அன்றொருநாள்: ஃபெப்ரவரி 18
கீர்த்தனாரம்பக்காலத்திலெ...
இன்று குருதேவர் ஶ்ரீராமகிருஷ்ணரின் அவதார தினம்: வருடம் 1836. ஜய ஜய ஸ்ரீ ராமகிருஷ்ண !!! என்ற சித்திரக்கூடம் மின் தமிழில். நானும் அவரது பாதாரவிந்தங்களில் அன்றொரு நாள்: ஆகஸ்ட் 16 இழையை சமர்ப்பணம் செய்தேன். குருதேவரோ ஒரு துடைப்பம்!
ஒரு பணக்காரனுடன் உரையாடல்:
குருதேவர்: பயனில்லா வாதங்களினால் விளையும் நன்மையென்ன? சுத்தமான நம்பிக்கையுள்ள மனதுடன் பகவந் நாமாவை ஜெபி. அது உனக்கு நன்மை தரும்.
பணக்காரன்: நீங்கள் எல்லாம் அறிந்து விட்டீர்களா?
குருதேவர்: உண்மை தான்; என்னால் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை தான். ஆனாலும்,துடைப்பமானது, தான் அசுத்தமாயிருந்தாலும், தன்னால் துடைக்கப்பட்ட இடத்தைச் சுத்தமாக்குமே.
*
‘தடக்! டதக்! தடம் மாறுகிறது.
‘பல பீமா! பல பீமா!’ என்று சப்ளாக்கட்டையை தட்டிக்கொண்டு, கீர்த்தனாரம்பக் காலத்துக்கு -அதாவது 5114 வருடங்களுக்கு முன்னால்,வெள்ளிக்கிழமை, ஃபெப்ரவரி 18, 3102 கி.மு. சென்றோமானால், ஒரு யுகம் பிரசவம் ஆவதை காண்போம். ஆமாம், சார். அன்று தான் கலியுக ஜனனம். இது ஆரியபட்டர் உவாச. (பகர்ந்தார்.) வராஹமிஹிரர், ஶ்ரீயுக்தேவர் வேறு தினுசா உவாச.
‘ ஆஞ்சநேய தீரா! அனுமந்தராயா! என்னும்போதே, தத்தளாங்கு ததிங்கணத்தோம் என்று எம்பார் விஜயராகவாச்சாரியாரின் கஜ்ஜை போல் ஒலிக்க, கீர்த்தனாரம்பக்காலெ, கிருஷ்ண பரமாத்மா துவாபரயுகமிருத்யூ ஆயிடுத்தேன்னு, துவாரகையிலெ கவலைப்பட்டுண்டு, ஒரு துண்டை விரிச்சு படுத்துண்டார், மரத்தடி பெஞ்ச்லெ. கண்ணை சுழட்டிண்டு வந்தது. பஞ்சு மாதிரி பாதங்கள். திருவடியை நீட்டிண்டு படுத்துண்டு இருந்தார். அப்ப பாத்து ஒரு வேடன் அம்பொன்று விட்டான், சர்ரென்று. குத்தி கிழிச்சுடுத்து. ஸ்வாமி வைகுண்டவாசியாகிவிட்டார். அதான், கலி பிறந்தது. உங்களை இம்ப்ரெஸ் செய்ய புள்ளிவிவரம் தருகிறேன்.
- கிருதயுகம் – 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்;
- திரேதாயுகம் – 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள்;
- துவாபரயுகம் – 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்;
- கலியுகம் 4 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகள்.
கலி பிறந்தவுடனே, வாஸ்துபுருஷன் எழுந்துட்டார். 4693/4 யோஜனை உயரம்; 209 யோஜனை சுற்றளவு; 356 யோஜனை அகலம். எண்ணில் அடங்கா ரதகஜதுரகபதாதிகளுடன், குறுக்கையும் நெடுகவும் நடை பயின்றார். பெருமாளே ‘துமிலோ பவதி’ என்றார். அத்தனை ஆரவாரமாம். தேர்கள் ஊர்ந்தன. களிறுகள் பிளிறின. புரவிகள் கனைத்தன; தூசிப்படை புழுதியை கிளப்பியது. சற்றே நிம்மதி. பஞ்சகச்சமும், சால்வையுமாக, பஞ்சாங்கம் வாசிக்க வந்தார், சிரோன்மணி. கலியுக இயல்புகள் உரைக்கப்பட்டன. கலியுகத்தில் நடக்கப்போவதெல்லாம் பகர்ந்தனர், பகர்ந்தனர், பகர்ந்தனரே. ஆரூடம் கேளும். ஹேஷ்யம் உணருக. பரிகாரம் செய்து கொள்வது, உமது கடமையே.
- அரசர்கள் செங்கோல் ஆட்சி தோற்று வீடும் கொடுங்கோல் ஏற்றமுறும்.
~செங்கோலை விற்று விட்டார்கள். கொடுங்கோல் தலையில் முளைத்தது.
- வரிகள் அதிகமாகும். ~ திரைகடல் ஓடியும் வரியை ஏமாற்று. கடல் கடந்தால், வரி ஏமாற்று மையங்கள் உளன. சிபிஐயிடம் கணக்கு வழக்கு இருக்கிறது.
- அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். ~கடவுளை நம்பினோர் கைவிடப்படார்; அரசு நம்பினோரின் காலை வாரும். இது நாஸ்ட்ரடோமாஸ் பிறகு விளக்குவார்!
- அரசே மக்களை துன்புறுத்தும். ~இது தலையெடுத்து முன்னூறு வருடங்கள் மட்டுமே ஆயின.
- மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர். ~அமெரிக்கா! அமேரிக்கா! தமிழன் போகாத நாடுண்டோ?
- மக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும் ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். ~ஆமாம்! ஆமாம்!
- கொலைகள் என்ற தொரு கொடூர நாடகம் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது. ~ பசங்க வாத்தியரம்மாவை கொல்றாங்கோ.
- காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும். ~ இது யுகாரம்பத்திலிருந்தே.
- ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும். ~’வல்லமை’ படிக்கவும்.
- கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும். ~ நீங்கள் ஒண்ணு. கல்கி பகவான் என்று இன்று அறியப்படுபவர் ஒரு காட்மேன். அவருக்கு குதிரையேற்றம் தெரியாது.
- வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான “கலி”யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார். ~ஒரு சென்ஸஸ் எடுத்துப் பார்த்தேன். எத்தனை கலிகள்! எத்தனை கல்கிகள்! எத்தனை கலிகள், கல்கிகளாக! எத்தனை கல்கிகள், கலிகளாக! ஆளை விடு சாமி.
- அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும். ~ததாஸ்து!
பி.கு: கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,30,000 வருடம் இருக்கின்றது!!!
இன்னம்பூரான்
18 02 2012
கலி யுகத்தில் நம்மை காக்கும் ஹரி பஜனம் !
உசாத்துணை:
& அதீத கற்பனை, நிஜம் உள்ளுறைகிறது.
No comments:
Post a Comment