அன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/af/Gandhi_Rajagopalachari.jpg
இன்னம்பூரான்
அப்டேட் 2013:
மன்னிக்க வேண்டும் 24 மணிக்கு மேல் தாமதம். பல கவலைகள், இன்னா இண்டெர்நெட் உள்பட.
26 பின்னூட்டங்கள் ஓடி ஓடி வந்ததால், பாகம் பாகமாக தான் பிரிச்சு தரணும். இல்லாட்டா யார் படிப்பா? எனக்கும் தலைக்கு மேலே ஜோலி!
யாராவது இந்த கடுதாசை தமிழ்நாட்டு பிரதமர் கிட்ட காட்டுங்களேன். ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் வந்திருக்காப்லெ இருக்கு. நமக்கும் சுபிக்ஷம் வேணுமோல்லியோ. Que Sera Sera.
இன்னம்பூரான்
25/26 12 2013
அன்றொரு நாள்: டிசம்பர் 25
தீனபந்து
உலகெங்கும் விழாக்கோலம் பூண்டு, நல்லிணக்கம் வழி காட்ட, கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வேளையில், ஒரு மன அழுத்தம். பெரியவரின் உடல் நிலை கவலை தருகிறது. நினைவு தவறும் முன் ‘வலி ஒன்றும் இல்லை; ஊசிகளை எடுத்து விடுங்கள்; நான் நிம்மதியாக இருக்கிறேன்‘ என்று அவர் சொன்னதை, கிளிப்பிள்ளை மாதிரி, திருப்பித்திருப்பிச்சொல்லி மாய்ந்து போனார், டாக்டர்.சத்யநாராயணா. அந்தக்காலத்தில் பொதுஜனங்களின் போக்குவரத்துக்கு தடை ஒன்றும் ஜபர்தஸ்தாக விதிக்கமாட்டார்கள். ஆஸ்பத்திரியோ சென்னை ஜெனெரல் ஆஸ்பத்திரி. ‘இனி அவருடைய தரிசனம் உனக்கு இருக்காதோ? என்னமோ’ என்று சொல்லி என்னுடைய டீனேஜ் பையனையும் இழுத்துச்சென்றேன். ஒரே கூட்டம். பெரியார் போன்ற பெருந்தலைகளும், என் போன்ற சாமான்யர்களும். மயான அமைதி. ஆங்காங்கே சின்ன சின்ன கூட்டங்கள். மெல்லியகுரலில் பேச்சுகள். டாக்டர்.சத்யநாராயணா வந்து நின்றார், தாரை தாரையாக நீர் வழிய. பேச வாயெடுத்தார். முடியலை. கூட்டம் கலைந்தது. சாயங்காலம் ராஜாஜி ஹாலில் தரிசனத்திற்காக வைத்திருந்தார்கள். லேசாக தூறல் என்று ஞாபகம். காமராஜர் நெரிசலுக்கு மத்தியில். மறு நாள்குடும்பத்தினர் சில சடங்குகளை செய்தபின், முப்படை வீரர்கள் கை கட்டி, வாய் புதைத்து, வலிவிழந்த துப்பாக்கியை உள்பக்கமாக அணைத்து, ராணுவமரியாதையுடன், ராஜாவோல்லியோ, படோடாபமாக, பீரங்கி வண்டியில் வைத்து எடுத்துச் சென்றனர், வல்லிக்கேணி மயானத்திற்கு. ஓட்டமும், நடையுமாக ஒரு பெருங்கூட்டத்தில் நானும், பின் சென்றோம். தீனபந்து அல்லவோ அவர். அதான், எல்லாரும் வாய்க்கரிசி போட்டோம். நன்றாக நினைவு இருக்கிறது. எனக்கு முன்னால் போட்டது திரு. மு.க. பெரியார், கலங்கிய முகத்துடன், ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். ஜனாதிபதி கிரி வந்தார். இந்திரா காந்தி வரவில்லையே என்ற பேச்சு மெல்லியதாக எழுந்தது, மக்களிடையே. தஹனம். பெரிய பிள்ளையால் முடியவில்லை. வயசாயிடுத்தோலியோ. தள்ளாமை. சின்னவர் தான் எல்லாம் செய்தார். வீட்டுக்கு வந்தால், என் தந்தை அழுது கொண்டிருந்தார். எங்கள் தீனபந்துவுக்கு மூன்று தலைமுறை ஸ்நானம் செய்தது. தினம்:25 12 1972. பெரியவர்: ராஜாஜி. வயது:94. இத்தனை வருஷங்களுக்கு பின்னர் நினைவுறும்போது கண் கலங்கத்தான் செய்கிறது. சொல்றதுலெ வெட்கம் என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கு?
நேற்றைய ஹிந்து இதழில் அவருடைய பேரன் கோபால்கிருஷ்ண காந்தி உருக்கமாக எழுதியிருந்தார். ‘என் உள்மனது உமது ஆதரவை நாடுகிறது’ என்று காந்திஜி தன்னுடைய ‘மனசாட்சியாகிய’ ராஜாஜிக்கு எழுதினாராம். அவர் கொடுக்கலையே. எதையும் உடனடி தியாகம் செய்யும் மனோதிடம் கொண்ட ராஜாஜி அரசியல் துறவு பூண்டு, திருச்செங்கோட்டு வறண்ட பூமியில் ஒரு ஆச்ரமம் அமைக்கிறார். பார்வையிட வந்தவர்களில் ஒருவர் கஸ்தூரி பாய் காந்தி. சரளமாக ஆங்கிலம் பேசாதவர். கதர் ராட்டினம் சுழல்கிறது. துணி நெய்து சாயம் தோய்க்கிறார்கள். ஒரு உரையாடல்:
கஸ்தூரி பாய்: ‘Rajaji, this colour go?”
ராஜாஜி: “No Ba, this no-go colour.”
இந்த எளிமையான ராஜாஜியை போய் ‘குல்லுக பட்டர்’ என்று திராவிட தமிழ்நாடு எள்ளி நகையாடியது. அவரை ‘சாணக்யர்’ என்றும் சொல்லி குற்றம் காண்பார்கள். ஆம். அவருடைய ராஜ தந்திரம் நிகரற்றது. டில்லியில் கவர்னர்-ஜெனரலாக இருந்த போது, ஸோவியத் தூதர் தன்னுடைய சன்னது சமர்ப்பிவித்து, நட்புரை ஆற்றினார். ராஜாஜியை ‘மாட்சிமை பொருந்தியவரே!’ (‘Your Excellency’) என்று விளித்தார். பிறகு, சம்பிரதாயமான தேநீர் விருந்து. அப்போது உரையாடல்:
ராஜாஜி: ‘என்னை ‘மாட்சிமை பொருந்தியவரே!’ என்று விளித்தீர்கள். அந்த அடைமொழியெல்லாம், 1917ம் வருட புரட்சிக்கு பிறகு ஒழித்துவிட்டீர்கள் என்று நினைத்தேன்.
தூதர் மென்ஷிக்கோவ்: ஆம், ‘மாட்சிமை பொருந்தியவரே!’ அதை புரட்சிக்கு பிறகு ஒழித்தோம். ஆனால், தவறை பின்னால் உணர்ந்தோம்.
ராஜாஜி: எந்த தவறு? புரட்சியை சொல்கிறீர்களா? !
(என்றோ இல்லஸ்றேடட் வீக்லியில் படித்த ஞாபகம்.)
தமிழ்நாட்டு முதல்வரின் அணுக்கத்தொண்டர்களில் சிலர் முக்கியத்துவம் இழந்ததாக நேற்றைய செய்தி. அவரின் திறனை சிலாகித்து, இன்று திரு.’சோ’ ராமசாமி பேசியிருக்கிறார், தள்ளி நின்று. நாட்டுக்கு நல்லதே நடக்கட்டும். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதையொட்டி, விகடன் டாட் காம் செய்தித் தளத்தில் பிரசுரமான ‘அன்றே சொன்னார் ராஜாஜி! என்ற என் கட்டுரையில் சொன்ன சில விஷயங்களை மீள் பார்வைக்கு இங்கு வைக்கலாம் என்று கருதி, அதை இங்கே தருகிறேன்.
‘அன்றே சொன்னார் ராஜாஜி!
“ மே 16, 2011... தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்டார். உடனக்குடனே, அமைச்சர்களும் பதவியில் அமர்ந்ததும் நன்நிமித்தமே.
மக்களின் விருப்பம், வாக்கு, ஆணை எல்லாவற்றையும் ஒரு சொல்லில் அடக்கி விடலாம்: 'அறம்'. அது யாது என்று தமிழ் மொழியின் அமுதசுரபியான மணிமேகலையிடம் கேட்க, அவர் சொல்லுவார்,
"...அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்,
மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்..."
மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்..."
உணவும், ஆடையும், தங்குமிடமும் உவமைகள் என்க, நிறைவான வாழ்க்கைக்கு. அதை அளிக்ககூடிய நல்லாட்சியை, அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்ட அரசியல் தலைமை மட்டுமே தர இயலும். அவ்விடம் அறம் தளைத்து ஓங்கும்.
அந்த நல்வழியில் அரசாளுவது, முதல்வரின் கடமை, பணி, தொண்டு. இத்தருணம் அவருக்கு சான்றோரின் ஆலோசனையும், ஆசிகளும், வாழ்த்துக்களும் தாராளமாகக் கிடைக்க வேண்டும். நம் பொற்காலத்து முதல்வரும், மாமேதையும், தர்மபோதகரும் ஆன ராஜாஜி அறிவுரைகளை மதித்து நடந்தாலே, தெளிவு பிறக்கும்; இன்னல்கள் களையும்; நல்ல காலம் பிறக்கும். நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். முன்னுரையில் அந்த தீர்க்கதரிசி இரு விஷயங்களை தெளிவுற கூறுகிறார் - 1) அவரது கருத்துக்களை, மக்களை மேய்ப்பர்கள் ஏற்காமல் இருக்கக்கூடும். 2) இந்த கருத்துக்கள் சிந்தித்து, சிந்தித்து எழுதப்பட்டவை; அவசரம் அவசரமாக தன்னிச்சையாக எழுதப்பட்டவை அல்ல.
பல்லாண்டு, பல்லாண்டுகளாக, மக்களை மேய்த்தவர்கள் அவருடைய கருத்துக்களை அசட்டை செய்ததால், மக்களின் துன்பம் கரை கடந்தது. அவருடைய சிந்தனைகள் எக்காலமும் ஏற்புடையவை; அரசை உருப்படியாக நடத்திய தலைவரின் நன்கொடை, அவை. ஐம்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு அவரின் சொல் ஒவ்வொன்றும் கணீரென்று கணீரென்று ஆலயமணி அடிப்பது போலும், கீற்று மின்னல் 'டால்' அடிப்பது போலும், இன்றைய இந்திய சூழ்நிலைக்கு கனபொருத்தமாக இருப்பது, நம் முதல்வரின் கொடுப்பினையே.
'அரசியலின் உள்ளுறைவது, தேர்தலில் எப்படியாவது வெற்றியடைவது என்று தான் அவர்கள் நம்பினார்கள். வரலாற்றில் மறைபொருள் உண்டு. அவர்கள் தேர்தலில் தோற்றல்லவோ போனார்கள்,' என அன்று அவர் விடுத்த எச்சரிக்கையை இன்று காண்கிறோம்.இனி ராஜாஜி நல்லுரையின் முதல் பகுதியின் சுருக்கம்:
1. பற்பல படிநிலைகளில் வசித்து வரும் மக்களிடையே, அரசின் குறிக்கோள்களை பற்றி பெருமளவில் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கவேண்டும். அப்போது தான், நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி முறை செயல்பாடுகளில் வெற்றி பெற முடியம்.
- அதை மணிமேகலையின் 'அறம்' எனலாம்.
2. நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகள் களத்தில் இருக்கவேண்டும். மக்களாட்சியெனில், வலிமையான எதிர்க்கட்சி தேவை. அரசியல் கருத்துக்கள், ஒன்றுக்கொன்று சளைக்காத இரு கட்சிகள் இல்லையெனில், நீர்த்து விடும்... மாற்றுக் கருத்துடையோர் தனியார்களாகவோ அல்லது சின்ன சின்ன குழுக்களாகவோ இருப்பின், அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்.
- மக்களால், நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகளை காண இயலவில்லை. எனவே, நம் முதல்வர் ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்கள் தன்னை அடைய வகை செய்து கொள்ளவேண்டும். இது நடக்கக்கூடிய செயல்.
3. ஒரே கட்சியை ஆளுமையில் வைத்தால், அத்தருணம், மக்களாட்சி தராதரத்தை இழந்து விடுகிறது. பார்க்க முடிந்தும், காண முடியாது; ஏற்றதாழ்வுகளை எடை போடமுடியாது; எழும் வின ாக்களின் எல்லா பரிமாணங்களையும் காண இயலாது.
- இந்த சிக்கலான பிரச்னையை முதல்வர் கவனித்து, நிவாரணங்களை நாட வேண்டும். ஆளுமைத்திறனும், உகந்த அணுகுமுறையும் உடையவ தலைவரால், யதேச்சாதிகாரமும் இயலும்/ நிவாரணங்களும் இயலும்.
4. இந்திய மக்கள் அடி பணிபவர்களாக இருந்தாலும், அவர்கள் களிமண் பொம்மைகள் அல்ல. அவர்களின் வாழ்வியல் இயந்திர கதியில் இயங்கவில்லை. சிக்கலான எண்ணங்களும், உணர்ச்சிகளும், மன உளைச்சல்களும் நிறைந்த வாழ்வில், உரசல்களும், தூக்கிப்போடும் இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்யும். பற்பல பற்பல படிநிலைகளில் வாழும் மக்கள் யாவரும் இதன் இலக்கே. நீண்ட கால வரலாறே இதற்கு அத்தாட்சி. இந்த தாக்கங்கள் எங்கோ அத்வானத்தில் நடை பெறவில்லை. வாழ்ந்து வரும் நம்மை தான் அவை குறி வைக்கின்றன.
- ராஜாஜி அன்று சொன்னதை, இன்று கண் கூடாக காண்கிறோம்.
5. ராஜாஜி 'மாற்றம் தரும் வலி' ஒரு எளிய சொற்றொடரை (transition blues) ஒரு சூத்ரமாகவே படைக்கிறார். வரி பளு, வேலையில்லா திண்டாட்டம் ('disemployment'is his word), விலைவாசி ஏற்றம், பதவி மோகம் கொண்டவர்களின் சுரண்டல், வீட்டு வரவு/ செலவு உதைப்பது, இவற்றால் ஏற்படும் உளைச்சல், ('ஹிஸ்டீரியா' என்கிறார்.) தனிமனிதர்களின் இயலாமை என்ற கொடுமை எல்லாமே அந்த சொற்றொடரில் அடக்கம். இத்தகைய மோதல்களால் அவஸ்தை படுபவர்கள் வரவேற்பது யாதெனில், இந்த உரசல்களையும், இடைஞ்சல்களையும், குலுங்கல்களையும் கவனித்து நிவாரணம் தேடும் நாடாளுமன்ற பிரதிநித்துவ கட்சி.
- இன்று தமிழ்நாட்டில் அந்த பொறுப்பு, அ.தி.மு.க.வுக்கு.
6. அந்த கட்சி, இடதுசாரியை கையாளும் திறனுடன், சட்டமசோதாக்களையும், அன்றாட நிர்வாகத்தையும் சோதித்து, எடை போட்டு, ஆளும் கட்சியின் விவேகத்தை அலசி, ஆளுமையில் உள்ளவர்கள் மக்கள் நலனுக்கு இயங்குகிறார்களா அல்லது 'மாற்றம் தரும் வலி'யை தருகிறார்களா என்று பகுத்தறிந்து, ஏற்புடைய வகையில் அவர்களை பணி செய்ய கட்டாயப்படுத்தும் திறனையும் முன்னிறுத்த வேண்டும். இது தான் நான் கூறும் வலதுசாரி; அத்தகைய கட்சிக்கு பெருமளவு ஆதரவு இருக்கும். 'முன்னேற்றத்தில்' ஓரளவு பழம்பெருமைக்கு (கன்ஸெர்வேட்டிவ்) மதிப்பு உண்டு. அதை விரும்புவோர், மேற்படி முறையில் இயங்கக்கூடிய எதிர்தரப்பை நிலை நாட்ட வேண்டும். இதை ஆளுமை ரகசியம் எனலாம்.
7. ஏதோ ஒரு கோட்பாடு, ஏன் ஒரு பொருளற்ற கூப்பாடு (ஸ்லோகன்) கூட, மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும்; அதன் விளைவாக, தக்கதொரு மாற்றுக்கருத்தின் சார்பில் மக்களை திரட்டி, எதிர்த்தரப்பை உருவாக்க இயலாமல் போகாலாம்... மக்களிடையே, அன்றாட வாழ்க்கைக்கு, அரசின் பரிசில்களும் சிபாரிசுகளும் இன்றியமையாதவையாக ஆகிவிட்டன.
- தேர்தல் இலவச வாக்குறுதிகளை ராஜாஜி ஆரூடம் கூறுகிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது. இலவசங்கள் தேவையே இல்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை, பொதுநலம் நாடி, திருத்தி அமைக்க, ஏற்புடைய இலக்கணம் வகுக்கவேண்டும்.
8. இந்தியாவில் பிராந்திய ஈடுபாடுகள் அரசியல் களத்தில் புகுந்து விளையாடுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நிலைகளில். எனவே, பிராந்திய ஈடுபாடுகளும், அவற்றால் மக்களின் நலம் நோக்கி எழும் பிரச்னைகளும், மற்றவை எல்லாவற்றையும் அமுக்கி விடுகின்றன. இதற்கு விடை, பிராந்திய உணர்வுகளை புறக்கணிப்பது இல்லை. விடை, மாநிலங்களுக்கு மேலும் அதிகாரம் வழங்குவதில் இருக்கிறது. அவ்வாறு செய்தால், பிராந்திய அளவில் என்ற குறுகிய மனப்பான்மை குறையும்.
- நம் முதல்வருக்கு, இங்கு இருமுனை செயல்பாடுகள்: மத்திய அரசிடமிருந்து பெறுவதும், மாவட்டங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கு கொடுப்பதும்.
9. மத்திய அரசின் ஆளுமையை போற்றுவோர், நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு என்று கூப்பாடு (ஸ்லோகன்) போடுவர்; மாநில ஆதரவாளர்களோ தங்கள் தங்கள் பிராந்திய தேவைகளுக்கு குரல் கொடுப்பர். இப்படிப்பட்ட ஆரோக்கியமான போட்டாபோட்டிகள், ஜாதி, இனம், போன்ற குறுகிய அரசியலை கடந்து சென்றால், நலம் பயக்கும். நிர்வாகம் நாணயத்துடன் செவ்வனே இயங்கும்.
- ராஜாஜி அறிவுரையை நல்லாட்சியாக இயக்கிக்காட்டும் திறன், நம் முதல்வரிடம் உண்டு என்று யாவரும் அறிவர்.
10. எது எப்படி இருந்தாலும், மக்கள் வேண்டுவதெல்லாம், பாரபட்சமற்ற, நியாயமான, செவ்வனே இயங்கும் அன்றாட நிர்வாகம். குடும்பமும், இனமும் ஆட்சி புரிந்தால், அரசு ஊழியர்களும், அந்த தகாத வட்டங்களில் சிக்கிக்கொள்வர். ஏனெனில், குறுகிய வட்டங்களின் அதிகாரபலம், அவர்களின் தரத்தை குறைத்து விடுகிறது. எல்லா துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சியும், தகாத செயல்களை ஒழிப்பதும் குறிக்கோள் என்றால், மாநிலங்களுக்கு ஆளுமை கொடுத்தால் மட்டும் போதாது. அரசு பணி செய்பவர்களை - மாநில/மத்திய ஊழியர்கள் - கண்டிப்பான ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், மத்திய அரசின் நேரடி பார்வையில். அதற்கென்று சீனியர் அதிகாரிகளைக்கொண்ட மத்தியக்குழு ஒன்று தேவை. அக்குழுவின் பணி: எல்லா துரைகளிலும் உயர்ந்த தரம் நிலவ வேண்டும்; அரசியலர்களின் அச்சுறுத்தல், பழி வாங்குதல் போன்றவற்றிலிருந்து அவர்களை காப்பாற்றுவது.
- இன்று நடப்பதை அன்று சொன்னார், ராஜாஜி! நன்னாளாகிய இன்றைய தினம், நல்லதே நடக்கட்டும் என்று மற்படியும் சொல்லி, விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
25 12 2011
http://3.bp.blogspot.com/_ mPQizC4i3sA/S-TKB039YjI/ AAAAAAAACF0/VZYNUSt_Oow/s1600/ rajaji-autograph.jpg
உசாத்துணை:
http://news.vikatan.com/index. php?nid=2070
இப்போதைய பின்னூட்டங்கள்.
28 12 2014
*****
Reply
Dear Mr. RS,
You are entitled to your views for expression in your blog, Mine is not on hire for your abusive postings on Rajaji. I allowed this only because of my respect for you. Not any longer. All your postings will go to Spam.
Regards,
Innamburan
அப்டேட்
மற்றவை பின்னர்.
இன்னம்பூரான்28 12 2014
*****
’எண்டிசைக்கும்புகழ் இன்னம்பர்’ (தேவாரம் 3 095 - 01) என்பார் அப்பர் சுவாமிகள் தேவாரத்தில்.
இன்னம்பூராரின் புகழ் எண் திசைக்கும் பரவட்டும். பாரத்ததின் உயரிய நாகரீகத்தை குழந்தை முதல் பெரியோர் வரை ஆழக் கற்றுக் கொள்ள உதவிய பெருந்தகையான மூதறிஞரைப் பற்றிய ஒரு உயர்ந்த கட்டுரை இது.
ராஜாஜி பிறந்த தேசத்தில் நாம் பிறந்தோம் என்ற எண்ணமே மகத்தானதாகும்.
ராஜாஜி வாழ்ந்து மறைந்த மண்ணில் அந்தக் கடைசி வருடத்தில் கிடைத்த ஞானோபதேசம், (பின்னாட்களில்தான் அதன் மகத்துவம் புரிந்தது) அவரைத் தரிசித்து மகிழ்ந்த நாட்கள் எல்லாமே நினைவில் நின்றவை. எப்போதும் நிற்பவை.
அன்புடன்
Dhivakar
*
மிக்க நன்றி, திவாகரா! யாருமே பார்க்கவில்லையே, இந்த மீள்பதிவை என்று நினைத்தேன். முதல் தடவையும் உமது பின்னூட்டம் எனக்கு ஹிதமாக இருந்தது. இந்த புத்தாண்டுக்கு முன் கூட்டியே,'’எண்டிசைக்கும்புகழ் இன்னம்பர்’ (தேவாரம் 3 095 - 01)' என்ற உழவாரப்பணியாளராகிய திருநாவுக்கரசர் சுவாமிகளின்/ திருஞான சம்பந்தரின் அசரீரி ஆசிகள். உமது உந்துதலின் அடுத்த கட்டமாக அந்த 26 பின்னூட்டங்களையும் அப்டேட் செய்து, என் திருமணத்துக்கு ராஜாஜி அனுப்பிய வாழ்த்து லிகிதத்தையும் மின்னாக்கம் செய்து வெளியிடுகிறேன்.
இன்னம்பூரான்
*
நேற்றே வாசித்தேன். மீள்பதிவு என்றாலும் மீண்டும் வாசித்து நினைவு கூறத்தக்க நிகழ்வுகள்.
சுபா
*
அன்புள்ள ‘இ’ ஸார்!
தங்கள் ‘தீனபந்து’ இடுகையை இன்றுதான் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். மூதறிஞர் ராஜாஜியைப் புரிந்துகொண்ட வெகு சிலர்களில் தாங்கள் ஒருவர். அவரைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். He was always ahead of his time. ஆங்கிலத்தின் உபயோகமாகட்டும், பர்மிட் லைசென்ஸ் ராஜின் கொடூரமாகட்டும், காஷ்மீர் பிரச்னை ஆகட்டும், அவருடைய கருத்துக்களின் ஆழம் இன்று தான் நமக்குப் புரிகிறது.
அணு ஆயுத ஒழிப்பு குறித்து 1962ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் அதிபர் கென்னடியுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை வரலாற்றுப் புகழ் பெற்றது. இருபது நிமிடங்களே நடக்க வேண்டிய அந்த சந்திப்பினை ஒரு மணிக்குமேல் நீட்டிப்பு செயதார் கென்னடி. சந்திப்பு முடிந்ததும் மிக்க மகிழ்ச்சி கொண்ட கென்னடி "His was one of the most civilizing influences on me" என்று பெருமிதத்துடன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
சான்றோர்களில் ஒருவராக இருந்தாலும் ராஜாஜி எளியவர்க்கு எளியவர். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் அள்ளிக் கொடுத்த வள்ளல். ’கம்யூனிஸ்டுகள் எனது முதல் பகைவர்கள்’ என்று பறைசாற்றியிருந்தாலும், உடல் நலம் குன்றிய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்களின் ரஷ்ய மருத்துவச் செலவிற்காக நிதி உதவி செய்ததோடு ‘அதைப்பற்றி நான் சாகும்வரை யாருக்கும் சொல்லக்கூடாது’ என்னும் உறுதிமொழியையும் பெற்றுக் கொண்டவர் ராஜாஜி.
கொலையாளிகளுக்கான தூக்குதண்டனையை நீக்கக்கூடாது என்று பலமாக வாதம் புரிந்தாலும், அவர் ஆட்சி காலத்தில் ஒரு சில கொலையாளிகளின் மரண தண்டனையைப் பரிவோடு ரத்து செய்தவர் ராஜாஜி.
அத்தகைய பெருந்தகையை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
வணக்கத்துடன்
ஸம்பத்
Reply
Dear Mr. RS,
You are entitled to your views for expression in your blog, Mine is not on hire for your abusive postings on Rajaji. I allowed this only because of my respect for you. Not any longer. All your postings will go to Spam.
Regards,
Innamburan
dheena bandhu - C.F.ANDREWS
-------------------------------
https://rsrblog.wordpress.com/disgusting-c-rajagopalachari/
====================================
i need your blog post on Hugo Chavez