தோன்றியதும், தோன்றி மறைந்ததும், மறைந்திருந்து ஊசாடுவதும். ~1
யாவருக்கும் 2016ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். யாவருக்கும் சுபிக்ஷம் உண்டாகுக.
பொழுதொரு வண்ணமாகவும், நாளொரு மேனியாகவும், தனிமனிதர்களாகிய நாமும், நமது சுற்றம், அக்கம்பக்கம், நமது நெருங்கிய சமூகம், சமுதாயம், கல்வித்தளம், அரசாட்சி, மற்றும் பற்பல தளங்கள் எல்லாம் வளர்ந்தும், தேங்கியும், தேய்ந்தும் வருகின்றன. வரலாறு, நடையுடை பாவனைகள், சம்பிரதாயம், ஆளுமை, கொத்தடிமை போன்ற புறமும், தத்துவங்கள், அபிமானங்கள், சிந்தனைக்களம், நினைவலைகள் போன்ற அகமும் இணைந்து செயல்படுவது தோற்றமாகவும் அமையலாம்; தோன்றி நிலைக்கலாம்; மறையலாம்; மறைமூர்த்திக்கண்ணன் என்ற உருவகத்துக்கு உற்றவாறு உள்ளுறையாகவும் அமையவும் அமையலாம்.
சான்றாக, நற்றிணை என்ற அருமையான சங்கப்பாடலுக்கு புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் பகர்ந்த கடவுள் வாழ்த்து இங்கே:
‘மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பெளவ முடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகதத் தடக்கிய
வேத முதல்வ நென்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.’
தோன்றியது அகிலாண்டம். ‘ஏன் தோன்றியது?/எப்படி தோன்றியது?/ யாருக்காக தோன்றியது?/ தோன்றிய விதம் என்ன?/ தோற்றுவித்தது யார்? போன்ற வினாக்களுக்கு விஞ்ஞானம் விடை தேடிக்கொண்டே இருக்கிறது. சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. தத்துவ வாதப்பிரிதிவாதங்கள் காதைக்கிழிக்கின்றன. அவரவர் அபிமானங்கள் அவரவர்களுக்கு. சிந்தனைக்களமோ, யாழ்ப்பாணத்துத்தமிழில் சொன்னால், ஊசாடுகிறது. நினைவலைகள் தான் தோன்றி மறைந்ததை முன் கொணர்ந்து சிந்தனைத்திகிரியை சுழற்றி, உள்ளுறையை ஓரளவாவது புரியவைக்கிறது.
பாரதம் பாடிய பெருந்தேவனார் சூரியசந்திரர்களை பரந்தாமனின் கண்மலர்களாக பாவித்து, அவனது திருமேனியை விண்ணாகவும், திருவடிகளை மண்ணாகவும் பாவித்து, நான்கு கைகளை நாற்திசைகளாக பாவித்து, பாற்கடலை ஆடையாக அவன் உடுத்துலவும் அழகை போற்றும் போது, அவர் பாராட்டியது அஃறிணையான அகிலாண்டமாகவும் இருக்கலாம். சங்குச்சக்கிரம் தரித்தத் திருமாலாகவும் இருக்கலாம். ‘தீதற விளங்கிய திகிரி’ தீமைகளை களைத்தழிக்கும் சக்கரத்தாழ்வாராகவும் இருக்கலாம். புறத்தே, எண்ணற்ற வானங்களில் திகழும் வின்மீன் குழுமங்களாகவும் இருக்கலாம். அகத்தே, அகல் விளக்காக, தண்மையான சுடர் வீசும் உள்ளுறை தீபமாகவும் இருக்கலாம்.
சிந்தித்து செயல்படுக.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
சித்திரத்துக்கு நன்றி: http://wallpapercave.com/wp/ 1GHbBMU.jpg