அன்றொரு நாள்: ஜனவரி:21
அண்ணாச்சி!
ஜனவரி 21, 2008 அன்று அமெரிக்காவின் மணிமார்க்கெட் குடை சாய்ந்தது. எழுதலாம் என்று நினைத்தேன். அப்போதே மின் விகடனில் எழுதியாச்சு. செத்த பாம்பு. விட்டு விட்டேன். அமெரிக்காவில் ஜனவரி 21 அதிகார பூர்வமில்லாத ‘கட்டுபிடி வைத்தியம்’ தினம். உசாத்துணையில் போட்டதோடு சரி. அவா அவா கட்டிபிடித்துக்கொள்ளலாம். வேண்டாம் என்று சொல்ல நான் யார்? இன்று ‘அண்ணாச்சி’ கதை.
சில படைப்புகள் அமரத்துவம் பெற்று விடுகின்றன. நமக்கு ரவிவர்மாவின் ராமர் தான் பிரத்யக்ஷம். தமயந்தி தான் கனவுக்கன்னிகை. லியோர்னடா வின்சியின் மோனா லீஸாவின் புன்னகை நிலைத்து விட்டது. அந்த மாதிரி, ஜார்ஜ் ஆர்வெல் (1903 - 1950) கற்பனை செய்த ‘அண்ணாச்சி’(Big Brother) நிலைத்து விட்டார், உலகத்தின் மனசாட்சியில். இந்தியா ஆசாமியாக்கும். அவருடைய தந்தை இந்தியாவின் அப்கரி (கஞ்சா, அபின்) இலாக்காவில் அதிகாரி. இவர் பிறந்தது, மோதிஹாரி, வங்காளம். இயற்பெயர்: எரிக் ப்ளையர். தன் குடும்பம்,‘அடிமட்ட-உயர்-நடுத்தர-வகுப்பு’! என்கிறார் சிரித்துக்கொண்டே. பள்ளிப்படிப்பு சுத்தமா பிடிக்கவில்லை. ஆனால், நிதியுதவி கிடைத்தது. காலேஜிலும் உபகாரசம்பளம். கொஞ்சம் சுதந்திரம். வேலை வெட்டியும் செய்யவில்லையாம். அதிகாரத்தை மதிக்காததால், வாத்திமாருக்கு இவரை பிடிக்கவில்லை. ஆனால், இவருக்கு ஆயுசுபரியந்த நண்பர்கள் கிடைத்தார்கள். வேலை கிடைத்தது இந்திய போலீஸ்: பர்மா. ஒரே அதிகாரம் ‘தூள்’ கட்டி பறக்கும் இலாக்கா. உதறி எறிந்து விட்டு விட்டு, இங்கிலாந்தில் வந்து பட்டினி. புனைப்பெயர்: ஜார்ஜ் ஆர்வெல் (இங்கிலாந்து காவல் தெய்வம் + மனதுக்கிசைந்த நதி ஆர்வெல்.) சொற்ப சம்பளத்தில் பள்ளி ஆசிரியர் வேலை; புத்தகக்கடையில் எடுபிடி. என்றும் விழிப்புணர்ச்சி மனிதரா? ஸ்பெய்ன் நாட்டில் ஃப்ராங்கோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நடந்த உள் நாட்டில் போரில் கலந்து கொண்டார். (நேரு கூட அதில் கல்ந்து கொள்ள விழைந்தார். ஃப்ராங்கோவின் சர்வாதிகாரம் வந்து போன கதை வேணுமா? தெரியுமா?) அச்சமயம், அவர் ‘கடலோனியாவுக்கு வந்தனம்’ என்ற நூலில், ஸ்பானிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் ரஷ்யா, அந்நாட்டு ரகசிய போலீஸ் எல்லாம் செய்தத் துரோகத்தை நிந்தித்தார். பலத்த அடி வாங்கிக்கொண்டு, ஊர் திரும்பினார். யுத்த காலத்தில் இந்தியா நோக்கி ராணுவ பிரச்சாரம் போன்ற சில்லரை வேலைகள் வந்து போன பின், 1945ல் ‘விலங்கினப்பண்ணை’ என்ற நூலையும் 1949ல் ‘ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு’ என்ற நூலையும், படைத்து இறவாப்புகழ் தேடிக்கொண்டார். முதல் நூல் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. லக்ஷக்கான பிரதிகள் விற்பனையாயின. சுருங்கச்சொல்லின், அழுகிய புரட்சி என்று, ஸ்டாலினின் கொடுங்கோலை தாக்கினார் எனலாம். ஆனால், அதை அவர் மறுத்தார். ஸ்டாலினை எதிர்த்தாலும், இறுதி வரை தன்னை ஜனநாயக சோஷலிஸ்ட் என்று தான் சொல்லிக்கொண்டார். அந்த மாதிரியான சகவாசம் தான். இந்த நூலில் பன்றிகளை மையமான கதாபாத்திரங்களாக அமைத்து, கொடுங்கோல், லஞ்சம், தீமை, அசட்டை, அறியாமை, பேராசை, குருட்டுபுத்தி எல்லாவற்றையும் தாக்கு, தாக்கு என்று தாக்குகிறார். இரண்டாவது நூலில் சராசரி மனிதனும், கொடுங்கோலனாகிய ‘அண்ணாச்சியும்’ கதாநாயகர்கள். அண்ணாச்சியின் படமும் எங்கும்; அவனுடைய வேவும் எங்கும். சிந்திப்போமானால், நமது சூழ்நிலையிலும் அண்ணாச்சிகள் பல இருப்பது கண்கூடு. இரண்டு நூல்களும், 50 வருடங்கள் முன்னால், என்னை மிகவும் தாக்கம் செய்த நூல்கள் என்பேன். இன்றைய ஆங்கிலத்தில் ‘ஆர்வலியன்’, ‘பிக் ப்ரதர்’ என்ற சொற்கள் பழக்கத்தில் வந்து விட்டன. இந்த இரு நூல்களையும் இணையதளத்தில் படிப்பது, நமது கடமை.
ஜார்ஜ் ஆர்வெல் எலும்புருக்கி நோய் வந்து, 46 வயதில், ஜனவரி 21, 1950 அன்று மறைந்தார்.
இன்னம்பூரான்
21 01 2012
அண்ணாச்சி படத்தின் படத்தில்!
உசாத்துணை:
No comments:
Post a Comment