மேலெழுத்து
“உமது மூளையில் அடுக்கடுக்காகப் படிந்திருக்கும் கருத்துக்கள், கற்பனைகள், சித்திரங்கள், உணர்ச்சிகள், நினைவலைகள் எல்லாம் மறையவே இல்லை; அவை உறைகின்றன. காய்ச்சலடித்தாலோ, உயிர் பிரியும் தருவாயிலோ அவை தலை தூக்கலாம்…நம் தலைக்குள் ஒரு இயல்பான, வலிமையான மேலெழுத்து இருக்கிறது. சாவி கொடுக்கணும். அவ்வளவு தான்.”
~தாமஸ் டெ க்வின்சி (1845ல்)
தஞ்சை பெரிய கோயிலின் மூன்றாவது அடுக்கில் உள்ள பரதநாட்டிய சிற்பங்களாயினும் சரி, ஒன்றன் மீது ஒன்றாக வரையப்பட்ட நாயக்கர் கால/மராட்டிய ஓவியங்களாயினும் சரி, திரிவேணி சங்கமத்தில் படிப்படியாக அமைந்திருக்கும் (ஆய்வுகள் நிறைபெறவில்லை) பல காலகட்டங்களின் குடியிருப்புகளும் சரி, 1920ல் காணப்பட்ட தென்னமெரிக்க புதிர் நிறைந்த ஓவியங்களை நாற்பது வருடங்கள் கழிந்தபின் ஆதாரமொன்றுமில்லாமல் டைனிக்கின் என்பரின் ‘தேவ ரதம்’ என்ற நூலில் கூறப்பட்டதை வேதவாக்காக குழுமங்களில் விவாதிக்கப்பட்ட சின்னங்களாயினும் சரி, மனிதனின் அபார கற்பனாசக்தியின் பரிமாணங்களில் இந்த ‘மேலெழுத்தும்’ (palimsest) ஒன்று.
இந்த தொடரின் முதல் நான்கு பகுதிகளில் paradigm shift பற்றி நம்பிக்கையின் தும்பிக்கை என்று வர்ணித்து எழுதியதை சிலர் வரவேற்றார்கள். அம்மாதிரியே, நாம் ‘அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள் , முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட’ இந்த ‘மேலெழுத்தை’யும் ஒரு சிந்தனையூற்றாக அணுகவேண்டும். அதனுடைய அபாரம் அப்போது நன்றாகவே புரியும். அவரவருக்கு அது ஒரு கைவிளக்காக பயன்படும் ஆற்றல் அதற்கு உண்டு. நினைவாற்றலை கூட்ட உதவும்; வரலாறு படிக்க உதவும்; புவிவியல் படிக்க உதவும். ஏன். ஓலைச்சுவடி, கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், நாணயங்கள் படிக்கக்கூட உதவும்.
17வது நூற்றாண்டிலிருந்து ஆங்கில மொழியின் புழக்கத்தில் இருக்கும் இந்த சொல்லை, ‘அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள் , முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட’ படைப்பு என்று மட்டும் சொல்லி எளிதில் விளக்கமுடியாது. அதனுடைய உட்கருத்து ஆழமானது; அதனுடைய தாக்கம் வலிமை மிகுந்தது. ராபர்ட் ஃபுல்ஃபோர்ட் சொல்வது போல், காலரிட்ஜ் தன் நினைவாற்றலலிருந்து மீட்க நினைக்கும் ஞாபகம் ஒரு பரிமாணம்; டாக்டர் வாட்ஸனும் ஷெர்லாக் ஹோம்ஸும், ஒரு பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு, அழிக்கப்பட்ட மூலப்பொருளை படித்து மர்மங்களை அவிழ்க்க முயல்வது ஒரு பரிமாணம்; கொடுங்கோல் ஆட்சியில் யதேச்சாதிகாரி மக்களின் நினைவாற்றலை ஒழித்துக்கட்டுவதை பற்றி, ‘வரலாறே ஒரு மேலெழுத்து தான். அழித்து,‘பளிச்’ என்று துடைத்து வைத்து, வேண்டப்பட்டபோது, இஷ்டப்படி எழுதி வைத்துக்கொள்வது தானே வரலாறு’ என்று ஜார்ஜ் ஆர்வெல் கூறியதும் மற்றொரு பரிமாணம்.
அதா அன்று. சொல்லும், பொருளும், அவை உரைக்கும் கருத்தும், கருத்தின் ஆழமும், அங்கு ஜனிக்கும் சிந்தனையும், அதனுடைய சஞ்சாரமும் தனிமனிதனுக்கு கலங்கரை விளக்கு. நினைவாற்றலை வளர்க்க உதவும்; சிற்பமோ, புவிவியலோ, கலையுணர்வோ, கட்டிடக்கலையோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவாயினும் பேரெழுத்து ஆகிய ‘மேலெழுத்தின்’ தாக்கம், அங்கு, இருக்கத்தான் செய்யும். அதனால், சமுதாயத்தின் சீர்திருத்தம், முன்னேற்றம் எல்லாவற்றிலும், மேலெழுத்து ஆளுமை புரிகிறது.
‘மேலெழுத்து’ ஒன்றின் வரலாற்றை கவனிப்போம். ‘ஆர்க்கிமிடீஸ் மேலெழுத்து’ என்ற நூல் சமீபத்தில் பிரசுரம் ஆனது. 2300 ஆண்டுகளுக்கு முன் பிரபலமான விஞ்ஞானியாக போற்றப்பட்ட ஆர்க்கிமிடீஸ் எழுதிய அறிவியல் கட்டுரைகளில் பல காணாமல் போயின. ( நீங்க ஒண்ணு! பழைய சுதேசமித்திரன் இதழ்களை காணவில்லை.) ஆனால், ஆங்காங்கே, நகல்கள் தென்படலாம். ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, ஒருவர் படியெடுத்ததில், அதுவரை காணக்கிடைக்காத இரு நூல்கள் கிடைத்தன. அவை எல்லாம் கான்ஸ்டாண்டினோபில் நகரத்தில் இருந்தன. அடுத்த நூற்றாண்டிலேயே, அவற்றை அழித்து விட்டு, அவற்றின் மேல் ஒரு பிரார்த்தனை நூல் எழுதப்பட்டது. எழுநூறு வருடங்களுக்கு பிறகு, 1906ல் யோவான் லுட்விக் ஹீபெர்க் என்ற ஆய்வாளர், அந்த நூலை பிரித்து, மூலநூல் கட்டுரைகளை படித்தார். ஆர்க்கிமிடீஸ் பற்றிய வரலாறு மேன்மைப்படுத்தப்பட்டது. அத்துடன் கதை முடியவில்லை. பல கைகள் மாறிய அந்த பிரார்த்தனை நூலை 1998ல் ஒருவர் பத்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். வங்கி லாக்கரில் போடாமல், பால்டிமோரில் உள்ள வால்டர் ஆர்ட்ஸ் ம்யூசியத்தில் பத்திரப்படுத்தினார். அங்கு 12 வருடங்களாக இடை விடாமல் நடந்த ஆய்வின் நற்பயனாக, பல அருமையான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சிந்தனையூற்று இருக்கிறதே, அதில் எத்தனை ‘மேலெழுத்துக்கள்’ வாசம் செய்கின்றன தெரியுமா? தாமஸ் டெ க்வின்சி என்ற படைப்பாளர் 1845ல் எடின்பரோ மாகஸைன் என்ற இதழில், ‘மூளையின் பேரெழுத்து என்ற நீண்ட கட்டுரை வடித்தார். அதில் மனிதனின் நினைவாற்றல் நாம் நினைக்கும் அளவுக்குள் இல்லை; அதை விட பல மடங்கு அதிகம் என்றார். அதிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் ஆக பதிவு செய்துள்ளேன். சிந்திக்க, சிந்திக்க, இதை பற்றி பல கட்டுரைகள் எழுத உந்துகிறது, ஆர்வம். எனினும், வாசகர்களுக்கு அலுப்பு தட்டக்கூடாது அல்லவா?
புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
பி.கு.
ராபெர்ட் ஃபுல்ஃபோர்ட் நேஷனல் போஸ்ட் என்ற இதழில் சில நாட்கள் முன்னால் எழுதியது படித்தது, என் சிந்தனையையும் மூட்டி விட்டது. அவருக்கு நன்றி.
No comments:
Post a Comment