அன்றொருநாள்: ஃபெப்ரவரி 17
யாரோ? இவர் யாரோ?
1986ம் வருடம் ஃபெப்ரவரி 17 அன்று ஜே.கே. அவர்களின் மறைவு கருதி மனம் வருந்தியது நினைவில் இருக்கிறது. அதற்கு சில வருடங்கள் முன்னால், மும்பையில், சிறுமியான என் மகளை கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய், அவருடைய உரையை கேட்டது, அதற்கு முன்னால், வஸந்த விஹாருக்கு என் மகனை அழைத்து சென்று அவருடைய உரையை கேட்டது, 1953/54ல் ராமமூர்த்தியுடன், சைக்கிளில் வஸந்த விஹாருக்கு நாள் தோறும் சென்று, ஆழம் தெரியாமல், அவரை குறுக்குக்கேள்வி கேட்டு, சபையோரின் கோபத்துக்கு ஆளானது, பண்பின் சிகரமாக இருந்து அவர் எனக்கு பேட்டி அளித்தது, அத்தருணம், தனக்கு அமானுஷ்ய அனுபவங்கள் இருந்திருக்கின்றன என்று அவர் சொன்னதை சிரத்தையுடன் கேட்டுக்கொள்ளாதது, அதற்கு பொருத்தமான விளக்கத்தை ரோஹித் மேஹ்தா என்ற தியாஸஃபிஸ்ட் ஐம்பது வருடங்களுக்கு பின் அளித்தது, என் மகளுக்கு ஜே.கே. யின் சிந்தனையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, 1990ல் அவளை திருமதி. புபுல் ஜயகரிடம் அழைத்து சென்றது,வஸந்தவிகாரில் ரெட்ரீட் இருந்தது, எல்லாம் ஒரு தொடர்சித்திரமாக என் கண் முன் ஓடுகிறது. என்னது இது? அவரை பற்றி எழுதமால், சுயபுராணம் என்றா கேட்கிறீர்கள்? கேள்வி நியாயம் தான். தர்மம் அல்ல.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை, படங்கள், ஒலி/ஒளி நாடாக்கள், வரலாற்று ஆவணங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு காப்புரிமையில் இருப்பதால், தப்புத்தவறிக்கூட அவருடைய பெயரில் இயங்கும் ஸ்தாபனங்களுடன் பிரச்னையை நான் விரும்பவில்லை. மேலும், சர்ச்சைகளுக்கு வித்திட விரும்பவில்லை. என் ஆத்மார்த்த அனுபவத்திற்கு காப்புரிமை இல்லை. அதான். அத்துடன் அது நிற்க.
என்னை ஜே.கே. ஆகர்ஷித்ததிற்குக் காரணம் அவர், சிந்தனாசக்திக்கு முதலிடம் கொடுத்தது. His being so graceful as not to parade himself as a Godman. கரை கடந்த பொறுமை. எதையும் உதறாத நற்குணம். சிக்கலான விஷயங்களை விளக்கும் போது, பாலபாடம் நடத்துவது போல, கையை பிடித்து செல்லும் லாகவம். ஒரு விதத்தில் அவரை சாக்ரட்டீஸ் போல என்று சொல்லலாம். தன்னை பற்றி அலட்டிக்கொள்ளாத ஸ்வபாவம். ஜே.கே. போன்றவர்களை பற்றி சுருக்கி எழுதுவது கூட சரியல்ல. கடல் அலையை கோப்பையில் அளக்க முடியுமா?என்ன? ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டும் சில வார்த்தைகள். அதை பற்றிய முழு விவரம் உசாத்துணையில். நிதானமாக படித்துக்கொள்ளுங்கள். அவரை சம்ரக்ஷித்த அன்னிபெசண்ட் அம்மையார், ஜே.கே. ஒரு ஜகத்ரக்ஷகன் என்று ஊகித்தார்; பிரகடனம் செய்தார். அந்த கருத்தை பரப்ப,1911ல் ‘கிழக்கு வானில் ஒரு நக்ஷத்ரம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் நடு நாயகமான ஜே.கே.,அந்த அமைப்பை, ஆகஸ்ட் 3, 1929 அன்று கலைத்தார், காரணங்கள் பல கூறி. அந்த உரையின் முதல் கதை மட்டும் இங்கே. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மொழியாக்கத்துக்கு பொறுப்பு எனது.
“...சாத்தானும், அதனுடைய நண்பரும் தெருவில் நடக்கிறார்கள். முன்னால் செல்லும் மனிதன் தெருவில் பொறுக்கிய வஸ்துவை பத்திரப்படுத்திக்கொள்கிறான். அது என்ன என்று கேட்ட நண்பரிடம் சாத்தான், அது வாய்மையின் ஒரு பாகம் என்றது. ‘அடடா! அதனால் உனக்கு தீங்கு விளையுமே’ என்றான் நண்பன். ‘எனக்கும் நன்மை. நான் அவனை வாய்மையை நிறுவனப்படுத்த வைத்துவிடுவேன்’ என்றது, சாத்தான்...” என்று கதையை முகாந்திரமாக வைத்து ஜே.கே. பகர்ந்தது, “...வாய்மை நோக்கி பயணிக்க பாதை கிடையாது ~சமயம், மதம், சமயங்களின் கிளைகள். எல்லையில்லா, நிபந்தனையற்ற, பாதையில்லா வாய்மையை எப்படி நிறுவனப்படுத்தமுடியும்? அதாவது நம்பிக்கைக்கோட்டை என்பது மாயை. தனித்துவம் தான் நம்பிக்கையின் அடித்தளம். அதை நிறுவனம் செய்தால், அது சாதியும் சமயமுமாக உளுத்துப்போய்விடும்...உண்மையை இறக்கியா வைக்கமுடியும்? நாமல்லவோ மலையேறவேண்டும்!...எனக்கு ஒரே ஒரு இலக்கு: மனிதனுக்கு பூரண விடுதலை. கூண்டும் வேண்டாம்; இற்செறிப்பும் வேண்டாம்; சமயம், சாத்திரங்கள், அச்சம், அதிகாரம், கோயில் ~ஒன்றும் வேண்டாம். எனக்கு சிஷ்யர்களும் வேண்டாம்...உண்மை உறைவது உன்னிடம்; அது தொலைவிலும் இல்லை; அருகிலும் இல்லை; அது நிரந்தரமாக அங்கே இருக்கிறது. அமைப்புகளும், நிறுவனங்களும் உன்னை விடுவிக்கமாட்டா.”
இன்னம்பூரான்
17 02 2012
உசாத்துணை:
All Rights Reserved Copyright ©1980 Krishnamurti Foundation America
No comments:
Post a Comment