Friday, February 10, 2017

தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? - மறுமொழி



தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? - 
மறுமொழி


இன்னம்பூரான்
10 02 2017

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=74976 10 12 2017

வல்லமை இதழாசிரியரின், ‘தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்?  என்ற கட்டுரை சிந்தனையை தூண்டுவது மட்டுமல்லாமல், கடந்த கால நினைவுகளை அசை போட செய்கிறது. நிகழ்காலத்தைக் கண்டு கலங்க வைக்கிறது. வருங்காலத்து பற்றிய கவலைகளை அதிகரிக்க வைக்கிறது. ஒரு வரி பதில் எளிது. தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது தமிழர்கள் மட்டுமே என்று முரசு கொட்டலாம்; அல்லது பிலாக்கணம் பாடலாம். இரண்டுமே தவறான அணுகுமுறை. முதற்கண்ணாக, பவள சங்கரி, 

’எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன?’ 

என்று எழுப்பும் வினாவை பற்றி சற்றே விலாவாரியாக அலசுவோம். ‘கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று வரும் திங்களுக்குள் தெரியபடுத்தவேண்டும் என்று உயர் நீதி மன்றம் இப்போது (காலை 11 மணி: 10 2 2017) கேட்பதே சாமான்ய மக்களின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. நேற்று என் தொலைக்காட்சி இயந்திரம் பழுது பட்டு இருந்ததால், நிம்மதியாக இருந்தேன். பின்னர் பல அவலக்காட்சிகளை கண்டு மனம் வெதும்பினேன். நான் கட்சி சாராதவன் மட்டுமல்ல; பிரகாசம் காரு முதல் ஜெயலலிதா வரை நடந்த அரசியல் காட்சிகளை நேரில் கண்டவன். 1969ம் வருடம் வீழ்த்தப்பட்ட தமிழனின் நற்பண்பு இன்றும் மிதிபட்டுத்தான் கிடக்கிறது. மூலகாரணம், தமிழனின் தரம் குறைந்தது தான்.

“.. மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே!...”

சட்டை போடாத சா.கணேசன் என்ற தேசபக்தன் ஒருவர் இருந்தார். ‘பணம் கொடுத்து வாக்கு வாங்கும் பணநெறியை இந்தியா கண்டதன்று’ என்ற அந்த சான்றோனின் வாக்கு பொய்த்து விட்டதே! இரண்டு திராவிடகட்சிகளும் செல்லாத நோட்டும் செல்லும் நோட்டுமாக அள்ளிக்கொடுப்பதை ஏற்கும், ‘திரு அமங்கலம் புகழ்’ தமிழன் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர் மக்களின் மனநிலையை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அவரவர் பிழைக்கும் வழியை இலக்காக வைத்துத்தானே மக்கள் முதலீடு நடந்தது. எனவே, இதழாசிரியரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது!

‘இந்த நாடு எப்படி விளங்கும்? ‘

மெத்த கடினம். ஜனம் நாயக பொறுப்பை தாமதமானால் கூட, கல்லும், முள்ளும் ஆன பாதையில் நடந்து, லஞ்சம் வாங்காமல் நிறைவேற்ற முயன்றால் கூட போதும். வெற்றி நமதே.

மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே!

மனித உரிமை கமிஷன் தலையிட வாய்ப்பில்லை. அது விலை போனதாக தோற்றமில்லை.

‘பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.’

இதழாசிரியரின் இந்த கருத்தை பிட் நோட்டீஸ் அடித்து, பட்டி,தொட்டி எங்கும் பரப்பவேண்டும். ஃப்ளெக்ஸ் பதாகைகள் கூட வைக்கலாம். தலைப்பு: ஏமாறதே! ஏமாறாதே!

‘இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.’

கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக, இந்த அவல நிலை, தமிழ்நாட்டில்.

அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள். 

ஆம். அவர்கள் நிழல் யுத்த மன்னர்கள்.

விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது. 

இங்கு ஒரு ஐயம் எழுகிறது. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்கோலத்தை பொதிகையில் காண்பித்தார். அது வேளாண்மை பிராந்தியம்; கிராமீயம். ஆனால் ஜல்லிக்கட்டு வரவு செலவு லக்ஷக்கணக்கில். எங்கிருந்து அந்த பணம் வந்தது? விவசாயம் நன்கு நடைபெற்றால், தரகு ஒழிந்தால், விவசாயிகள் செல்வந்தர் ஆகலாம். அப்படியா, ஜல்லிக்கட்டார் திரவியம் சேகரித்தனர்? அப்படியானால், விவசாயிகள் ( ப.சிதம்பரம் போன்ற காஃபி எஸ்டேட்டார்) வருமான வரி கட்டலாமே! 
இந்த ஏறு தழுவதல் மற்ற ஜாபிதாவுக்கு சால்ஜாப்பு. வாடிவாசலில் மிரட்டப்படும் காளைகள் பீதியில் ஓடி வர, இளந்தாரி ‘வீரர்கள்’ கும்பலாகப் பாய்ந்து அவற்றை துன்புறுத்துகின்றனர். இது சங்க கால பண்பாடு என்றால், அக நானூற்று பகற்குறியும், சங்க கால பண்பாடு தான். நம் வீராதி வீர, சூராதி சூர, தீராதி தீரர்கள் ஒரு வெம்புலியுடன் சண்டைப்போட்டு, ஒரு பெண்புலியை சம்பாதிக்கட்டுமே. 

பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? 

இது மக்களின் உதாசீனம் கலந்த நிர்வாக அலட்சியம்.

இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 

கேள்வி சசிகலாவுடனேயோ, பன்னீர்செல்வத்துடனோ, இந்த இழை நிற்கவில்லை. சிண்டு, கூடு விட்டு கூடு பாயும் நிலை. பின்ணணி வினா: அரசு மேலாண்மையை நிர்ணயிக்கும் தகுதியுடனா, மக்களின் பிரிதிநிதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் தன்னிச்சையாக இயங்குகிறார்களா? மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறார்களா? என்பதே.   இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் தன்மை வெட்கத்தால் தலை குனிய வைக்கிறது. தற்காலம், அது தொங்கலில் இருப்பதாலும், அசாதாரணமான தாமதத்திற்கு பின், சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கை உச்ச நீத் மன்றம் எடுத்துக்கொள்ளப்போவதாக சுட்டியதாலும், மவுனம் காக்கவேண்டியிருக்கிறது. எந்த கட்சி பதவியிலிருந்தாலும் வன்முறைக்கு பஞ்சமில்லை என்பதும் உண்மை.

ஒரு இறுதி வரி: தமிழா! உன் விதி உன் கையில் மட்டும் தான் இருக்கிறது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

















இன்னம்பூரான 

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, February 8, 2017

இதுவும் காதல் தானோ!

இதுவும் காதல் தானோ!

இன்னம்பூரான்
28 06 2014/07 02 2017
பிரசுரம்:http://www.vallamai.com/?p=74937

வனமாலி மஹாபாத்ரா பூரி ஜகந்நாத் கோயில் பண்டா (பூசாரி) ஒருவரின் மூத்தமகன். படிப்பெல்லாம் சொற்பம் தான். கோயில் மணி அடிக்க படிப்பு எதற்கு என்று அவருடைய தந்தை ஜகந்நாத் பண்டா, வனமாலியின் படிப்பை எட்டாங்கிளாஸ்ஸுடன் நிறுத்தி விட்டார். அது வரை விட்டுப்பிடித்ததே பெரிது. ஆனால், அவர் இவனை படிக்கவே விடமாட்டார். அதிகாலையில் தொடங்கும் பகவத் கைங்கர்யம் நடு நிசி வரை நீடிக்கும், பகவத் கைங்கர்யம் ‘கல கல’ என்று கனகதாரை பொழியும் என்பதால். எல்லா கோயில்களிலும் நாம் சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம் காண்கிறோம். சாமரம் வீசுவதிலிருந்து சடாரி சாதிக்கும் வரை, அபிஷேகம் செய்வதிலிருந்து ஆராதனை செய்யும் வரை, எல்லாமே சாஸ்திரோக்தமாக. இம்மி பிசகக்கூடாது. பிசகினால், பக்தியை மறந்த ஆயிரம் பிராமணோத்தமர்கள் ‘பிலு பிலு’ வென்று சண்டைக்கு வருவார்கள். பகவானை திரஸ்கரித்து கோயிலிலிருந்து வெளி நடப்பு செய்வார்கள். பரங்கி துரைத்தனத்தாருக்கு அநாமதேய புகார் மனு அனுப்புவார்கள். சார்! இது பழங்கதை. நூறாண்டுகள் ஆகப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதான் பரங்கி துரைத்தனத்தார். இத்தனைக்கும், அவன் மிலேச்சன்; கிருஸ்துவன்; குடிகாரன்.

திருப்பதி ‘மிராசு’ போல இங்கும் உரிமை பாராட்டும் பண்டா பிரமுகர்கள் உண்டு. பல ஆண்டுகளாக, பக்தகோடிகளின் அனுக்ரஹத்தால், இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. மயிலிறகு வைக்காமலே இவர்களது வங்கி சேமிப்பு புத்தகம் குட்டி போடுகிறது. அபரிமிதமான பொன்மாரி பெய்வதால், இவர்களது லேவாதேவி வியாபாரம் கந்து வட்டி அசுரகுட்டிகளை ஈன்றெடுக்கிறது. பகவான் ஜெகந்நாத் இந்த ஈனச்செயல்களை கண்டிக்கிறான். அவனை யார் கேட்டது? விவாஹ சுபமுஹூர்த்தில், அந்த பிள்ளையாண்டான் பெண்ணுக்கு மாங்கல்ய தாரணம் செய்யும்போது கெட்டி மேளம் கொட்டச்சொல்வதே, அமங்கல சொற்கள் காதில் விழாக்கூடது என்பதற்கு. இங்கே பகவானின் சொற்களை கேட்கக்கூடாது என்று தான் பயங்கர ஒலி தரும் கண்டாமணிகளை அடிக்கிறார்கள் போலும்!

இந்த சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம்,சாஸ்திரோக்தம் மட்டும் தான் பூரி ஜகந்நாத் கோயிலில் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். சொல்லப்போனால், அந்த பிராந்தியத்துக்கே எஜமானன்  ஜகன்னாதர் தான். எல்லார் வீட்டிலும் தவழும் குழந்தையும் அவரே. ஊழியம் நிமித்தமாக, நான் பூரி செல்ல நேரிடும் என்றாலும், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஜகன்னாதன் தரிசனத்துக்கு செல்வது உண்டு. இரவு கொடுக்கும் மஹா பிரசாதம் ஒரு படி சாதம். அங்கு விளையும் நெல்லை போரடிக்க யானை வேண்டும். அத்தனை அபரிமிதமான விளைச்சல் பூமி. அந்த பிரசாதத்தை இரண்டு நாள் சாப்பிடலாம். ஊரே சில நாட்கள் பொலிவு இழந்து கிடக்கும். கேட்டால், வருத்தத்துடன் அவனுக்கு ஜலதோஷம் என்பார்கள். காலையில் பல் தேய்த்து விட்டு, முகம் அலம்பின பின் கஷாயம் கொடுப்பார்கள். குழந்தை ஜகன்னாதன் குடிப்பதாக பாவனை செய்வதால், பண்டா மனது வைத்தால், நமக்கு அருமருந்து பிரசாதமாகவும் கிடைக்கும். கறாராக தக்ஷிணையும் வாங்கி விடுவான். கோயிலுக்கு எதிரே மிகவும் அகலமான கிராண்ட் ரோடு. திருவிழா அன்று லக்ஷோபலக்ஷம் மக்கள் வடம் பிடிக்க, அண்ணன் பலபத்ரன், ஜகன்னாதன், தங்கை சுபத்ரா மூவருக்கும் தனித்தனி தேர். சாலையின் அடுத்த முனையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகும் காட்சி அபாரமாக இருக்கும். கண்டாமணி சத்தம் வானை பிளக்கும். பூரி மாஜி மகராஜா தங்க விளக்குமாறால், தேரின் தளத்தை சுத்தம் செய்த பின், கலெக்டர், மந்திரிமார், முதல்வர் எல்லாரும் கும்பிட்ட பின். ஆடி , அசைந்து, அந்த மூன்று தேர்களும் செல்வது கண்கொள்ளா காட்சி. அத்தை வீட்டில் கொம்மாளம் அடிக்கப் போராங்களாம்!

தொடரப்போவது: நான் கடவுளை பார்க்கப்போன படலம்.

சித்திரத்துக்கு நன்றி: