Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி: 4 நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?




அன்றொரு நாள்: ஜனவரி: 4 நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?
2 messages

Innamburan Innamburan Wed, Jan 4, 2012 at 4:48 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி: 4
நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?

பொருளியல் (எகனாமிக்ஸ்) உளவியலின் வெளிப்பாடு என்பர், சிலர். அது ஒரு தத்துவ சாத்திரம் என்பர், சிலர். அதை ‘பொருளாதாரம்’ என்று சொல்வதில் என் மாதிரி சிலருக்கு உடன்பாடு இல்லை. சொல்லப்போனால், அதனுடைய இயற்பெயர்: அரசியலின் நிதி மேலாண்மை. (பொலிட்டிக்கல் எகானமி). அதனால் தான், அரசியலின் அரிதாரங்கள் ‘பொருளாதாரம்’ பேசுகின்றன. அவற்றில் சில: முதலாளித்துவம், பொதுவுடமை, அவற்றின் கலவை, அரசின் ஆளுமை, சந்தையின் நிரவல், நடனம், தாண்டவம், கூத்து, பொதுவுடமை சால்வையின் உள்ளே முதலாளித்துவம், கம்யூனிசத்தின் கொடுங்கோல் மறுபக்கம். பொருளியல் பற்றியும், அதன் நிதர்சனம், மாயைகள், முரண்கள், வெவ்வேறு கருத்துக்களங்கள், உள்குத்து, வெளி மோதல்கள், அடிப்படை, தத்துவநோக்கு, மரபு, தொன்மை பற்றி எல்லாம் எழுத நினைத்தேன், ஒரு காலம். அது ஒரு தடித்த மின்னூல். குறைந்தது 300 இடுகைகளை வைத்து பின்னவேண்டிய இழை. இடையில் புகுந்து திசை மாற்றப்படுவதைத் தடுக்கமுடியாது. தாங்காது, ஐயா. அது சரி, ‘படிக்கப்போவது யாரு?’ என்று கேட்கிறீர்களா? நல்ல கேள்வி தான். அதனாலும், விட்டு விட்டேன். எதற்கும் இன்று ஒரு அச்சாரம்: காந்தீய பொருளியல். இது நிற்க.

ஜனவரி 4, 1892 அன்று தஞ்சை மண்ணில் உதித்த ஜோஸஃப் செல்லதுரை கார்னீலியஸ், சென்னை கிருத்துவ கல்லூரி மாணவர். இங்கிலாந்து சென்று நிதி ஆலோசனை (சார்ட்டெட் அக்கவ்டன்சி) படித்தார். பிற்காலம் அமெரிக்கா சென்று சிராகுஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படித்து, கொலம்பியா பல்கலைக்கழகம் சென்று, பொருளியல் முதுகலை பட்டம் பெற்றார். தாதாபாய் நெளரோஜி வழித்தடத்தில் அவர் இந்தியாவின் ஏழ்மையை பற்றி ஆற்றிய உரையை பிரபல ந்யூ யார்க் டைம்ஸ் இதழ் சிலாகித்தது. அதை படித்த பேராசிரியர் செலிக்மன் அவர்கள், நம் செல்லதுரையை, அதை மையமாக அமைத்து, ஆய்வு செய்ய பணித்தார். அதன் பயனாக,  பிரிட்டீஷ் கலோனிய அரசின் ‘நிதி மேலாண்மை’யின் மட்ட ரக நிர்வாகத்தை சான்றுகள் பல அளித்து, குறை கூறினார். அந்த காலகட்டத்தில் டாவன்போர்ட் என்ற பேராசிரியர் செல்வக்குவிப்பு ஒன்றே இலக்கு என்று வாதிக்க, அவருடன் விவாதித்தின் பலனாக, ‘அரசியலில் நிதி மேலாண்மை’ முடிபுகளுக்கு நேர்மையும் வாய்மையும் இல்லாவிடின், அவை சமுதாயத்திற்கு நலன் செய்ய இயலாதவை என்று தீர்மானித்தார், தனது ஆய்வு கட்டுரையில்.
இந்தியா வந்த செல்லதுரை காந்திஜியின் கருத்துக்கேட்க, இருவரும் ஒருமித்தக் கருத்து உள்ளவர்கள் ஆயினர். செல்லதுரையும், மூதாதைகளின் நினைவு கருதி, ஜே.சி.குமரப்பா ஆனார். காந்தீயம் என்ற கடலில் சங்கமம் ஆனார். ஒரு நகைச்சுவை சம்பவம். செல்லதுரை ஆங்கில நடை, உடை பாவனைகளை களைய நாள் பிடித்தது. ஜான் மெக்கன்ஸி என்ற நண்பரை காண சென்றபோது, காந்தி குல்லா வரை மாறியிருந்தார். ஆனால், மேற்கத்திய பண்பின் படி, ஜான் மெக்கன்ஸியை பார்த்தவுடன், தொப்பியை கழட்டுவது போல், குல்லாயை கழட்டினார். சிரித்தபடி,மெக்கன்ஸி: “குமரப்பா! நீ இந்திய பண்புகளை கற்றுக்கொள். குல்லாவை கழட்டாதே. செருப்பைக் கழட்டு.” என்றார். காந்தி மோஹம் குமரப்பாவை கட்டிப்போட்டது. கிராமத்தை மையமாக வைத்து அரசியலில் பொருள் நிலவரத்தை கையாளுவது தான் இவருடைய பொருளியல் கருத்தின் கரு. அதுவும் சரி, காந்தீய பொருளியல் அணுகுமுறைகளும் சரி, இந்தியாவில் எடுபடவில்லை. எனவே, காந்தீய பொருளியல் தனநாசத்த்தை விளைவித்தது என்பது தவறு. குமரப்பா அவர்கள் ‘அரசியலில் நிதி மேலாண்மையை’ தவிர்த்து, மதுரை சென்று, கிராமீய புனருத்தாரணப்பணிகளில், தன் இறுதி நாட்களை செலவழித்தார். காந்திஜி மறைந்த ஜனவரி 30 அன்று 1960ல் மறைந்தார்.
ஜே.சி. குமரப்பா அவர்களில் ‘அரசியலின் நிதி மேலாண்மையின்’ கரு, தனிமனிதனின் சுதந்திரமும், அவனு (ளு)க்கு வழங்கப்படவேண்டிய தர்மமும். அதற்கு அடித்தளம், பொருள் நிலவர விடுதலை. பெரும்பான்மையினர் கிராமங்களில் வசிப்பதால், கிராமத்தின் பொருள் நிலவரத்தின் ஆரோக்கியம் தான் இந்திய சமுதாயத்தின் முதுகெலும்பு. மேலும், பசுமையான சுற்றுப்புற சூழலுக்கு தனி மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளை, அவர் முன்வைத்தார். 1935லியே சோவியத் ரஷ்யா நமக்கு மாடல் அல்ல; அப்படி செய்தால், நோயை தீர்க்காத மருந்தை வைத்துக்கொண்டு திண்டாடுவோம் என்றார். சோவியத் ரஷ்யாவை இனங்கண்டு கொண்ட முதல் இந்திய அரசியல்வாதி, இவர் தான். ரயில்வே, மின்சாரம் ஆகியவற்றை, கிராமீய வாழ்வியலை குலைக்காமல், பயன் படுத்த முடியும் என்றார். இவருடைய சோவியத் மாடல் குறைகாணலை ஜெயப்பிரகாஷ் நாராயண் கடுமையாக சாடினார். நேருவும் சோவியத் பக்கம் சாய்ந்தார். இது ரத்னசுருக்கமல்ல. ரத்னசுருக்கத்தின் சாராம்சத்தின் வடிகட்டிய எஸென்ஸ் துளி. எனவே, ஜே.சி.கு. அவர்களின் ஆய்வு முடிபுகளையும், அவற்றை பின்பற்றி, இந்தியாவில் அவர் செய்த ஆய்வுகளையும், அவரது காந்தீய பணிகளையும் பற்றி மேலும் ஓரளவு புரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
இன்னம்பூரான்
04 01 2012
j.c.kumarappa

உசாத்துணை:


Geetha Sambasivam Thu, Jan 5, 2012 at 12:28 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஐயா,

செல்லதுரை என்றதும் கொஞ்சம் கூடப் புரியவில்லை.  பின்னர் ஜே.சி.குமரப்பா என்றதும் ஓரளவு புரிந்தது.  கிராமங்களிலேயே இன்று இந்த கிராமியப் பொருளாதாரத்துக்கு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.  அந்த அளவுக்கு வெளிநாட்டு மோகம் அடிமையாக்கி இருக்கிறதோடு இலவச மோகம் அதை விட மோசமாக மக்களைச் சோம்பேறி ஆக்கி உள்ளது.

2012/1/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி: 4
நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?


j.c.kumarappa

உசாத்துணை:




No comments:

Post a Comment