அன்றொருநாள்: மார்ச் 23
விடுதலை வேள்வியில் தன்னையே ‘ஸ்வாஹாஹா!’ என்று அர்ப்பணித்துக்கொண்ட தியாகச்சுடர்கள் முன்னே நாம் தூசு என்க. மார்ச் 23, 1931 அன்று பகத் சிங், சுக்தேவ் & ராஜகுரு ஆகிய மூன்று வாலிபர்கள் லாஹூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களில் பகத் சிங்கை பற்றி பரவலாக அறிந்தவர்களுக்கு , மற்ற இருவர்களை பற்றி அவ்வளவாகத் தெரியாது. மூவரும் தியாக செம்மல்களே. அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலி செலுத்திய பின், ஒரு வித்தியாசமான பார்வை; பாமரகீர்த்தி நோக்கு.
‘அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’ என்ற இழையில், ‘...அக்டோபர் 30, 1928 ஒரு கரி நாள். அன்று சைமன் கமிஷனை எதிர்த்துச் சென்ற ஊர்வலத்தில், லாலாஜி தலைமை வகித்தார். ஒரு போலீஸ் முரடன் தடியால் தலையில் அடித்து, படுகாயப்படுத்தினான். அதை பொருட்படுத்தாமல் அன்று மாலை பொதுக்கூட்டத்தில், ‘என் மேல் படும் அடி ஒவ்வொன்றும், பிரிட்டீஷ் சவப்பெட்டியில் ஆணிகளாகும்’ என்று முழங்கினார். இவரது உடல் நிலை கெட்டுப்போய், நவம்பர் 17, 1928 அன்று விண்ணுலகம் ஏகினார்’ என்று கூறினேன்.
லாலா லஜ்பத் ராய் அவர்களை தடியால் அடித்தவன் ஜேம்ஸ்.ஏ.ஸ்காட். பழி வாங்கும் நோக்கத்துடன் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு, ஜெய் கோபால் & சந்திரசேகர் ஆசாத்
(அன்றொரு நாள்: ஜூலை 23:I: சுளீர்! சுளீர்! சுளீர்! பாலகனுக்கோ வயது 15; கசையடிகளும் 15. ஒவ்வொரு சுளீருக்கும் ஒரு ‘பாரதமாதாவுக்கு ஜே!’ வெள்ளைக்காரனுக்கே தாங்கவில்லை. உன் பெயர் என்னவென்றான். இவனும் ‘திவாரி’ என்று சொல்லமாட்டானோ? ‘சுதந்திரப்பறவை என்று பொருள்பட ‘ஆசாத்’ என்றான். சுளீர்!)
ஆகிய ஐவர் குழு, அவன் என்று நினைத்து ஜான் சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றனர். (மத்திய அசெம்ப்ளியில் குண்டு வீசிய வழக்கு வேறு.) தந்திரமாக, கல்கத்தா, கான்பூர், லக்னெள என்று ஓடிப்போனாலும், பிடிபட்டார்கள். இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை. இதையெல்லாம் படித்துக்கொள்ளலாம். நான் சொல்லப்போகும் விஷயம்: 1945ல் ‘பகத் சிங்கும், தோழர்களும்’ என்ற ஆங்கில நூல். பம்பாயிலிருந்து பிரசுரம் ஆனது; ஆசிரியர் அஜாய் கோஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரியதரிசி (1951 -62)பகத் சிங்குடன் சிறையில் இருந்தவர்.
சாராம்சம்:
நான் பகத் சிங்கை முதலில் பார்த்தது 1923ல். வயது 13/14. நல்ல உயரம், மெலிந்த உடல், கிராமத்தான். வெள்ளந்தி. சில நாட்கள் கழித்து நாங்கள் இருவரும் அளவளாவினோம். மக்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லையே என்று மிகவும் கவலைப்பட்டான். முதல் லாஹூர் சூழ்ச்சி வழக்கில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் தான் அவனுக்கு மாடல். எங்கள் நட்பு வளர்ந்தது... சில வருடங்கள் கழித்து 1928ல் அவனை சந்தித்தபோது அவனுடைய புதிய அவதாரம் கண்டு வியந்தேன். அவன் கிராமத்தானாக இல்லை. அவனுடைய சாதுரியமும், ஒளி விசும் கண்களும், வசீகர தோற்றமும் என்னை கவர்ந்தன. அவன் பேசினால், நாள் பூரா கேட்கலாம். அத்தனை வேகமும், தாகமும்... ஏப்ரல், 1929ல் கம்யூனிஸ்ட் வேட்டை தொடங்கியது. பி.சி.ஜோஷி காலேஜ் பையன். கைது. நாங்களும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் வாடையால் இழுக்கப்பட்டோம். ஆனால், எங்களுக்கு ஆயுதம் தாங்கி ஆங்கிலேயனை விரட்டவேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் அதை ஆதரிக்கவில்லை. மற்றபடி, ஆங்கில ஏகாதிபத்தியத்தை, அரசியல் சாஸன அணுகுமுறையை எதிர்ப்பதிலும், நேரடி தாக்குதல் கொள்கையிலும், நாங்கள் ஒத்துப்போனோம். கம்யூனிஸ்ட்டு கட்சியினரை கைது செய்வதை எதிர்த்தோம்... அசெம்ளியில் குண்டு வீசியதற்கு, ஸ்தலத்திலேயே பகத் சிங்கும், தத் என்பவரும் கைதானார்கள். பகத் சிங்கின் வாக்குமூலம் கணீரென்று இருந்தது. பொறுப்பை ஏற்றுக்கொண்டான். தீவாந்திர தண்டனை.
லாஹூரில் இருந்த எங்கள் குண்டு தொழிற்சாலையை மோப்பம் பிடித்து, சுக்தேவ், கிஷோரி லால் ஆகியோரை கைது செய்தார்கள். ஜெய் கோபாலும்,ஹன்ஸ்ராஜ் வோஹ்ராவுக்கும், போலீஸ் அடிதடி பொறுக்காமல், அரசு தரப்பு சாட்சிகளாயினர். மேலும் ஐந்து பேர். இந்தியா முழுதும் எங்கள் குழுவே கைதாயிற்று; அல்லது அஞ்ஞாத வாசம். நானும் அஞ்ஞாத வாசம் புகுமுன் கைதானேன்.
ஜூலை 1929ல், கோர்ட்டில் பகத் சிங்கை பார்த்து அழுதேன். அவன் தன்னுடைய நிழலாகி விட்டான். போலீஸ் டார்ச்சர், சமத்துவம் கோரி உண்ணாவிரதம். மெலிந்து, இளைத்து, துரும்பாகி, கிழித்தக் கந்தலாகக் கிடந்த அவனை ஸ்டெரெச்சில் கிடத்திக் கொண்டு வந்தார்கள். லாஹூர் சூழ்ச்சி வழக்கு என்று ஒன்றும் தொடர்ந்தார்கள். நானும், பகத் சிங்கும், வழக்கை கவனிக்காமல், பேசிக்கொண்டிருப்போம். அவன் சொன்னது: ‘எல்லாம் முடிந்த கதை என்று சோர்வடையக்கூடாது; இது வெறும் சட்டரீதியான வழக்கு அன்று; எல்லாரையும் காப்பாற்ற முயல்வோம்; ஆனால், அரசியல் பின்னணியை மறக்காதே. இந்த வழக்கை ஒரு தருணமாக கையாண்டு, சொல்லாலும், செய்கையாலும் துணிந்து அசகாய புரட்சிகரமான வேலைகள் செய்து, ராஜாங்கத்தை அசத்துவோம்.’. அது எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. எல்லாரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். மெலிந்தோம், இளைத்தோம். துணிவு இழக்கவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு வலுக்கட்டாயகாக ஊட்டினார்கள். 13ம் நாள், ஜதீன் தாஸ்சின் நிலைமை மோசமாகி விட்டது. நன்றாகத்தான் இருந்தான். ஒரு சிறிய அதிகாரி தயங்கி, தயங்கி, அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டியதில் கேடு விளைந்தது என்றார். ஜதீன் தாஸ் ஒரு நகைச்சுவையாளன். கதை சொல்லி. பாமர கீர்த்தி செப்புவான். அவனோ நினைவிழந்து கிடந்தான், ஆஸ்பத்திரியில். ஜெயில் அதிகாரிகளை மிரட்டி, நான் போய் பார்த்தேன். அடுத்த பலிகடா சிவ் வர்மா. ஆஸ்பத்திரி ஃபுல். கோர்ட் காலி. தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்தார்கள். நாங்களும் இல்லாத தந்திரங்களை கையாண்டோம். இந்தியா முழுதும் பரவியது உண்ணாவிரத புரட்சி. அவ்வப்பொழுது பகத் சிங்கின் ஊக்கம் எங்களை ஆட்கொண்டது.
ஜதீன் தாஸ் செத்துப்போய்ட்டான். சிறை அதிகாரிகள் அழுதார்கள். வாசலில் பெரும் கூட்டம். லாஹூர் போலீஸ் சூபரிண்டெண்ட், ஹாமில்டன் ஹார்டிங்க், தலை குனிந்து வணங்கினார்.
(தொடரும்)
இன்னம்பூரான்
23 03 2012
பி.கு. தொடர் கட்டுரையாக எழுத நினைக்கவில்லை. பகத் சிங் செய்த கொலையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால்...
MAINSTREAM, VOL XLV, NO 42