Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஜனவரி 22 வைபோகம்! வைபோகமே!




அன்றொரு நாள்: ஜனவரி 22 வைபோகம்! வைபோகமே!
5 messages

Innamburan Innamburan Sun, Jan 22, 2012 at 2:22 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி 22
வைபோகம்! வைபோகமே!

நன்முத்து போன்ற ஒரு வரலாறு மடியில் வந்தமர்ந்தபோது, சுநீதியின் மடியில் துருவன் அமர்ந்தது போல தோன்றியது. இன்று யாழ்ப்பாண வைபவ தரிசனம் கிடைத்தவுடன், நமது ஸுபாஷிணியை நினைத்துக்கொண்டேன். இந்த 1928ம் வருட நூலை மின்னாக்கம் செய்ய பரப்பரப்புடன், சுறுசுறுப்பாக முனைவார். அவருக்குக்காக, தற்காலிகமாக, என்னுடைய ‘நோ கட் & நோ ஒட்’ கொள்கையை தளர்த்திக்கொள்கிறேன்.

முதலில் புரட்சிகரமான செய்தி: யாழ்ப்பாணம் அரசகுலத்தை சேர்ந்த வைத்தியலிங்கம், சுவாமி ஞானப்பிரகாசரான கதை. ஆறாவது பரராஜசேகரனின் வம்சத்தை சேர்ந்த இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார், இவர். ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார், உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அது புரட்சி தான்.

இன்று சுவாமியின் அஞ்சலி தினம். அவர் ஜனவரி 22, 1947 அன்று மறைந்தார். ஞானப்பிரகாசர் பன்மொழிப் புலவர். தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம், ஃப்ரென்ச், சிங்களம், தமிழ் முதலிய 72 மொழிகள் கற்றவர். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.1895 ஆம் ஆண்டு இறைபணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.

என் அதிர்ஷ்டம் அவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்ற நூலின் முதல் சில பகுதிகள் இணைய தளத்தில் கிடைத்தன. இரா.ஜனா. என்பவர், தமிழார்வத்துடன் 2006ம் வருடம், இரவு நேரங்களில் இணைத்திருக்கிறார். இந்த நூல், கிடைத்தவரை, நமது மரபு விக்கியில், இடம் பெறவேண்டும், சுபாஷிணி. நான் என் சார்பிலும், த.ம.அ. சார்பிலும் அவருக்கு, இங்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கீழே பதிவு.
இன்னம்பூரான்
22 01 2012
b1.png
இந்த படம் ஜெர்மானிய அரசு வெளியிட்ட தபால் தலை.
உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/ுவாமி_ஞானப்பிரகாசர்
*
 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தமிழரசர் உகம்.
ஆக்கியோன்: நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர்.

A CRITICAL HISTORY OF JAFFNA
THE TAMIL ERA
NALLOOR, SWAMY GNANAPRAKASR


உபோற்காதம்

"யாழ்ப்பாண வைபவ விமர்சனம்" என்னும் இச்சிறுநூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச்சரித்திர ஆராய்ச்சியையும், "யாழ்ப்பாண வைபவமாலை" எனப்பெரிய நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாளுவது.
"சன்மார்க்கப்போகினி"ப் பத்திரிகைகளில் அவ்வப்போது பாகம் பாகமாய் வெளிப்பட்டவைகளே இருந்தவிருந்தபடி இப் புத்தகமாக அச்சிடப் பட்டமையால், முற்ற எழுதி முடித்துப் பிரசுரஞ்செய்தோர் நூலுக்குரிய சிறப்புக்கள் சில இதனிடம் இல்லது கிடத்தலை வாசிப்போர் மன்னிக்குக.
யாழ்ப்பாணத்து பண்டைநாள வரலாற்றிந்கணுள்ள சிக்கல்களையெல்லாம் இந்நூல் அறுத்துவிடும் எனக் கூற அமையாது.எமது ஆராய்ச்சி அறிஞர்களால் மேலும் ஆரயப்படவேண்டுவதொன்று.எல்லாத்துறைகளிலும் முடிந்தமுடிபை எடுத்தோதுவதென்று, பலப்பல அருந்துறைகளில் புது ஆராய்ச்சியின்மேல் ஊக்கத்தை கிளர்த்திவிடுவதே இந்நூலின் கருத்தாமென அறிக.
ஆக்கியோன்


யாழ்ப்பாண வைபவமாலையின் முதனூல்கள்.
வட இலங்கையின் சரித்திரத்தை வரியறைசெய்யச் சமீபகாலத்திற் தலைப்பட்டாரெல்லாம் தமக்கு முதநூலாகக்கொண்டது, மாதலை மயில்வாகனப் புலவர் என்பார் இயற்றிவைத்த "யாழ்ப்பாண வைபவமாலை"எனுங் கத்தியநூலேயாம். அந்நூல் இயற்றப்பட்டது கி.பி. 1736-ம் ஆண்டுவரையிலாமென்பது அதன் சிறப்புப்பாயிரமாயுள்ள பாவடிகளிற் சுட்டப்படுகின்ற மேக்கறூனேன்னும் ஒல்லாந்த தேசாதிபதியின் காலத்தைகொண்டு நிச்சயிக்கப்படும். அப்பயிரக்கவிக ளிரண்டனுளொன்று பின்வருவது:
உரராசர்தொழுகழன்மேக் கெறுனென்றேது
முலாந்தேசமன்னன்உரைத்தமிழற்கேட்
வரராச கைலாயமாலை தொன்னூல்
வரம்புகண்ட கவிஞர்பிரான் வையாபாடல்
பரராசசேகரன்றன்னுலாவும்,காலப்
படிவழுவாதுற்றசம்பவங்கடீடும்
திர ராசமுறை களுந் தேர்ந்தியாழ்ப்பாணத்தின்
செய்திமயில்வாகனவேன்செப்பினேனே.
இப்பாவடிகள்தாமே மயில்வாகனப்புலவர் தமது வைபவமாலைக்கு ஆதாரமாய்க்கொண்ட முதனூல்க ளிவையெனவும் நமக்குத் தெரிவிக்கின்றன. அவை (1) கைலாயமாலை, (2) வையாபாடல், (3) பரராசசேகரனுலா, (4) இராசமுறை என்பன. இந்நூல்கள் நான்கும்தமிழரசர் காலத்தியே விபரிப்பவை. பின் வந்த பறங்கியர்காலமும் ஒல்லாந்தர்காலத்தின் முற்பகுதியும் எனு மிவைகலைப்பற்றீய சம்பவங்களை, மயில்வாகனப்புலவர், யாதோர் முதனூலின் துணைகொண்டன்று கன்னபரம்பரையின் துர்ப்பெலமான உதவியோடுமட்டும் விரைந்துள்ளாரென்பது அவர் இவையிரண்டு காலங்களையுஞ் சுட்டிப்பேசுமிடத்து நிகழ்த்தும் பல சரித்திர மாறுபாடுகளால் விளங்கும். இது சின்னாட்களின்முன் வெளிப்பட்ட "பறங்கியர்காலத்து யாழ்ப்பாண அரசர்சரித்திரம்" எனும் ஆங்கிளநூலைப் படிப்போர்க்குக் கரதலாமலகமாகும். தமிழரசர்காலத்தை விபரிக்கும் முதனூல்கள் நான்கனுள்ளும் இன்னதின்னது வைபவமாலையின் இன்னின்னபாகத்துக்கு ஆதாரமாயிற்றென ஆராயுமிடத்து: (1) யாழ்ப்பாடியின் குடியேற்றம்வரைக்கும் பேசப்படுமவற்றுக்கு வையாபாடல் ஆதாரம். (2) கூழங்கையாரியச் சக்கரவர்த்தியின்கீழ் மீண்டும் நடந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணக் குடியேற்ற வர்ணனிக்கு கைலாயமாலை ஆதாரம். (3) யாழ்ப்பாண அரச்களின் வரிசையையும் பரராசசேகரனையும் சுட்டிய விபரங்களுக்கு இராசமுறையும் பரராசசேகரனுலாவும் ஆதாரமாகும் எனக் காணலாம். இம்முதனூல்களுள் வையாபாடலின் வழுநிறைந்த ஒரு ஏட்டுப்பிரதி இப்போதே யாழ்பாணம் மத்தியக்கல்லூரியாசிரியருளொருவராகும் {சிறீ} அருட்பிரகாசம் அவர்களாற் கண்டெடுக்கப்பட்டது. வையாபாடல் வழு நிரம்பியிருபினும் அதன் சாரத்தைப் பண்டை அறிஞரொருவர் வசனரூபமாக்கித்தந்த "வையா" அனும் நூல் (*இது ஏட்டுபிரதிகளினென்நெடுத்து நம்மால் அச்செற்றப்பெற்றது. அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலை 1921) நமது ஆராய்ச்சிக்குப் போதிய ஆதாரமாகும். அவ்வசனநூலே இங்கு எம்மாலெடுத் தலப்படுவது. கைலாயமாலை நல்லூர் {சிறீ} கைலாசப்பிள்ளையவர்களால் அச்சிலிடுவிற்கப்பெற்றது. இராசமுறையும் பரராசசேகரனுலாவும் எங்கேனும் மறைந்துகிடக்கின்றனவோ, அன்றி, இறந்துப்பட்டனவோ அறியோம். இவையிரண்டு அரியநூல்களும் வெளிப்படுவதற்குமுன் வைபவமாலையின் அரசர்வரிசை சம்பந்தமாக நாம் யாதும் கூற அமையாது. ஆதலால் அப்பாகத்தையொழித்து அதற்குமுந்திய பாகங்களினையே இங்கு ஆராய்ந்து செல்லுவோம்.





ஆரம்ப அதிகாரம்.

வையா, கயிலாயமாலை.

வையாவிலிருந்து மயில்வாகனப்புலவர் எவ்வாறு தமதுநூலின் முதற்பாகத்தை, அதாவது யாழ்ப்பாடியின் குடியேற்றம் வரையுமுள்ள சம்பவங்கலை,எடுத்து வழன்கினாரென்பாது இப்பொது ஆராயத்தக்கது. வையா இராமாயணத்திலுள்ள விபீச/ணனது உபாக்கியானத்தோடு தொடங்குகின்றது. இவ்வுபாக்கியானத்தின்படி தசரத இராமர் இராவணனைக்கொன்று இலங்கையை அடிப்படுட்தியபின்னர், விபீச/ணனுக்கு அவ்வரசுரிமையைக் கொடுத்துப் பட்டங்கட்டிவைத்துப்போயினார். அவ்விபீச/ணன் சபையில்யாழ்பவாசித்துக்கொண்டிந்தானொருவன் அந்நாளில்மணற்றிடல் என்றறியப்பட்ட வடஇலங்கைக் குடாநாட்டைக் காடுவெட்டத் திருத்தித் தொப்புக்களும் தோட்டங்களும் வகுத்துக்கொண்டு, வடநாடுசென்று ஓராயிரங் குடிகளை அழைத்துவந்து அங்கு குடியேற்றியபின், அக்குடிகளையாள அரசனொருவன் வேண்டுமென்னவுன்னி, வடநாடு மதுரைக்குப்போய் தசரதனின் மைத்துனனாகிய குலகேதுவினிடம் ஓர் அரசகுமாரனைக்கேட்டலும், அவன் ஒருகை கூழையனாயிருந்த த்ன் மகனொருவனை மகிழ்ந்து அளிக்க, இவ்வரசமைந்தன் விசய கூழங்கைச்சகரவர்த்தி எனும் பெயரோடு யாழ்ப்பாணத்தை ஆண்டான் என்றாகிறது. இது கலியுகம் 3000 ( அதாவது கி.மு.101ம் ஆண்டில் நடந்ததென்பது வையா. மயில்வாகன்ப்புலவர் இக்கதையத் தமது நூலிற் புகுத்தியுள்ளார். ஆயின் விபீச/ணனோ புரதானகாலத்தின் புரானகீர்த்திகளில் ஒருவனாவான். சிங்கள மகாவமிசமூலாமாய் அறிந்திருந்த சிங்களர்காலத்து யாழ்ப்பாண வரலாறுகளுமோ தள்ளிவிடப்படவிடப்பாலனவல்ல. ஆதலால் புலவர், வையாவின் வரலாற்றுக்குள்ளே சிங்களர் சரித்திராம்சங்களையும் சொருகிம், விபீச/ணனின்பின் விசயராசன் இலங்கைக்கு வந்தமையும், அவன் யாழ்ப்பாணட்தில் ஓர் கோயில் கட்டினானெனவும், சீயத்தினின்று (*சீனர் கள்ளர் எனும் இருசொற்களும் சிங்களராயின என்பதும் ஒரு பொருத்தமில்லாத ஐதீகம். (இடப்பெயர்வரலாறு பக். 19) சிலாபத்தில் கப்பற்சேதமடைந்து கரைபிடித்த சீனர் சிலர் தங்கள்மொழிக்கிசைய சிலாபத்தை சினிலம் என அழைத்ததினால் சிங்களம் எனும் பெயர் உண்டாயிற்று எனும் மற்றொரு நாடோடிக்கதையைப் போர்த்துகீசர் குறிப்பிட்டுள்ளார். (Queiros பக். 3) ) சிங்களரைக்கொணர்ந்து யாழ்ப்பாணத்திலும் பிறாண்டும் குடியேற்றினான் எனவும் சொல்லப்பட்ட ஐதீகங்களையும் எடுத்தோதி அதன்பின்னே யாழ்ப்பாடியின் வரலாற்றை முன்வரலாறுகளுக்கிணங்க இசைத்துக் கூறுகிறார்.


ஆரம்ப அதிகாரம் (3)
வன்னியர்கள் வரவு.

அப்பால் யாழ்ப்பாடியினது குடியேற்றத்தின்பின் மாருதப்பிரவல்லி கீரிமலைத்தீர்த்திற் படியவந்தனளெனவும் அவள் உக்கிரசிங்கனை மணந்து பெற்ற வரராசசிங்கன் எனும் புதல்வனுக்குப் பாரியாகுமாறு வடநாட்டுக் க்ன்னிகை யொருத்தியை வன்னியர் அறுபதின்மர் இட்டுக்கொண்டு வந்தனரெனவும் வையா கூறும். வையாவின் சரித்திரப்படி இவ்வன்னியருள் ஒருவன் தம்பதிகளோடு கண்டிநகரிற் றங்கிவிட, ஏனையோர் அடங்காப்பறறை வெற்றிகொண்டு யாழ்ப்பாண அரசனுக்குக் கப்பங்கட்டி அதனையாண்டனர். அன்னோரே யாழ்ப்பாணம்முதல் கொட்டியாராமீறாக இந்நாளில் நாம் காணும் குடிமைகள் அடிமைகள்என்னும் சாதிவர்க்கங்களை இந்தியாவினின்றும் வரித்தனர். ஆயின் காலாகதில் பறங்கியரோடு (!) மூண்டபோரில் வன்னியருள் ஐம்பத்துநால்வர் மாள ஐவர் வடகரைக்கு மீள வெளிப்பட்டார். அவர்வழியில் ஆழியிலாழ்ந்து உயிர்நீத்தனர். இதற்கிடையில் இலங்கைக்கு சென்றிருந்த தம் நாயகர்களைத்தேடி வன்னிச்சிகள் அறுபதின்மரும் தங்கள் கத்திக்காரர் ஆதியாம் மெய்க்காப்பாளர்கள் சகிதமாய் இத்துவீபத்தைநோக்கி வரும்வழியில், ஐம்பத்துநால்வர் வன்னியர்கள் இறந்துபட்ட அமங்கல செய்தியைக் கேள்வியுறுதலும், அத்துணைப்பட்ட வன்னிச்சிகள் தீய்ப்பாய்ந்து உயிர்மாய்த்துக்கொண்டனர்.எஞ்சியவர்களுள் ஒருத்தி கண்டிமாநகர் சென்று தன் பர்த்தாவைச்சேர, ஐவரும் தங்கணவர்கள் ஆழிவாய்ப்பட்டமையறியாது வன்னியையடைந்து பின் மறுமணம் புரிந்துகொண்டு அப்பாகங்களைப் பிரித்து வன்னிபம் என்னும் பெயரோடு அரசுசெலுத்தி வாழ்ந்த்தனர். அந்நோரின் புதுநாயகர்கள் அயுதாந்திகள் எனப்பட்டனர். தமிழரசர் காலத்தையும் பறங்கியர் காலத்தையும் அடிதலைமாற்றிப் புரட்டி ஓதும் இக்கதையூடே வெடியரசன் மீரா எனும் இருவர் கடற்கொள்ளைக்காரரின் கதையும் சொருகப்பட்டுள்ளது. மதுரையரசன் கண்ணகைக்குக் காற்சிலம்புசெய்ய(!) மீகாமனென்னும் கரையாரத்தலைவனை இலங்கைக்கனுப்பினான். இவன் வெயரசனையும் மீராவையும் வெம்போரில் முதுகிடச்செய்து ஐந்தலை நாகத்தினிடம் நாகரத்தினங் கவர்ந்த்து சென்றபின், வெடியரான் மட்டக்கிளப்பிலும் மீரா விடத்தீவிலும் குடியேறி, முந்தியவிடத்திற் ஒரு மூக்குவக்குறிச்சியையும் பிந்தியதில் ஒரு மகம்மதிய குறிச்சியையும் உண்டாக்கினர். இதுகாறும் கூறிய காலவரம்பற்ற செய்திகள் வையாவில் உள்ளவைகள். மயில்வாகனப்புலவர் இவைகளை வேறொரு முதனூலிற்கூறிய செய்திகளோடு பொருத்தி ஒருவாறு காலநியதிக்குட்படுத்தவேண்டியவரானார். அது கோணேசர் கல்வெட்டு என்னும் பழையவரலாறு. இக்கல்வெட்டு தசி/ண கைலாசபுராணத்தின் இரண்டாம்பதிப்பில் உடன்பதிப்பித்திருத்தல் காண்க. கல்வெட்டு பத்தியரூபமும் கத்தியரூபமுமானது. பத்தியரூபமே முற்பட்டதுபோலும். இனி, கல்வெட்டின்படி இலங்கைக்கு வன்னியர்களை ஆதியில் கொணர்ந்தவன் கோணேசர்கோயிலை ஜீர்ணோத்தரஞ்செய்த குளக்கோட்டன் என்னும் அரசனாம். ஆதலால் மயில்வாகனப்புலவர் இவ்வரசனே வன்னியர்களை அழைப்பித்தானென்று ஒத்துக்கூறி வையாவின் கூற்றையும் இதனோடு பொருத்துகிறவராய், "பாண்டியநாட்டிலிருந்து ஐம்பத்தொன்பது வன்னியர்களும் வந்து அவர்களுடன் குடிகொண்டார்கள்"என வரைகின்றார். கல்வெட்டின்கூற்றை மேற்கொண்டதினால், வையாவுக்குமாறாய் வான்னியர்வரவை மாருதப்பிரவாகவல்லியின் வரலாற்றுக்குமுன் வைக்கவேண்டியதாயிற்று. வன்னியரின் முதல்வரவோடு குளக்கோட்டன் புதுக்கிய செய்தி சம்பந்தப்பட்டுவிட்டது. ஆயின் மயில்வாகனப்புலவர்க்கு கோணேசர்கோயிலைப்போல நகுலேசர்கோயிலும் பழமையுடையது எனத்தோன்றியமையால், இதன் பழமையை நிலைநாட்டும் பொருட்டு குளக்கோட்டன் வரலாறு கூறுமுன் கீரிமலைக்கோவிலோடு கன்னபரம்பரையாய்ச் சம்பந்தப்பட்ட நகுலமுனிவர் கதையை குறித்துப்போகின்றார். கல்வெட்டின் வன்னியரையும் வையாவின் வன்னியரையும் பொருத்திக்காட்டியபின், வையா கூறிய கடற்கொள்ளைக்காரர் கதையையும் எடுத்தாள்கின்றார். ஆயின் அவரிருவர் நாமங்களும் மாறிவிட்டன. உசுமன்றுறை சேந்தன்களம் எனும் இரு இடப்பெயர்களுக்கும் முறையே உசுமனும் சேந்தனுமென்றாகி உசுமன் மட்டக்கிளப்பிலுள்ள முக்கியக்குடியேற்றத்துக்கு காரணமானான். சேந்தன் கீரிமலைக்கு அதிதூரமான வொருகரையில் குடிகொண்டான். வையா வன்னியர்களைச் சுட்டிக்கூறிய மற்றைய வரலாறுகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ஆயின், அவைகள் மிகத்திரிவுற்று சங்கிலியரசன் காலமளவில் இறக்கிவைக்கப்பட்டன. வையாவின் வரலாறு ஆதிவன்னியருள் ஐவர் கடலில் ஆழ்ந்தமையையும், அறுபதின்மர் வன்னிச்சியர் அத்துணை கத்திக்காரர் ஆதியரோடு புறம்போந்துவந்தமையும், அவருள் ஐம்பத்துநால்வர் தற்கொலை புரிந்துகொண்டமையும்கூறும். மயில்வாகனப்புலவர் பின்வருமாறு மாற்றிச் சங்கிலிகாலத்தில் வைப்பார். வன்னியர் நாற்பத்துஒன்பதின்மர் தம்வன்னிச்சிகளோடு இலங்கையிற் றங்குலத்தாரை அடையவருகையில் ஒருவனையொழிந்த வன்னியர் ஏனையோரெல்லாம் ஆழிவாய்ப்பட்டனர். வன்னிச்சிகளும் ஒழிந்த கரைப்பிட்டி வன்னியனும் யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த்து அங்கங்கே குடியேறினர். பின் கரைப்பிட்டி வன்னியன் குற்றுண்டிறக்க, அவன் வன்னிச்சியும் தற்கொலைசெய்து உயிர்நீத்தாள். அவர்களூளியத்திலமர்ந்திருந்த நம்பிகள் அறுபதின்மரும் நழுவிகளாய்க் குலப்பிரஸ்/டமடைந்தனர். இவ்வன்னியர்வரலாறு வையாவிலும் கல்வெட்டிலுமிருந்து எப்படிக்கூட்டியும் பிரித்தும் திரித்தும் வைபவமாலையில் வரையப்பட்டிருக்கின்றதென்பது வன்னியர், வன்னியர் வன்னிச்சிகள் கத்திக்காரரின் தொகையும் செய்திகளும் என்னும் வரலாறுகளை ஒப்புநோக்கி உய்த்துணரும்போது தெற்றென வெளிப்படும். அறுபதின்மர் வன்னியர்கள் அரசகுமாரத்தியொருத்திக்குப் பரிவாரமாய் இலங்கையரசனொருவனிடம் அவளை அழைத்துப்போந்தார் எனும் வையாவின்கதை, விசயராசனுக்கு பாண்டிநாட்டினின்று பெண்வரிக்கப்பட்ட கதையின் ஓர் திரிபாகலாம் என்பதும் அறிஞர் பரிசீலனைசெய்யத்தக்கதொன்று.



ஆரம்ப அதிகாரம் (4)

மாருதப்பிரவாகவல்லி 

வையாவில் மாருதப்பிரவாகவல்லியைச் சுட்டிக் கூறப்பட்டது மிகச் சிறிதேயாம். இவள் கூழங்கைச் சக்கரவர்த்தியின் மாமனான திசைஉக்கிரசோழனின் குமாரி. தன் சகோதரனான சிங்ககேதுவோடுங்கூடக் கீரிமலையுஅருவியிற் தீர்த்தமாடப் புறப்பட்டுவந்தவள், அங்கு தன் குதிரைமுகம்மாறுண்டு அச்சுனையிருந்தவிடத்திற்கு மாவிட்டபுரமெனும் பெயர்வழங்கக்காணமாயினாள். அதற்பின் இருவரும் கதிர்காமதல யாத்திரைசெய்து மீளும்வழியில் உக்கிரசேனசிங்கனெனும் இலங்கையரசனுக்கு சிங்கமுகமும் வாலும்பொருந்திய ஓர் மைந்தனைப் பெற்றனள். இவன் பெயர் வரராசசிங்கன். இவனை மணம்புரியவந்த சோழநாட்டு அரசகுமாரிக்குப் பரிவாரமாகவே முன்கூறிய வன்னியர் அறுபதின்கள் இலங்கையைச் சேர்ந்தனர்.

ஆயின் கைலாயமாலை மாருதப்பிரவாகவல்லிகதையில் ஒரு சிறுமாற்றத்தைச் செய்திருக்கின்றது. "மன்னர்மன்னனெனுஞ் சோழன்மகளொருத்தி" சேடியர்களோடும் சேனையோடும் வந்திறங்கிக் கடலருவித் தீரத்தத்திற்படிந்தபின், மிகு காவலரன்பரப்பிக் கூடாரமமைத்துக்கொண்டு சப்பிரமஞ்சத்தின்மீது துயில்கொள்ளும்போது, குமரக்கடவுளது மலையாகும் கதிரமலையில் வாழும் சிங்கமுகம்வாய்ந்த அரசன் அர்த்தசாமத்தில் கீரிமலைசேர்ந்து காவல்கடந்துவந்து அம்மாதைக் கைப்பிடித்துக்கொண்டு தன் பழைய மலைமுழைஞ்சிற்கேகி அங்கவளை மணம்புரிந்து நரசிங்கராசன் எனுந் துரைசிங்கத்தையீன்றான். பிந்தியதொரு பெண்பிறந்தாள். இருவருக்கும் நன்முகூர்த்தமிட்டு மணஞ்செய்துவைத்தனர். இந் நரசிங்கராசன் செங்கோலரசு செலுத்தும்நாளிலே பாவலர்கள் வேந்தனாகும் யாழ்ப்பாணன் காவலன்மீது கவிதைசொல்லி பின்னாள் யாழ்ப்பாணமெனப்பட்ட மணற்றிடலைப்பரிசிலாகப்பெற்றனன். இது கைலாயமாலை. ஆயின் வையாவில் யாழ்ப்பாணத்தை மாருதப்பிரவாகவல்லிக்கு முற்படவைத்துள்ளது என்பதை நினைந்துகொள்க.

வையாவையும் கைலாயமாலையையும் முதனூள்களாகக்கொண்டெழுந்த வைபவமாலையில் இக்கதை மேலும் பலகூட்டி விரித்தெழுதியிருக்கிறது. மயில்வாகனப்புலவர் உக்கிரசிங்கனுக்கு முதனூல்களில்லாத முற்சரித்திரமொன்று ஆக்கிக்கொண்டார். அவன் விசயராசன் சகோதரன்மரபிற் பிறந்தவனாகிறான். வடதிசையினின்று வெகுதிரளான சேனைகளுடன்வந்து போராடி, (விசயராசன்மரபிலுள்ளோர்) சிலகாலமாய் இழந்துபோன இவ்விலங்கையில் அரைவாசியைப்பிடித்துக்கொண்டு கதிரைமலையிலிருந்தரசாளுகிறான். அப்பாற் தன்சிங்கமுகமும் மாற்றுவிக்கப்போலும் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி முற்காலம் சோழராசனொருவன் வந்து பாழையமிட்டிருந்த காரணத்தால் வளவர்கோன் பள்ளமெனப் பெயர்தாங்கிய ஓரிடத்திற் தானும் பாளையம்போட்டிருக்கிறான். உக்கிரசிஙன் வட இலங்கையை ஆண்டனன்னென வைத்துக்கொண்ட மயில்வாகனப்புலவருக்கு இத்தருணம் தொண்டமனாறு எனும் இடப்பெயர்க்கு ஒர் சப்தோற்பத்தி கொடுக்க வாய்ப்பாயிற்று. (*மனோகற்பனையில் மயில்வாகனப்புலவரையும் புறங்கண்டாரொருவர் தொண்டமானாற்றுப் பெயர் உற்பத்தியைத் தமது யாழ்பபாணச் சரித்திரத்தில் விளக்கியிருக்கின்ற விசித்திரத்தை அந்நூல் 2-ம் பதிப்பு 12-13 பக்கங்களிற் காண்க) தொண்டமானறு தொண்டைமானால் அகழ்விக்கப்பட்டது என முற்காலத்தாருள் ஓர் ஐதீகம் வழங்கியிருக்கலாம். அதனைத் துணையாய்க்கொண்டு தொண்டைமான் என்னுமரசன் கரணவாய் வெள்ளப்பரவை எனுமிடங்களிலிருந்து மரக்கலங்களில் உப்பேற்றிச்செல்ல ஒர் ஆறுவெட்டும்பொருட்டு உக்கிரசேனன் கீரிமலையிலிருக்கும்நாளில் உத்தரவு கேட்கவந்தான்எனப் புலவர்வரைகிறார். அப்பால் குளக்கோட்டன் கதையைமுன்வைத்து வன்னியர்வர்வை அன்னோன் புதுக்குவித்த கோணேசர்கோவிலோடு சம்பத்தப்படுத்திக்கொண்டமையால், கல்வெட்டின்படி வன்னியர்கள் அக்கோவிலுக்குப் பணிவிடைசெய்ய உரிமைபூண்டுள்ளமையும் வன்னியநாடு எஞ்ஞான்றும் வடஇலங்கை அரசருக்குச் சேர்ந்ததாயிருந்த ஐதீகத்தையும் ஒற்றுமைப்படுத்துமாறு, உக்கிரசிங்கன் வன்னிமார்க்கமாய் செல்லுகையில் வன்னியர்கள் எழுவருமெதிகொண்டு திறையளிக்க அத்திறையக் கோணேசர்கோவிலுக்குச் செலுத்த உடன்படிக்கை பண்ணுவித்துச்சென்றான் என எம்புலவர் இசைப்பர்.


இதன்பின் மாருதப்ப்பிரவாகவல்லி என்பாள் மாருதப்பிரவாகவல்லியென்னும் பெயரோடு களரியிற் தோற்றுகிறாள். இவள் குமாரத்திபள்ளத்திற் பாளையமிறங்கி நகுலமுனிவரைத்தரிசித்து அவர்சொற்படி தீர்தமாடிக் குதிரைமுகம் மாற்றப்பெற்றாள் என்பது பழைய வைபவமாலை. ஆயின், வேறு பிரதிகளில் ஆதியிற் பரமசிவன் பார்வதியம்மன் சகிதமாய்த் திருத்தலம் பகுதியில்வசித்து அம்மன் ஸ்ஞானஞ்செய்வதற்கு அதனருகில் கண்டகிநதியையழைத்துக் கீரிமலைத்தீர்தமாயமைத்த பெற்றியையும் அதிற் கிரேதயுகந்தொட்டுத் தேவர் இருடிகள் ஆதியோரல்லாம் தீர்த்தமாடியதையும் நகுலமுனிவர் நகுலமுனிவர் மாருதப்பிரவாகவல்லிக்கு அறிவுறுத்திய கதையையும் விரிவாய்ப்புகுத்தியிருக்கிறது. அப்பால் மாவிட்டபுரப்பெயர்க்கு ஊர்க்கதைப்படி உற்பத்தி சொல்லியபின், அவள் கட்டுவித்த கந்தசுவாமிக்கோயில்வரலாறு வருகிறது. கோவிலோடு, அக்கோவில் அருச்சகராகும் பெரியமத்துள்ளர் அற்புதாய் வட்கரையினின்று அனுப்பப்பெற்ற வரலாறும், காசி தில்லை பிராமணக்குலங்களின் ஐதீகமும் இசைக்கப்பட்டிருக்கின்றன. பெரியமனத்துள்ளர் வரவோடு காங்கேசன்துறைப்பெயர்க்கு ஊர்க்கதையுற்பத்தியும் காட்டப்படுவாதாயிற்று. உண்மயில் அது காங்கேயன் சீமா (மாவிட்டபுரத்தில்) காங்கேயன்கலட்டி (தையிட்டியில்)எனும் இடங்களுக்கு அண்மையிலுள்ளதாதலால், ஓர் அதிபன்பெயரோடே சம்பந்தப்பட்டாதல் வேண்டும்என்பது ஒருதலை. இதன்பின்னே, கீரிமலையில் கட்டப்படும் கோவிலின் பிரக்கியாதியைச் செவிமடுத்துப்போலும், உக்கிரசிங்கன் அங்குவந்துற்று மாருதப்பிரவாகவல்லியை வரித்துக்கொண்டமை முன்னில்லாத பலவரலாறுகளோடு சொல்லப்படுகிறது. கொவில்கட்டியசெய்தி சொல்லவொடுத்தொண்டமையால், உக்கிரசிங்கனை அத்திருப்பணி முட்யும்வரையும் தம் புதுப்பத்தினியோடு மணற்றிடலிற் றங்குகிறவனாகக்காட்டவும் வேண்டியதாயிற்று. பின் கதிரமலைசென்று விவாகக்காரியங்களை முடித்துக்கொண்டனன். விரைவில் அரசன் இராசதானியை மாற்றிச் செங்கடநகரிக்குவர அங்கு அரசானி வாலசிங்கராச எனும் வாலுள்ள குமாரனையும் பின் செண்பகவதியென்னும் குமாரியையும் பயந்தாள். இருவரும் தம்பதிகளாய் விவாகம்முடித்து வாழுநாளில், தந்தையிறக்க மைந்தனே சயதுக்கவரராசசிங்கனெனும் பட்டநாமத்தோடு அரசுபுரிந்து யாழ்பாடிக்கு மணற்றிடரை நல்கினான்.
  • -#-
Retrieved with thanks on January 22, 2012, from http://tamilera.blogspot.com/2006/01/1.html


Subashini Tremmel Sun, Jan 22, 2012 at 4:12 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

மிக்க நன்றி திரு.இன்னம்பூரான்.
இதனை இணையத்தில் வழங்கியவருக்கு நன்றி கூறி மரபுவிக்கியில் இணைத்து வைப்போம்.

சுபா

2012/1/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




 
 
 


கி.காளைராசன் Sun, Jan 22, 2012 at 4:23 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/1/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
என் அதிர்ஷ்டம் அவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்ற நூலின் முதல் சில பகுதிகள் இணைய தளத்தில் கிடைத்தன
அறியத்தந்த ‘இ‘அவர்களுக்கு நன்றி

அன்பன்
கி.காளைராசன்


Geetha Sambasivam Sun, Jan 22, 2012 at 8:31 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
புதியதொரு தகவல்.  அளித்தமைக்கு நன்றி.  மிச்சம் நிதானமாய்ப் படிக்கணும்.

2012/1/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி 22
வைபோகம்! வைபோகமே!

நன்முத்து போன்ற ஒரு வரலாறு மடியில் வந்தமர்ந்தபோது, சுநீதியின் மடியில் துருவன் அமர்ந்தது போல தோன்றியது. இன்று யாழ்ப்பாண வைபவ தரிசனம் கிடைத்தவுடன், நமது ஸுபாஷிணியை நினைத்துக்கொண்டேன். இந்த 1928ம் வருட நூலை மின்னாக்கம் செய்ய பரப்பரப்புடன், சுறுசுறுப்பாக முனைவார். அவருக்குக்காக, தற்காலிகமாக, என்னுடைய ‘நோ கட் & நோ ஒட்’ கொள்கையை தளர்த்திக்கொள்கிறேன்.

  • -#-
Retrieved with thanks on January 22, 2012, from http://tamilera.blogspot.com/2006/01/1.html




Tthamizth Tthenee Mon, Jan 23, 2012 at 2:50 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கருவூலத்தை  கொஞ்சம்  கொஞ்சமாக  அவிழ்க்கும் இன்னம்பூரார் மூலமாக அனேக ரகசியங்கள், சரித்திரங்கள், வெளிவருகின்றன
 
தொடருங்கள் திரு இன்னம்புரார் அவர்களே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments:

Post a Comment