Thursday, February 28, 2013


“நகர்ந்து, நகர்ந்து நிகழ்காலம் கடந்த காலத்தில் மக்கிப்போய், காலாவட்டதில் கரைந்து விடுகிறது. சூராதிசூரர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். பாமரர்களோ, ஹோமர் என்ற காப்பியாசிரியர் சொன்னமாதிரி, சுவாசம் நின்றவுடனேயே  மண்ணில் மறைந்து தொலைந்தே போய்விடுகிறார்கள். நிலையற்ற இந்த வாழ்க்கையில் நமது இலக்கு என்னவாக இருக்கலாம்? ~ தர்மசிந்தனை, பரோபகாரம், வாய்மை, தெய்வசங்கல்பம் தான். வேறு என்ன இருக்கமுடியும்?”
~‘தியான சிந்தனைகள்: ‘மார்க்கஸ் ஒளரேலியஸ் அண்டோனியஸ்’

pastedGraphic.pdf
ராஜாதி ராஜாக்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்கிறார்கள். பெருமாள் சங்குச்சக்கர கதாபாணியாக அருள் பாலித்தால், மன்னர் பிரான்களுக்கு வெண்கொற்றக்குடை, செங்கோல், அரியாசனம், ‘பராக்’ ‘பராக்’ படாடோபங்கள் போன்ற அதிகார சின்னங்கள். பொன்னாசைக்கு வைரக்கிரீடம், அசைந்தாடும் குண்டலங்கள், கங்கணங்கள், கழல்கள் மற்றும் பல அணிகள், தங்கரேக்கு ஓடும் ஆடை, உடைகள்; பெண்ணாசைக்கு பட்டமகிஷியும், அடுத்தடுத்த ஈஷிகளும், அந்தப்புரத்து அடிமை பெண்களும்; மண்ணாசைக்கு நினைத்த மாத்திரத்தில் எயிலேற்றம், ஏணியேற்றம், படையெடுப்பு, போர்க்களம், ரதகஜதுரகபதாதி, பகைக்குப் புகையும் தீயும் என்று தான் அவர்களின் மெய்கீர்த்திகள் போற்றுகின்றன. இவற்றில் ஒன்று கூட புகழாரத்திற்கு உகந்தவை இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை.

இதிகாச ஆதர்ஷபுருஷனாக விளங்கிய ஶ்ரீராமசந்திரமூர்த்தியின் ராமராஜ்ய பரிபாலனம், பிரஜைகளின் நிறைவேறாத கனவு. ஏமாந்தவர்களில் அண்ணல் காந்தியும் ஒருவர். அசோக சக்கரவர்த்தி, ராஜராஜ சோழன், அக்பர் போன்றோரின் ஆளுமை பற்றி புகழுரைகள் வரலாற்றில் கிடைக்கின்றன. அத்தகைய மன்னர்கள் அரிது. பிரிட்டீஷ் கலோனிய ஆட்சியில், ‘தெருவுக்குத் தெரு’ இந்தியாவில் மலிந்து கிடந்த பெருநில/குறுநில மன்னர்களில், பரோடா, மைசூர், திருவிதாங்கூர் போன்ற சமஸ்தானதிபதிகள் மக்கள் நலம் பேணினார்கள். மற்றபடி அபகீர்த்திப்படைத்த அசடுகள், அசத்துக்கள், அடிவருடிகள், ஸ்த்ரீலோலர்கள், மிடாக்குடியர்கள்,வக்கிரங்கள் தான் இறைந்து கிடந்தனர். அது தான் போகிறது என்று உலகளாவிய வரலாற்றை கவனித்தால், ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் போன்ற கொடுங்கோலர்களைப் பற்றி எத்தனை அக்கிரம அபகீர்த்திகள் படைத்தாலும் போதாது. இந்தியா உள்பட, காந்திஜி, கரிபால்டி, பொலிவர், மண்டேலா போன்ற தேசாபிமானிகளின் அயராத உழைப்பினால் ஜனநாயகம் தலையெடுத்தாலும், அடுத்து வரும் வம்சாவளிகள் தன் தலையில் சகதியை தாராளமாக அள்ளிப் பூசிக்கொண்டு, மக்களின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பச்சைமிளகாயை அரைத்துப் பூசி விடுகிறார்கள். விடுதலை பெற்ற 65 வருடங்களுக்குப் பிறகு, இந்தியாவின் நிலை பரிதாபமாக இருக்கிறது. சர்வதேசக்கேலிக்கு இலக்காக இருக்கிறது. பஞ்சமும் இல்லை, பற்றாக்குறையும் இல்லை, முறைகேடுகளுக்கும், நடிப்பு சுதேசிகளுக்கும், குதர்க்க வாதங்களுக்கும் மட்டும். ஆளுமை அல்லாடுகிறது. சமுதாயத்துக்கு மூச்சிறைக்கிறது.

இப்படியாகப்பட்ட மனித சமுதாயத்தில், அபூர்வமாக கிடைக்கும் நன்முத்துக்களைப்போல், மூன்று ராஜரிஷிகள் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது; நம்பிக்கை தருகிறது; மேலும் அவர்களை பற்றி அறிய (எனக்கு மட்டுமாவது!) ஆவலை தூண்டுகிறது. ராமாயணத்தில், தசரதன், கம்பர் சொல்வதைப்போல, நல்லாட்சி தான் செய்து வருகிறான். அமைச்சர் சுமந்திரனோ விவேகி. குருவோ முனிபுங்கவர் வசிஷ்டர். ஆனால், ராஜரிஷியாகக் கருதப்படுபவர், சம்பந்தி ஜனக மஹாராஜா/மஹரிஷி. தாமரை இலை மீது தண்ணீர், மலை போல் ‘அசலா’ அசையா நிலை (நிச்சலதத்துவம்), உடலும், மனமும் நற்குணங்களுக்கு உறைவிடம், துர்க்குணங்கள் அவரை அணுகா என்றெல்லாம் பலவிதமாக அவரை போற்றுவார்கள். இவரோ இதிஹாச புருஷன். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த ராஜா பர்த்துருஹரி, சுய வாழ்க்கையில் ஒரு முனிபுங்கவராகவே இருந்து, ராஜ்ய பரிபாலனம் செய்தார். அவர் எழுதிய சிருங்கார சதகம் திருவள்ளுவரின் காமத்துப்பால் போல எனலாம். மக்களின் இல்வாழ்க்கையை பேரெழிலாக அமைப்பதில் அவருக்கு நாட்டம். அவர் எழுதிய நீதி சதகம், விதுரநீதி போன்றது. ‘அறம் செய்ய விரும்பு’ என்ற பாடத்தின் பவர் பாயிண்ட். அவர் எழுதிய வைராக்ய சதகம் துறவறத்துக்குக் கலங்கரை விளக்கு. சாக்யமுனி அருளித்தந்து, பெளத்த பிக்ஷுக்களால் உருவாக்கப்பட்ட ‘தம்மபாதம்’ போல எனலாம். ரிஷி வாத்ஸ்யாயனருடைய, ஜனகமஹாராஜாவுடைய, சாக்யமுனியுடைய குணாதிசயங்கள், பர்த்துருஹரி என்ற ஒரு மனிதரிடம் ஒருங்கே இருக்குமானால், அவரை ராஜரிஷி சொல்வது மிகையாகாது.
இன்றைய கட்டுரையின் தலைமாந்தர் ‘மார்க்கஸ் ஒளரேலியஸ் அண்டோனியஸ்‘ (கி.பி.121-180) என்ற ரோமாபுரி சக்கரவர்த்தி. கி.பி. 161ம் ஆண்டிலிருந்து 19 வருடங்கள் ஆட்சி புரிந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில் இடைவிடாத போரும், அதன் ‘கொடையாக‘ தொத்து வியாதிகளும், பஞ்சமும், பூகம்பங்களும் விளைவித்தத் துன்பங்களை சொல்லி மாளாது. இத்தகைய சூழலில் ராஜாங்கம் செய்த அவரை மக்கள் ‘சக்கரவர்த்தி திருமகன்’, ‘ராஜரிஷி‘ ‘புருஷோத்தமன்‘ என்றெல்லாம் கொண்டாடி வந்தனர். அதன் பின்னணியை சற்று பார்ப்போம்.
வடமொழியில் ‘ஸ்திதபிரதிஞன்’ என்றொரு சொல் உண்டு. பழகுதமிழில் சொன்னால், ‘விடாக்கொண்டன்’! கிருஸ்துவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கிரேக்கத்தத்துவத்தில் ‘ஸ்டாயிஸிசம்’ என்ற ‘ஸ்திதபிரதிஞன்’ கோட்பாட்டுக்கு அதிக மதிப்பு இருந்தது. சுருங்கச்சொல்லின், பிரபஞ்சத்தின் கட்டளைகள மனிதன் மதிக்கவேண்டும்; கடமை, சொகுசுவாழ்க்கையை நாடாமல் இருப்பது, சிந்தித்து செயல்படுவது, மரணபயமில்லாமல் வாழ்வது, அவரவர் செயல்களுக்கு அவரவர் பொறுப்பேற்பது, திறந்த, துணிந்த மனம், தன்னலம் நாடாமல் இருப்பது, உலகளவு பரந்த மனப்பான்மை, ‘யாதும் ஊரே’அரவணைப்பு ஆகியவை அந்த கோட்பாட்டுக்குள் அடக்கம். இடர்ப்பாடுகளையும், இன்னல்களையும் ஒருவது நிம்மதியை குலைக்க விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவருடைய ராஜ்ய பரிபாலனம், போரிடும் திறன், அன்றாட வாழ்க்கை ஆகியவை பற்றிய செய்திகள் மங்கலாகி விட்டன. போர்க்கள துமிலத்தின் நடுவில், பாசறையில் அமர்ந்து, தனக்கு மார்க்கபந்துவாக அவர் எழுதி வந்த தியான சிந்தனைகள், மனித இனத்தின் சிந்தனை கருவூலத்தில் ஒரு நிரந்தர வழிகாட்டியாக தங்கி இருப்பது, நமது பாக்கியம். அவை இன்றைய தமிழகத்துக்கும் ஒரு கைவிளக்கு என்பதால் தான் நமது தீர்க்கதரிசி ராஜாஜி அவர்கள் அவற்றில் சிலவற்றை எளிய தமிழில் நமக்கு அளித்தார்.
எத்தனை வாசகர்களுக்கு இது அலுப்புத் தட்டுகிறது. எத்தனை வாசகர்கள் மேலும் அறிய விரும்புவார்கள் என்பது எல்லாம் விடை காணா புதிர்.
இன்னம்பூரான்
உசாத்துணை:
FARQUHARSON, A. S. L., The Meditations of the Emperor Marcus Antoninus, Edited with Translation and Commentary, 2 vols (Oxford: Clarendon Press, 1944)

பிரசுரம் & நன்றி: http://www.atheetham.com/?p=3803

No comments:

Post a Comment