அன்றொருநாள்: மார்ச் 31:
பட்ஜெட்டும் ஃபிட்ஜெட்டும்!
பட்ஜெட் எல்லாருக்கும் ஃபிட் (விருப்பப்படி) ஆகாது என்பதால், ஃபிட்ஜெட் (அலுத்து, சலித்துக்கொள்வது) மக்களின் உரிமை; அறியாமையும் கூட. அம்பானிக்கு பிடித்த பட்ஜெட் சப்பாணிக்குப் பிடிக்காது. மக்கள் நலம் நாடும் அரசு எல்லா நெளிவு, சுளிவுகளையும், மனதில் கொண்டு, நீட்டி முழக்காமல், அமரிக்கையாக, நீண்ட கால நிதி கொள்கைகளை, மக்களை கலந்தாலோசித்த பின், பிரகடனம் செய்து, ஏற்புடைய திருத்தங்களை உட்படுத்தி, வருடாந்திர பட்ஜெட்டை அமைக்கும். பட்ஜெட் மக்களின் உரிமையை பிரதிபலிக்கும் கண்ணாடி: அது ஒரு மந்திரக்கோல் அன்று.
மக்களின் அனுமதியில்லாமல், அரசு வரி விதிக்கலாகாது என்ற உரிமையை நிலை நாட்டிய மாக்னா கார்ட்டா, பாஸ்டன் டீ பார்ட்டி போன்ற நிகழ்வுகள் தான் வருடாந்திர நிதி நிலை (பட்ஜெட்) அறிவிப்பின் அடித்தளங்கள். மக்களின் ‘நாமி’ ஆகிய பிரதிநித்துவ குடியரசு ‘பினாமி’யாக உரு மாறி, அதை மந்திரக்கோலாக பயன்படுத்தினால், மக்கள் விழிப்புணர்ச்சியுடன் அதை நோக்க வேண்டும். அதில் குறையும், நிறையும் காணவேண்டும். பட்ஜெட்டும், தணிக்கைத்துறையும், ஜெமினி சகோதரர்கள் மாதிரி, இரட்டைப்பிறவிகள். 150 ஆண்டுகளாக, வாழ்ந்து குப்பை கொட்டும் நூற்றுக்கிழவிகள். ஆனால், இருவரும் ஊதும் இசைப்பண்கள் வேறு. ஜனரஞ்சகம் வேண்டி, பற்றாக்குறை அரசு ‘கதன குதூகலம்’ ஆலாபனை செய்தால், விடாக்கொண்டன் தணிக்கை ‘கம்பீர நாட்டையில்’ சங்கதிகளை அவிழ்க்கும். ஒன்றை கேட்டு, ஒன்றை விட்டால், அபஸ்வரம் தான் ஒலிக்கும்.
மடலாடும் இணையதளங்களில், சான்றோர்கள், பண்பாளர்கள், மற்ற துறை வல்லுனர்கள், மெத்த படித்தவர்கள், சுய கருத்தை விளாசி வீசும் அபிப்ராயதாரர்கள், வலை களவாணிகள் ஆகியோர் கூறுவதையெல்லாம், கிடைத்தவரை தேடிப்படித்தேன். தெரிந்தது கடுகளவு. தெரியாதது மலையளவு. தெரிந்ததாக காட்டிக்கொள்வது! (சரி. வேண்டாம்...). ஒரு காரணம் அரசின் ஆட்சிமொழி. இந்திய நாட்டு பெருமக்கள், அரசாணை பற்றி அறிந்து, செயல்படக்கூடிய நிர்வாஹ தகவல்களை வெளிப்படையாக, எளிய முறையில் அளிக்கவேண்டும் என்பது என்னுடைய அணுகுமுறை. எனவே, மின் தமிழர்களே, தமிழ் வாசல் காப்போர்களே, தொடர்பில் இருக்கும் மற்ற நண்பர்களே! சாணக்யரின் ‘அர்த்த சாஸ்திரத்திலிருந்து‘ ஆரம்பித்து, முதல் முறையாக, ‘Old wine in a new bottle‘ என்ற வகையில் மத்திய அரசு ஸெப்டம்பர் 1, 2010 அன்று, வெளியிட்ட ‘பட்ஜெட் கையேடு‘ வரை, அக்கு வேறு, ஆணி வேறாக அலசி, சில புதிய இழைகளை துவக்கலாம். அது என் மற்ற அலுவல்களை பாதிக்கும். குறைந்தது நூறு பேராவது ஆர்வம் தெரிவித்தால் தான், அந்த பேரிகையை, ஏப்ரல் 7, 2012 அன்று முழக்குவதாக உத்தேசம். இல்லையெனில், ஆரவாரம் இல்லாமல் வாளா இருந்து விடலாம், நான். வசதி எப்படி?
சரி, போதும், ஆளை விடுங்கள். இன்றைக்கு இதை பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள், சிலர். ஆம், மார்ச் 31 அன்று, பட்ஜெட் அனுமதித்த செலவு திட்டங்கள் காலாவதி. எல்லா பணமும் ‘அரோஹரா’. சர்வதேவ நமஸ்காரோ கேஶவம் பிரதிகச்சதி. வெளியில் இறைத்தத் துட்டு எல்லாம், கஜானாவில் அடைக்கலம். ஏன் தெரியுமா? மக்களின் அனுமதி, நாடாளும் மன்றத்தின் வாயிலாக, ஒரு வருடத்துக்குத் தான் கொடுக்கப்பட்டது. அந்த கெடு மார்ச் 31 அன்று காலாவதி. இது மக்களாட்சியின் மரபு. அரசின் விதி. நாடாளுமன்றத்தின் ஆணை. தணிக்கைத்துறை ஒரு வாயில் காப்போனே.
அவனும் வருடா வருடம் கரடியா கத்றான். வருடக்கடைசியில் வாரி இறைக்காதே என்று. மாண்பு மிகு அரசு நிர்வாஹங்கள், புவி முழுதும், ஜோசியக்கலை வல்லுனர்கள் அல்ல. பல காரணங்களால், இத்தகைய காலாவதிகள் ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் உண்டு. அதையெல்லாம் விட்டு விட்டு, சித்தம் கலங்கிய சைத்தியம் போல், கன்னா பின்னா என்று சில துறைகள் ‘கை நிறைய கழுதை விஷ்டை’ (மலம்) வாங்குவார்கள். மான்யப்பணத்தை தெருவில் வீசுவார்கள். ஒப்பந்தக்காரர்களுக்கு கட்டாய அச்சாரம் கொடுப்பார்கள். சுணங்கிய பணத்தை வங்கிகளில் போடுவார்கள், கோடிக்கணக்கில். சிலர் பொய்க்கணக்கும் எழுதுவார்கள். சொன்னால் குத்தம். ‘நீ வாயில் காப்போன் தானே. நான் கொல்லைப்பக்கம் போய் அசிங்கம் செய்தால், நீ ஏண்டா! ஏன் கத்றே’ என்பார்கள்.
வர்ரேன்...’
இன்னம்பூரான்
31 03 2012
Demand for Grants –Expenditure required to be voted by the Lok Sabha.
பி.கு. இந்த தொடரை ஜூன் மாதம் 17ம் தினம் வரை இழுத்தடித்தால், ஒரு வருட பட்ஜெட் மாதிரி, கால அட்டவணையில். அது வரை, இதை குறிப்பிட்ட தினத்தன்று, ‘டாண்’ என்று நடு நிசியில் (இந்திய நேரம்) இடுகை செய்வதிற்கு பதிலாக, முடிந்த வரை, அவ்வப்பொழுது, பதிவு செய்வதாக, உத்தேசம். பொறுத்தாள்க. நான் மற்ற பணிகளுக்கும், படிக்கவும் நேரம் ஒதுக்கி விட்டேன்.