சிரிச்சு மாளலெ ~ 11
இன்னம்பூரான்
16 09 2014
கொத்தமங்கலம் சுப்பு காந்தி மகான் கதையை எழுதி வில்லுப்பாட்டு பாடியதால், அண்ணல் காந்தியின் ‘சத்தியசோதனையுடன்’கூட்டணி வைத்தது சுப்பு என்பது தப்பு இல்லையோ? அல்லது தியாகபிரம்மத்தின் கீர்த்தனையை பாடியதால், அதை இயற்றயதில் நித்யஶ்ரீக்கு பங்கு உண்டு என்பது என்ன நியாயம்? பிளேட்டோவின் தத்துவங்களை தெளிய தமிழில் அளித்த திரு.வெ.சாமிநாதசர்மாவின் பணி மகத்தானது. அதற்காக, அவரை பிளேட்டோவின் பத்து நாள் தாயாதியாக்கலாமோ?
இது மாதிரியான பயித்தராத்தனம் ஒன்று அண்மையில் நடந்ததாக நேற்றைய செய்தி. சிரிச்சு மாளலெ என்றாலும் அழுகையும் வரது! பின்னெ என்ன? பல வருஷங்களுக்கு முன்னால் பாபாசாஹேப் அம்பேத்கார் அவர்கள் சாதி ஒழிப்புப் பற்றி ஆய்வுகள் பல செய்த பின், விவரமான, ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய நூல் ஒன்று எழுதினார். தலித் சமூகம் அதை வேதபாடமாக கருதுகிறது. தற்காலம் அதை மையத்தில் பொருத்தி, உரையும் கறையுமாக (annotated Critical edition) அருந்ததி ராய் கொணர, அதை பதிப்பித்த VersoBooks.com என்ற ஆங்கில பிரசுரகர்த்தா, இந்த மாமியும் சேர்ந்து அம்பேத்காரும் எழுதிய நூல் என்று விளம்பரப்படுத்தியது. அம்பேத்கார் பெளத்தமதத்தில் தன்னை இணைத்துக்கொண்டதால், மறு பிறவி எடுத்து, அருந்ததி ராய் அம்மையாரை நாடி வந்து தன்னை புதுப்பித்துக்கொண்டார் என்று கணக்குப்போடுதோ அந்த நிறுவனம் என்று தோன்றினாலும், Home Shop 18 என்ற இணையதள விற்பனையாளரும், ஆனானப்பட்ட அமேஜான் நிறுவனமும், இதே பயித்தராத்தனத்தை மட்டும் செய்யவில்லை. தலையில் சகதியை வாரி இறைத்துக்கொண்டன. Home Shop 18 அருந்தியார் மட்டுமே எழுதினமாதிரி, அவருடைய மற்றொரு நூலை முன் வைத்து, சங்கூதுகிறது. அகமதாபாத் நிறுவனமான Infibeam அம்பேத்காரின் பெயரை, கோழிக்குஞ்சை அமுக்றமாதிரி, அமுக்கி தள்ளி விட்டு, இது விளக்க உரை என்பதையும் சொல்லாமல், மாமியே புத்தகாசிரியர் மாதிரி விளம்பரம் செய்துள்ளது. அமேஜான் தலையில் கை வைத்தது: ‘The Annihilation of Caste (Hardcover – October 7, 2014) by Arundhati Roy (author), B.R. Ambedkar (author).’ ரிஷிமூலம், நதி மூலம் பார்க்கப்போனால், ஒரிஜினல் பிரசுரகர்த்தாவின் பெயர் நவாயனா. அவர்கள் தான் VersoBooks.comக்கு ‘இல்லாத’ காப்புரிமையை விற்று விட்டார்கள். இணையதள பெருமக்கள், ‘ஐயகோ! காப்புரிமை மீது வன்முறை; திருட்டுச்சொத்து’ என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள். கழுதை கெட்டா குட்டிச்சுவர். வெர்ஸோ தப்புத்தான், கணினி குழப்பம் என்கிறது. டெக்னிகல் எர்ரராம், இந்த டெர்ரர்! வெர்ஸோ, அமேஜான், இன்ஃபிபீம் தவறை நிவர்த்தி செய்தாலும், செய்த தவறின் தழும்பை அழிக்க முடியவில்லையே. அது விளம்பர உத்தி என்கிறார், ஒரு தலித் பிரமுகர். யார் கண்டா? நாளைக்கு
தடித்தாண்டவராயன், கம்பன் (2014) ‘இராமகாதை’ ‘annotated Critical edition’: சென்னை: தடாலடி பதிப்பகம்.
என்ற நூல் வெளிவரலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.combinedbook.com/blog/wp-content/uploads/2014/02/selfpubbed6.png