அன்றொருநாள்: ஃபெப்ரவரி 16
‘எம்டர்’
மருங்காபுதூர் முனிசிபாலிடியின் சேர்மன், ஆறுமுகம் சேர்வை. தற்குறி. அதனாலென்ன? ஊருக்கு பெரியமனுஷன். கமிஷனர், சுப்பையா பிள்ளை பி.ஏ.பி.எல்.யோக்கியஸ்தன். கொஞ்சம் அலட்டிக்குவார். அவரை கூப்பிட ஆள் அனுப்பிய சேர்வைகாரர் சொல்லினுப்பினார், ‘யாருப்பா, அங்கே? சேர்மர் கூப்டார்னு அந்த கமிஷனனை வரச்சொல்லு.’ அந்தமாதிரி எம்டனுக்கும் தண்ணி காட்றமாதிரி, அந்த ரேஞ்சுக்கு, ஒரு பிரிட்டீஷ் போர்க்கப்பல் ஆட்டிவைத்தது என்றால். அது ‘எம்டர்‘ தானே,திவாகர்காரு? என்ன சொல்றேள்?
கடற்படை போர் என்றால், சண்டைக்கோழி, வின்ஸ்டன் சர்ச்சில். விமானப்போரிலும், தரைப்படைப்போரிலும் சண்டைக்கோழி தான். இரண்டாவது உலகயுத்தம் தொடங்கிய சமயம், ஹிட்லரின் அட்மிரல் க்ராஃப் ஸ்பீ என்ற குட்டி போர்க்கப்பலும், அல்ட்மார்க் என்ற அதனுடைய ‘கூஜா’வும் (Supply ship) வணிகக்கப்பல்களை மூழ்கடித்து, மாலுமிகளை ‘கூஜா’வில் சிறைப்படுத்தினர். இனி டைம்லைன்:
- 6th August 1939: அல்ட்மார்க், இங்க்லீஷ் கால்வாயை திருட்டுத்தனமாகக் கடந்து, தெற்கு அட்லாண்டிக்கில், அட்மிரல் க்ராஃப் ஸ்பீ க்கு அருமையாக, கூஜா தூக்க, நேச நாடுகளின் வணிகக்கப்பல்கள் பல ‘தொபக்கட்டீர்’.
- 13th December 1939: எக்ஸெடர், அஜாக்ஸ் & அக்கெலெஸ் என்ற மூன்று ‘எம்டர்களால்’ துரத்தப்பட்ட அட்மிரல் க்ராஃப் ஸ்பீ தென்னெமரிக்காவின் மாண்டிவிடியோ துறைமுகத்தில் ஒளிந்து கொண்டது. வெளி வந்தாகவேண்டும். இந்த எம்டர்களிடம் மாட்டிக்கொள்வதை விட கடலாழமே பரவாயில்லை என்று தற்கொலை செய்து கொண்டது.
- 12th February 1940: அதிர்ஷ்டம் தான். கூஜா அல்ட்மார்க், உலகெல்லாம் சுற்றி, நடுநிலை வகிக்கும் நார்வே அருகில் வந்தடைந்தது.
- 13th February 1940: ஜமா சேர்ந்தது. அரோரா என்ற கப்பலிலிருந்து டெக்னிகல் படையுடனும், கொஸ்ஸாக் என்ற எம்டருக்கு, அரேதூஸா, சீக், நுபியன், ஐவன்ஹோ, இன்றெபிட் என்ற மினி எம்டர்கள், கை காரியத்துக்கும், வந்து நின்றன. எல்லாம் கூப்பிடு தூரத்தில். எங்கேயோ சுற்றப்போவதாக உலவிய வதந்தியை யாரும் நம்பவில்லை. நேரம் நெருங்குதுடோய்! நடுநிசியில் எல்லா கப்பல்களும் பலே திட்டம் போட்டு, ஆங்காங்கே காவல் தெய்வங்களாக நின்றன, கப் சிப் கபர்தாராக.
- 14th February 1940: நார்வேயின் ரோந்து கப்பலொன்று அல்ட்மார்க் கப்பலில் ஏறி, அவர்கள் தாங்கள் நிரபராதி எண்ணெய் கப்பல் என்று சொன்னதை, ‘சமத்தாக’ ஒப்புக்கொண்டு, விட்டு விட்டனர். காலம் அப்படி. இத்தனைக்கும், பிரிட்டன், அந்தக் கப்பலில் மாலுமி கைதிகள் இருக்கின்றனர் என்று சொன்னது, செவிடன் காதில் ஊதிய சங்கு. நங்கூரம் பாய்ச்சுகிறேன் என்று பாவ்லா காட்டி விட்டு ஓடப்பார்த்த அல்ட்மார்க் மீது மற்றுமொரு சோதனை: அதுவும் பாவ்லா! டென்ஷன்! அல்ட்மார்க் அல்டாப்பாக நடந்து கொண்டதால், நார்வே உதவ தயக்கம்.அதற்குள், இங்கிலாந்தின் போர்ட்ஸ்மத் கடல்படை தலைமைக்கு போர்க்குணம் கூடியது. யாரு தலைவர்? சர்ச்சில்.
ஆணை: ‘அல்ட்மார்க் இருக்குமிடம், கிட்டத்தட்ட, இது. அவளை(கப்பல் பெண்பால்.) கடலுக்குள் விரட்டு. கப்பலில் ஏறி, நம்மாட்களை விடுதலை செய். ஓவர்.’
- எங்கு பார்த்தாலும் கப்பல்கள். பிடித்து விசாரணை செய்ததில் ஒன்று கூட அல்ட்மார்க் அல்ல.
- 15th February 1940: 0825: விமான சர்வே:பல கப்பல்கள் அங்குமிங்கும்;
- 15th February 1940: 14 45: அல்ட்மார்க் நேசக்கப்பல்களை கண்டு விட்டது. அவை இட்ட ஆணைகளை கண்டு கொள்ளவில்லை. லண்டனில் காபினெட் மீட்டிங்; (இது தாங்க, சரியான பார்லிமெண்ட் கவர்மெண்ட். சர்ச்சில் படா அமைச்சர் தான். ஆனால், கேபினெட் தான் முடிவு எடுக்கும். நார்வேயின் நடுநிலை மாட்டிக்கொண்டிருக்கிறதே.)
- 15th February 1940: 15 15: ‘இன்றபிட்’, ‘ஐவன்ஹோ’ என்ற எம்டர்கள் அல்ட்மார்க்கை நெருங்கிவிட்டனர். ‘இன்றபிட்’ ‘அஹோ வாரும் பிள்ளாய்’ என்றிட்ட கட்டளையை மீறியது, அல்ட்மார்க். ‘இன்றபிட்’ குண்டு வீசத்தொடங்கினாள். நார்வே கப்பல்கள் இடை மறித்தன. அல்ட்மார்க் ஓடி ஒளிந்தாள், ஜோஸிங்ஃபோர்ட் என்ற ஒரு பொந்தில். மூன்று நார்வே போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்தன, சால்ஜாப்பு சொல்லி அல்ட்மார்க்கை தப்ப விட. சர்ச்சில் திட்டவட்டமாக ஆணையிட்டார். நார்வேயின் கப்பல்களுடன் கறாராக பேசு. அவற்றை சுடவேண்டாம், முடிந்த வரை. ஆனால், சந்தர்ப்பம் யாதாயினும் அல்ட்மார்க்கில் ஏறி, கைதிகளை விடுவி.
- 15th February 1940: 22 00: எம்டர் காஸ்ஸாக்கின் கேப்டன் வியான் கறாராகப்பேசியும், நார்வே கப்பல்கள் ஒத்துழைக்கவில்லை.
- 15th February 1940: 23 12: அவர், ஒரு சிறு படையுடன், அல்ட்மார்க்கில் ஏற முயன்றார். அல்ட்மார்க் அலட்டிக்கொண்டது. சின்ன கலாட்டா. எம்டர் காஸ்ஸாக் கெலித்தது. ஆனால், அல்ட்மார்க் தரை தட்டியது. (புரியணும் என்றால், ஒரிசா பாலுவை கேளுங்கள்.) குடைந்து, குடைந்து, ஒரு குதிருக்குள் கூவினார்கள், ‘இங்க்லீஷ் ஆசாமிகள் இங்குண்டோ? என்று. 299 மாலுமிகள் அடைபட்டு கிடந்தனர். விடுவிக்கப்பட்டனர்.
- 15th February 1940: 23 55: வாகை சூடிய எம்டர் காஸ்ஸாக் ஜாலியாக, ஊரை நோக்கி.
- 16th February 1940: 00 00: ராயல் நேவியின் கப்பல் காஸ்ஸக் (HMS Cossack) எம்டரானாரே!
இன்னம்பூரான்
16 02 2012
பி.கு: பி.பி.சி. வானொலி நிலையம் பொதுமக்களிடமிருந்து இரண்டாவது உலகயுத்தத்தை பற்றி பாமர கீர்த்திகள் வேண்டியது. 47 ஆயிரம் கீர்த்திகளும், 15 ஆயிரம் சித்திரங்களும் வந்தன. எம்டர் கீர்த்தி யான் வைத்த நாமகரணம் என்றாலும், கீழ்க்கண்ட குறிப்பு தரவேண்டும் என்ற வேண்டுகோளை மதிக்கிறேன்.:
உசாத்துணை:
The Altmark Incident By ateamwar:Background to story:
Royal Navy
Article ID:
A4507472
Contributed on:
21 July 2005
|
|
No comments:
Post a Comment