‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:1
மடல் இலக்கியத்தின் தனித்துவம் நிகரற்றது; அறிவுரையும்,ஆளுமையும், கனிவும் இயல்பாகவே, ‘கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போல’ ரசவாதமாக கலந்தோடி வரும். மூதுரையில் ஒளவைப்பாட்டி உவமையாக எடுத்துரைத்த தாழம்பூவைப் போல நறுமணத்தின் உறைவிடமாகவும் மகிழம்பூவைப்போல மணம் தெளிப்பதாகவும் கடிதங்கள் அமையலாம். மடலிலக்கியத்தினூடே வம்பு பேசலாம்; குசலம் விசாரிக்கலாம்; அதட்டலாம்; சிந்தை செய்யலாம்; அறிவுரை அள்ளி வழங்கலாம். மனம் போனபடி எழுதும் கலையை வளர்க்கலாம். எல்லாம் செல்லுபடியாகும்.
‘மடல்பெரிது தாழை மகிழினிது’ என்ற தலைப்பில் துவக்கப்படும் இந்த இழை மடல்/கடிதம்/லிகிதம் என்ற வகையில் அமையும் இலக்கிய விசாரணை என்க. தந்தையிடம் பணம் கேட்டு எழுதும் கடிதம், காதல் கடிதம், மாதவி மடல், அம்மாவிடம் சிபாரிசு கோரும் கடிதம், இலக்கிய விமர்சன கடிதம், அரசியல் கடிதம், அநாமதேயக்கடிதம் எல்லாமே இங்கு இடம் பெறும். ஒரு விதத்தில் பார்க்கப்போனால், ‘... ஸுபாஷிணி எழுதி வரும் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் பற்றிய தொடர் ஒரு நல்ல முன்னுதாரணம். ..’ எனலாம்’. என்று அன்று சொன்னது, இன்று எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் (28 10 12) நான் நாவன்னா காவன்னாவுக்கு எழுதிய மடல்:
‘என் புரிதல் படி மின் தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளையின் தோழி, பணிப்பெண் ஆகவும் அன்றாடம் இயங்கினால் நல்லது. மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களையும், மற்ற பதிவுகளையும் ஆய்வு செய்யலாம். நூல் மதிப்பீடுகள் காணக்கிடைப்பது, அரிதாக இருக்கிறது. அந்தக்குறையை நீக்கலாம். மற்ற மொழிகளிலிருந்து நல்வரவுகள், மொழியாக்கங்கள், சமுதாய முன்னேற்றம் ஆகியவை இடம் பெறலாம். மாணவர்கள் விரும்பும்/ அறிந்து கொள்ள வேண்டிய இடுகைகள் இடம் பெறலாம். ஸுபாஷிணி எழுதி வரும் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் பற்றிய தொடர் ஒரு நல்ல முன்னுதாரணம். நாம் லண்டனில் கூடி பேசிய பொழுது, அன்றாடம் புதிய/ தரமுயர்ந்த பதிவுகள் நாட்தோறும் இடம் பெறவேண்டும் என்ற ஆவலை நான் தெரிவித்தது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்’. நேற்று புத்தாண்டு வாழ்த்துக்கள் வழங்கிய ஸுபாஷிணியின் இலக்கும் இவ்வாறு தான் அமைகிறது என்று தோன்றுகிறது.
நம் நண்பர் திரு.நரசய்யா கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக கிருத்திகாவும் சிட்டியும் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் ஆத்மாவை 2011ல் பிரசுரித்ததை யாம் அறிவோம். அதனை ஒரு நாள் எடுத்து நம்மில் ஒருவர் இங்கு இலக்கிய விசாரனை செய்யலாமே? இன்று புத்தாண்டு தினம். அதன் பொருட்டு, புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, ஒரு மீள் பதிவு. இந்த இரு மடல்களும் அமர காவியங்கள். குழந்தைகளுக்கு சூதுவாது தெரியாது. அவர்கள் பாராசாரி புரவி போல வெகு வேகமாக பல விஷயங்களை அறிந்து கொள்வது, வினா-விடை தடம் தான் அவர்களுக்கு ராஜபாட்டை. சிறார்களுடன் மடலாடுவது அக்காரவடிசல் உண்பது போல. தித்திக்கும்.
*
‘அன்பார்ந்த ஆசிரியருக்கு,
எனக்கு வயது எட்டு. என்னுடைய சின்ன நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து, ஸாண்டா க்ளாஸ் இல்லை என்கிறார்கள். என் அப்பாவோ, உங்கள் இதழில் ஸாண்டா க்ளாஸ் நிஜம் என்றால் நிஜம் என்கிறார். உண்மை என்ன?
வர்ஜீனியா ஓஹான்லன், 115 , மேற்கு 95 வது தெரு…’
*
வர்ஜீனியா,
உன்னோட ஃப்ரெண்ட்ஸ் சொல்றதெல்லாம் தப்புடா, செல்லம். காலம் கெட்டுக்கிடக்கு, பாரு. எதையும் துருவித்துருவி கேட்டுப்பிட்டு, எதையும் நம்பாத கலி காலம், பாப்பா. உன் கண்ணால் பாத்தியா அப்டினு கேப்பானுக. சிறிசுகள் தானே. அவா மனசுக்கு எட்டாததை இல்லேன்னுடுவா. வர்ஜீனியா! பெரியவாளோ, சின்னவாளோ, எல்லாருக்கும் சின்ன மனசு. இந்த பிரபஞ்சமோ பிரமாண்டம். இவனோ தூசி! அறிவு, ஞானம் எல்லாம் இவனுக்கு தம்மாத்தூண்டு!
ஸாண்டா க்ளாஸ் இருக்கார். வர்ஜீனியா! எங்கெல்லாம் அன்பும், உதாரகுணமும், பக்தியும் இருக்கோ, அங்கெல்லாம் அவர் இருக்கார். அந்த மூணும் தான் அழகு தரது ~ குஷிப்படுத்தறது. நோக்குத் தெரியுமே, அந்த பிரகலாதன் கதை! அன்னிக்கு சாலியமங்கலத்திலெ பாகவத மேளா பார்க்க போனோமே, ஞாபகம் இருக்கோ. நீ தானே அன்னிக்குக்கேட்டே, ‘தூண்லெ மட்டும் தான் பெருமாள் இருப்பாரா’ என்று. எல்லாரும் சிரிச்சவுடனே, உனக்கு ‘ஷை’ ஆயிடுத்து. ஸாண்டா க்ளாஸ் இல்லேன்னா, லோகமே பேஸ்து அடிக்கும், பாப்பா!, ‘வர்ஜீனியா இல்லேங்கிறமாதிரி!’ அப்டி சொல்ல விட்றுவோமா? எப்டிருக்கு நான் சொல்றது? குழந்தை மாதிரி நம்பிட்றது, பாட்டு, கூத்து, ஜாலி, ஒண்ணுமே இருக்காதே, அம்மா! என்ன! நான் சொல்றது! என்ஜாய் பண்ண முடியாது. கண்டதே காட்சி; கொண்டதே கோலம்னா போரடிக்கும். இந்த லோகத்துக்கே விளக்கு ஏத்தறது மழலையின் கீதம். அதை அணைச்சுட்டா, என்னம்மா பண்றது?
ஸாண்டா க்ளாஸ் மேலெ நம்பிக்கை இல்லெனா, தேவதைகளை நம்பமாட்டே. நீ வாணாலும் அப்பாட்டெ சொல்லி கூலிக்கு ஆள் பிடிச்சு, புகைப்போக்கி சிம்ணி, மொட்டை மாடி, பரண், மச்சு, எல்லா இடத்திலும் தேடச்சொல்லு. என்ன தெரியும்? அவா கண்ணுக்கு அவர் படலை. அவ்வளவு தான்! அவர் இல்லென்னு ஆயிடல்லையே! புரியறதா? நான் சொல்றேன். கேளு. இந்த லோகத்திலெ நிஜத்தைப் பாக்கறது தான் கஷ்டம். பசங்களுக்கும் கண்லெ படாது பெரியவாளுக்கும் கண்லெ படாது. ஆமாம். நீ என்ன தேவதைகள் நம்மாத்து லான் புல்லுமேலே டான்ஸ் ஆடி பாத்திருக்கையா? அதனால அது இல்லெனா எப்டி? நான் சொல்றேன். கேளு. நாம பாக்காததையும், நம்மாலெ பாக்கமுடியாததெயும் இல்லென்னு அசடு தான் அடிச்சுப் பேசும்.
தம்பிப்பாப்பாவொட கிலுகிலுப்பையை பிரிச்சுப்போட்டு, எப்டிறா சத்தம் வருதுன்னு பாக்கலாம். ஆனா, இந்த லோகத்திலெ எல்லாத்தையும் ஏன் பாக்கமுடியலெ தெரியுமா? பனாரசி டிஷ்யூ புடவைன்னு வச்சுக்கோ, அந்த மாதிரி ஒரு தங்கத்திரை ஒண்ணு (ஹிரண்மயேன பாத்ரேண) போட்டு ஜிகுஜிகுன்னு மூடிவச்சுறுக்கா. கிங்க் காங்க் வந்தாக்கூட அதை விலக்கமுடியாது தெரியுமோ? நம்பிக்கை, கற்பனை, கவிதை, அன்பு, லவ்வு அதெல்லாம் வந்தாத் தான், இந்த ஜிகு ஜிகு திரையை விலக்கி ஆனந்தமய கோஷத்தை திவ்யதரிசனம் பண்ணமுடியும், வர்ஜீனியா. நான் ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ. இதுக்கு மேலெ நிஜம்னு,சாஸ்வதம்னு ஒண்ணுமே கிடையாது.
ஸாண்டா க்ளாஸ்ஒம்மாச்சிக்கு தேங்க்ஸ் சொல்லுடா, செல்லம். ஸாண்டா க்ளாஸ் மார்க்கண்டேயனாக்கும். பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு, அவர் சூப்பர்மார்க்கெட், ஒண்டாரியா மால், சர்க்கஸ், மலைக்கோயில்,ஆம்னிப்ரெஸெண்ட். பெரிய சாக்குமூட்டையெல்லாம் எடுந்திண்டு வந்து குழந்தைகளை குஷிப்படுத்துவார். அப்றம் டிஸெம்பர் 24 அர்த்தராத்ரிலெ, ஆகாசத்திலெ ஊர் சுத்துவார், சக்கரை அம்மாள் மாதிரி. சிம்ணி வழியா இறங்கி வந்து, நீயும், நானும் நட்டு வச்சோமே, அந்த கிருஸ்த்மஸ் மரத்திலெ, உனக்கு கிஃப்ட் எல்லாம் கட்டி வைப்பார்.
என்னை கேட்டா, அவர் தினோம் வரணும். நீ என்ன சொல்றே?
-#-
இன்னம்பூரான்
ஜனவரி 1, 2015