அன்றொரு நாள்: ஜனவரி:31
தளை விலக்கியதும், தளை பூண்டதும்
தளை விலக்க:
அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ந்யூ யார்க் டைம்ஸ் என்றுமே, எதையும் அடக்கி வாசிக்கும். ஆனால், ஜனவரி 31,1865 அன்று சிறப்பு பதிவுடன் அமெரிக்காவின் கொடுமையான அடிமை ஒழிக்கப்பட்டதை கொண்டாடியது. அந்த தார்மீக முடிபு எளிதில் அடைந்தது அல்ல. ஒரு உள்நாட்டுப்போரே நடந்தது. அதன் காரணகர்த்தாவான அதிபர் அப்ரஹாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். சட்டம் இயற்றுவதும் தவழ்ந்து, தவழ்ந்து, மந்த கதியில் நடந்தேறியது.
இனி அந்த இதழ் சொல்வதை கேட்போம். ‘...நமது வரலாற்றில் இது யுகாரம்பம். மக்கள் பிரதிநிதிகளும், பார்வையாளர்களும் மறக்கமுடியாத வரலாறு படைத்த தினம். மதியம் 3 மணிக்கு சபையில் நிசப்தம். ஊசி போட்டால் சப்தம் கேட்கும். இதுவோ, சபையினர் யாவரும் விரும்பியது. நீக்ரோக்களின் அடிமைத்தளையை களைய 113 வாக்குக்கள்-டிமாக்ரடிக் கட்சி; எதிர்த்து 58. பிரபலமான டெமாக்ரடிக் பிரதிநிதிகள் வாக்களித்தபோது, பலமான கைத்தட்டல். இறுதியில், அவைத்தலைவர் 116 வாக்குக்கள் ஆதரித்தும், 56 வாக்குக்கள் மட்டுமே எதிர்த்தும் அமைந்ததை அதிகார பூர்வமாக அறிவித்த போது, பார்வையாளர்களின் வானளாவிய வரவேற்பு கைத்தட்டல் கூரையை பிளந்தது. ஒரே உத்ஸாகம். யாரும் குறுக்கிடவில்லை. கரை புரண்ட மகிழ்ச்சி வெகு நேரம் நிலவியது.
தளை அணிய:
சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு டாக்ஸியில் இரவில் பயணம். சீட் பெல்ட் அணிந்து கொண்ட நான், காரோட்டியிடம் அணிந்து கொள்ள சொன்னேன். ‘அதெல்லாம் வேலைக்காவாது’ என்று அவர் ஒரு தத்துவபோதனையை உதிர்க்க, சகபயணியான என் தம்பியும், அவனுடைய அருமந்த நண்பரும் கேலிச்சிரிப்பை உதிர்த்தனர். அவர்களும் பெல்ட் அணியவில்லை. நள்ளிரவில் மாமாண்டூர் தாண்டும்போது, ஒரு குடிமகன் தெருவில் வந்தார், தள்ளாடிக்கிணு.. திடீர் ப்ரேக்! காரோட்டி தலை ‘டும்’ என்று முட்டிக்கொண்டது. பிறகு, பெல்ட்டிக்கொண்டனர், யாவரும்.
எதற்கு சொல்ல வரேன் என்றால்: ஜனவரி 31, 1983 அன்று பிரிட்டனில் முற்புற சீட் பயணிகள் கட்டாயமாக பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்தது. 1991லிருந்து, பின்பக்க சீட் பயணிகளும் பெல்ட் அணியவேண்டும். வருடா வருடம் ஆயிரம் உயிர்கள் தப்பக்கூடும் என்று புள்ளி விவரங்கள் சொன்னாலும், பாதிக்கு மேல் அணிவதில்லை என்பது சர்க்காரின் புகார். நம்மூர் ஸ்கூட்டர் ஹெல்மெட் விவகாரம் போல், போலீஸில் முதலில் தாராள மனப்பான்மை இருந்தது, 15 வருடமாக. சட்டம் கொண்டு வர 11 தடவை முயன்றும் பயனில்லை. சுதந்திர நாடாச்சே! எங்கள் சுதந்திரம் பறி போகுதே என்று கூச்சல் வேறு. இதனால் வருத்தமடைந்த அமைச்சர் லிண்டா சாக்கர், ‘...தானே அனுபவித்து உணரும் வரை, பிறரின் அறிவுரையை யாரும் கேட்பதில்லை...’ என்றார். தற்காலம், பேச்சு மூச்சு இல்லாமல், எல்லாரும் சீட் பெல்ட் அணிகிறார்கள். இல்லையெனில், காரோட்டுபவருக்கு கடும் தண்டனை.
மின் தமிழில் கோயில் பராமரிப்பு, குப்பை கொட்டுவது போன்ற சமூக ஆக்கப்பணிகள் சூடாக விவாதிக்கப்படுகின்றன. கொஞ்சம் லிண்டாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம். சட்டம் யாதாயினும், ‘அடி உதவறமாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.
இன்னம்பூரான்
31 01 2012
பி.கு. நான் போக்குவரத்துச்சட்டத்தை மீறி கோர்ட்டில் வாதாடிய கதை, பத்து பேராவது, சரி, அஞ்சு!. கேட்டால் தான் சொல்லப்படும்.
உசாத்துணை:
No comments:
Post a Comment