ‘Home They Brought Her Warrior Dead’ [Alfred Tennyson], ‘Ye know, We stormed Ratisbon’ [Robert Southey], ‘We are Seven’ [Oliver Goldsmith] சொல்லிக்கொடுத்து இருக்கிறார். முடித்தது இல்லை. உணர்ச்சி வசப்படுவார்.