அல்லி டுக் ஓவர்: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 8
இன்னம்பூரான்
12 04 2014
போடாதே! போடாதே! என் கணவா, வோட்டு
போடாதே! போட்டாலும், கேட்டுப்போடு, ராசாவே.
நோட்டா போட்டாலும் போடுவேண்டி.
கோட்டா படி அவன் காசு கொடுத்தாலும்.
பொல்லாத சொப்பனம் கண்டேன், ஐயா.
பொம்பளை பேச்சு கேளு, மச்சான்.
சொல்லாத வார்த்தை, வீசிடுவேன், ஆமாம்.
சொம்பிலே ஆவி பறக்க, வந்தாரே முனீஸ்வருரு!
[திரிலோக சஞ்சாரியும், வீணாகானப்பிரியரும், ஆண்டாள் கொண்டையும், பெருமாள் பூமாலையும் அணிந்தவருமான நாரத மகரிஷி, கார்மேகத்தினூடே பிருகாக்கள் உதிர்த்துக்கொண்டு, துக்கடாக்களை அனாயசமாக பாடிக்கொண்டும், மினி-நர்த்தனமாடிய வண்ணமாக, சுவர்க்கத்திலிருந்து சவுகார்பேட்டையில் வந்து இறங்கி, மெட்ரோ பிடிச்சு, நம்ம ஜில்லு வீட்டு வாசல்லே இறங்கி, ‘சிவகாமி’ என்று கனிவுடன் அழைத்தார். பாட்டியும் அவருக்கு ஷோடோசோபசாரம் செய்து, பேராண்டி உபயமாக, ஜிகிர்தண்டா வாங்கிக்கொடுத்து, அபின் கலந்த பீடா கொடுக்கவே, உச்சி குளிர்ந்த நாரதர், எலியட் பீச் சேரி வாழ் செங்கமலத்திடம் உரைத்ததை கேளும், புவனமாளும் தமிழ் மாக்களே.
செங்கமலம்! செங்கமலம்! சத்தியவான் சோணாசலத்தின் பத்தினியே! நான் சவுடாலா பேசலையே. நீ கண்ட பொல்லா சொப்பனம் நிசமா நடந்து விட்டால், நானும் அரிதாரம் களைந்து, வீணையை கூஜாவா மாத்திடுவேன். ஜால்ரா போட்டே காலத்தைக் கடத்திடுவேன். எதற்கும், கண்ட சொப்பனத்தை சொல்லவல்லாய், கிளியே! என்றார்.
‘ஆயிரம் கண்ணான் இந்திரன் என்று நினைத்தீரோ?
போய் வாரும், கபட சன்னியாசியே! என்றதுமே,
பாட்டி வந்து மத்தியஸ்தம் செய்து வைத்தாள்.
மெட்டி குலுங்க, செங்கமலம் சொன்னாள். கேளும்.
ஐயமாரே! இந்த அநியாயம் கேட்டீரோ. அரசியல் கூடா நட்பு எல்லாம் பாடா படுத்தி, நொந்த நூடிலாக, எம்மை ஆக்கினது போராது என்று:
நைச்சியம் பல பேசி, புருஷன்மார் அல்லாரையும் டாஸ்மாக்குக்கு அனுப்பி விட்டு...
‘சொரணை புகழ்’ சொர்ணம்மாவும், அதிகார நந்தி வெற்றிக்கனியும், தலைக்கனம் துறவினியும், பழ- மொழியும், சூ! மந்திரக்காளி ப்ரத்யங்கராவும், சுதந்திரி மாமியும், கொள்கை விலக்கிய கூட்டணி வைத்து, மெஜாரிட்டி ஆகிவிட்ட மெஜாரிட்டி பெண்ணுலக ஆதரவினால், அரியணை ஏறி, ஆணாதிக்கத்தை அடக்கி ஆளப்போறங்களாம். தலை தெறிக்க ஓடின மன மோஹனாரும், மோடி மஸ்தானும், ‘புதுத்தமிழ்’ கொள்ளுத்தாத்தாவும், புத்தர் மகனாரும், முருகன் சாமியும், ஜில்லுடன் மல்லுக்கட்டிய லல்லுவும், அத்வானியுடன் அத்வானப்பயணம் போனாஹ.
[மேலும் பேச தயங்கினாள் செங்கமலம். ‘சொல்லடி, ராசாத்தி! என்றாள் பாட்டி.
பொல்லா சொப்பனமில்லை, பாட்டி, இது.
கல்லா பெட்டி திறந்தவங்களுக்கு காலமில்லை, இனிமேல்.
அல்லி டுக் ஓவர் என்றாள்.
தேவார்கள் பூமாரி பொழிந்தனர். மஹாவிஷ்ணுவை பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள். வக்ஷஸ்தல வாசினி.