அன்றொருநாள்: ஃபெப்ரவரி 15
ககனசாரிகை
“சோக்ரதர் ககனத்திலிருந்து சரித்துக்கொடுத்தார், தத்துவபோதனையை.”
~ சிசிரோ
சோக்ரதர் என்று பெயரிட்டு, சாக்ரட்டீஸ் என்ற கிரேக்கஞானியை பற்றி, ராஜாஜி ஒரு சிறிய நூல் எழுத, அணிந்துரையில் திரு.வி.க., ராஜாஜியே சோக்ரதராக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். சாக்ரட்டீஸ் அப்படித்தான் கூடு விட்டு கூடு பாய்வார். எழுத்து மூலம் தன் படைப்பு ஒன்று கூட விட்டு செல்லாத சாக்ரட்டீஸ்ஸுக்கு எண்ணிலடங்கா உரையாசிரியர்கள், திருவள்ளுவருக்கு அமைந்தது போல. அவரவர் ஒரு நிழல்-சாக்ரட்டீஸ்! அந்த சபையின் கடைசி வரிசையின் கடைசி இருக்கையில் எனக்கு ஒரு ஊசிமுனை இடம்?
“எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியும். அம்மாதிரி நீ அறியாய்.” என்று சொல்லித்தான், உயிரை ஆஹூதியிலிட்டு, ஆத்ம சம்ரக்ஷணை செய்து கொண்டார், சாக்ரட்டீஸ். வினா-விடை மூலம் சந்தேஹநிவாரணம் செய்த அவர்,“பரிசோதிக்காத வாழ்க்கை வாழும் தகுதியிழந்தது.” என்றார். பரிசோதனையோ ஒரு தொடர்கதை. அதனால் தான் சில சம்பாஷணைகளின் அலைவரிசை ஓய்வதில்லை. இன்றைய சம்பாஷணைதாரர், தமிழ்த்தேனி. சாக்ரட்டீஸ் அவரை கவர்ந்த கதை, அவருடைய அக்டோபர் 20, 2010 மின் தமிழ் மடலில். சுருக்கினால், சாக்ரட்டீஸ்ஸின் வியாபகம் குலைந்து போகலாம். அதனால் உள்ளது உள்ளபடி.
* * *
“ சில நாட்களுக்கு முன்னால், இன்னம்பூரானை அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன். உடல் நலம் குன்றியிருந்தார். அது பற்றி இங்கு எழுதியிருக்கிறேன். ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ என்னும் பாடலில் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள்”சேர்ந்து வாழும் மனிதரெல்லாம் சேர்ந்து போவதில்லை” என்று ஒரு வரி பாடுவார். ஏனோ எனக்கு அவர் நினைவு வந்தது, பொதுவாக மனிதர்களின் முதுமைக் காலங்கள் கொடுமையானவை, அதுவும் உலகில் ஒரே துணை என்று நம்பப்படும் இல்லறத் துணை.அது ஆணோ பெண்ணோ அவர்களும் பிரிந்துவிட்டால் , ஆறுதல் சொல்லக் கூட
யாருமில்லா நிலை,”வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”என்னும் கண்ணதாசனின் பாடலும் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
யார் யாருக்கு என்ன நிலைமையோ யார் அறிவார், இன்னம்பூரார் போன்ற தைரியசாலிகள், அனுபவசாலிகள், சமாளிக்கிறார்கள். எத்தனை எத்தனை மனிதர்கள் இந்தத் தனிமையை சமாளிக்க முடியாமலும், அந்த தனிமையை அழிக்க முடியாமலும்
அவதிப்படுகிறார்கள் என்பதை நினைத்து மனதுக்குள் வருந்தினேன், ஆனாலும் எவற்றையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், திரு இன்னம்பூராருக்கு என்னால்
முடிந்த ஆறுதலைக் கூறினேன், அவர் மின்னாக்கத்துக்காக வாங்கி வரச்சொன்ன காமிராவை துபாயிலிருந்து வாங்கி வந்தது அவரிடம் கொடுத்தேன், (பணத்தை உடனே கொடுத்துவிட்டார்), அவர் வீட்டில் அவருடைய மனைவியின் புகைப்படம் இருக்கிறது. அந்தப் புகைப்படத்தின் முன்னே ஒரு வினாடி நின்று அந்த இனிய தெய்வத்தை, இன்னம்பூராரைப் பார்த்துக்கொள்ளச்ச் சொல்லி மனதார வேண்டினேன் ,அதுவும் இன்னம்பூராருக்குத் தெரியாமல், கழுகு அல்லவோ
மூக்கில் வியர்க்கும், தணிக்கை அலுவலக நியாபகமும், அனுபவமும் உள்ள மனிதர், ஒரு பார்வையில் வினாடி நேரத்தில் எடைபோடக் கூடிய மனிதர், அதனால் அவர் அறியாமல் வேண்டினேன், நான் நடிகனல்லவா?
அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த போது என் முத்தண்ணா பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு உணர்வு, மனம் நெகிழ்ந்தாலும் வெளிக்காட்டாமல் இயல்பாக பொதுவாக சில விஷயங்கள் பேசின பிறகு, அவர் கையில் இருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப்பார்த்தேன்- The Trial And Death of Socrates by Plato. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். இஷ்டமிருந்தால் இந்த மாதிரி சமாச்சாரங்களை கதை சொல்லியாக பேசுவார். இல்லையெனில், என்ன
கேட்டாலும், பேச்சை மாற்றிவிடுவார். இவர் ஒரு குழந்தையா? அல்லது பெரிய மனிதரா என்று அடிக்கடி சந்தேகம் வரும், சுற்றி வளைச்சு? ஆரம்பித்தார்.ஆமாம் அவரும் மனம் நெகிழ்ந்திருந்தார். அவராகவே சொன்னது, “ நாம் மின் தமிழில் எழுதுகிறோம், சோக்ரதர் என்ற நூலை பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை திரு.வி.க. அவர் என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டு விட்டு, சாக்ரடீஸ் எப்படி இறந்தார் தெரியுமா? என்று வேறு இடத்திற்கு சென்று விட்டார்.
‘தானே தைரியமாக சிரித்துக்கொண்டே ஒரே மூச்சில் விஷம் குடித்து இறந்தார்.’என்றேன். இல்லை. தைரியமாகக் குடித்தார், ஆனால் அவர் ஒவ்வொரு பகுதியாகக் குடித்தார், கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல் மரத்துப் போய்க்கொண்டே
வந்தது காலிலிருந்து பாகம் பாகமாக, கடைசீ பாகம் விஷத்தைக்
குடித்துவிட்டு சாக்ரடீஸ் சொன்னது என்று ஒரு செய்தி சொன்னார். யாருக்கோ அவர் கொடுக்கவேண்டிய தொகையைக் கொடுத்துவிடச் சொன்னாராம்,இறக்கும்போது கடன்காரனாக சாகவிரும்பாத சாக்ரட்டீஸ். அவருக்கு விஷம் கொடுக்க வந்த அரசு நியமித்த கொலையாளியே அழுகிறான் பார் என்று படத்தை காட்டும்போதே அவர் கண்கள் கலங்கியிருந்தன. மனித மனம் விசித்திரமானது, அதை மட்டும் என்னால் உணரமுடிந்தது,
சான்றோர்களின் கதி இது தான் என்றார். சாக்ரிட்டீஸ்ஸின் தத்துவங்களை எடுத்து சொன்னார். சொஃபிஸ்ட்ஸ், சாக்ரெட்டீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில்,
சிசிரோ, வெ.சாமிநாத சர்மா என்று சொல்லிக்கொண்டே போனார்.சாக்ரட்டீஸ் தான் காந்திக்கு வழிகாட்டி. ‘எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. தெரியாது
என்ற சொல்ல உனக்கு துணிவு இல்லை. நான் துணிவுடன் அதை ஒத்துக்கொள்கிறேன்.’என்பது தான் அடிப்படை என்றார். கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் புரியவில்லை.
ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது. அவர் அக்கால கிரேக்க தத்துவத்தில் ஆழ்ந்து விட்டார். நானும் வீடு திரும்பி விட்டேன்.”
ஹூம் எத்தனையோ சாக்ரடீஸ்கள், விஷம் மட்டும் வித்யாசமானது.கொடுப்பவர் மாறுகிறார், காட்சிகள் மாறுகின்றன, கோலங்கள் மாறுகின்றன. ஆனால் அறிஞர்கள் மாறுவதே இல்லை
பின் குறிப்பு:
சோக்ரதர் என்ற நூலை பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை திரு.வி.க. அவர் என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டாரே தவிர,என்ன சொன்னார் என்று கடைசி வரை சொல்லவே இல்லை’.
அன்புடன்
தமிழ்த்தேனீ
* * *
கண்களிருந்தால் உன்னை பார்க்கலாம்; என்னையே பார்த்துக்கொள்ள, ஒரு பிரதிபலிப்பு வேண்டுமல்லவா. தமிழ்த்தேனி பிரதிபலித்தார். நன்றி. சிறு வயதில், தத்துவம் புரியாத நிலையிலும், சாக்ரெட்டீஸ் என்னை மிகவும் பாதித்தார்், வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழியாக்கத்தின் மூலம். என் மனம் அவர் உயிரிழந்த காரணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தது. 18/19 வயதில் கில்பெர்ட் முர்ரே, பெஞ்சமின் ஜொவெட் போன்ற பேராசிரியர்களின் நூல்களின் மூலம் தெளிவுரைகள் கிடைத்தன. என் பயணங்கள் எப்படியெல்லாம் அமைந்தாலும், சாக்ரெட்டீஸ் அக்ராசனராகவே இருக்கிறார். எனவே, தமிழ் தேனீ என்னில்லம் வந்தபோது, அங்கு அவர் சர்வவியாபகராக இருந்தது வியப்புக்குரியது அல்ல.
கி.மு. 469ல் ஒரு கல்லுளி மங்கனாக (சொல் வந்து பொருத்தமாக விழுகிறது!) பிறந்த (son of a stonemason) சாக்ரெட்டீஸ், கிரேக்க அழகு இல்லாத விகாரரூபன்; பானை தொந்தி; விசித்திரமான நடை, தேடும் கண்கள், ரோமம் அடர்ந்த உடல். ஊரார் மாதிரி பட்டும், பகட்டும், அவரை கவரவில்லை. ஊருக்கு ஒவ்வாத மனிதன். சமயவெறி சமுதாயத்தின் மீது சவாரி செய்த காலத்தில், தன்னுடைய உள்ளுணர்வை ("daimonion") அரியணையேற்றியவர். அவரின் பாதை கடினம், கல்லும், முள்ளும். ஆனால், என்னே கவர்ச்சி! என்னே நேர்த்தி! என்று இளைஞர்கள் சூழ, அவரதடிகள் பணிய, கீர்த்திமானாகி விட்டார், அவர். ஐம்பது வருடங்கள் கழிந்தன, இவ்வாறு.
கிரேக்க அரசுகள் சிறியவை, நகருக்கு ஒன்று. முனிசிபாலிட்டி என்று கூட சொல்லலாம். அவர் வாழ்ந்த ஏதென்ஸ் நாட்டின் அரசுக்கு கெட்டகாலம்: போர்க்களங்களில் படு தோல்வி, நிதி நிலை மோசம், ஏழைகள் பட்டினி, எல்லாம் தலைகீழ். சால்ஜாப்பு, நொண்டிசாக்கு, பலிகடா எல்லாம் வேண்டியிருந்தது, இன்றைய இந்தியாவின் நிலையை போல. பொறியில் அகப்பட்டுக்கொண்டது சாக்ரெட்டீஸ். அரசவைக்கு இழுத்து வரப்பட்டார். குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டது: 1. நாட்டின் கடவுளர்களை அவமதித்தது; 2. இளைஞர்களின் மனதை குலைத்தது. குற்றவாளி என்று தீர்ப்பு. தண்டனை: ஃபெப்ரவரி, 15, 399 கி.மு. அன்று, அரசு மேற்பார்வையில் தற்கொலை, ஹெம்லாக் என்ற விஷம் அருந்தி.
இன்றைய சூழ்நிலையில் கூட இவர் உயிர் தப்புவது கடினம். ‘ சொல்லின் பொருள் ஆராய்ந்து அறிக... புரிந்து செயல்படுக.‘ என்று சொல்லும் சாக்ரட்டீஸ்ஸுக்கு விதண்டாவாதம் பிடிக்காது. சமுதாயத்தின் நன்மைக்கு தர்க்கவாதம் ஊறு விளைக்கும் என்னும் இவர், ஒரு சிக்கலான வினா எழுப்பினார்.
உரையாடல்:
சாக்ரட்டீஸ்: ரொட்டியும், கள்ளும் எங்கே கிடைக்கும்?
(இடம் சொல்லப்பட்டது.)
சாக்ரட்டீஸ்: நேர்மையானதும், உன்னதமானதும் எங்கு கிடைக்கும்?
(தடுமாற்றம்)
சாக்ரட்டீஸ்: என்னிடம் வா.
மஹாத்மா காந்தி பேசுவது போல் இருக்கிறது. இல்லை!
கட்டுரை நீண்டுவிட்டது. இதே உத்வேகத்தில் நூறு பக்கங்கள் எழுதி குவிக்கலாம். ஸ்டாப்! சுவாசிக்கும் காற்றைப் போல, அறிவை நாடிய சாக்ரட்டீஸ்ஸை, ஏதோ ஒரு ஞானி என்று முத்திரை குத்தி,விலக்காதீர்கள். ஒரு பாமர மனிதன், அவர். நேசமும், ஆற்றலும் தான் அவருக்கு முக்யம். தண்ணியும் போடுவார். சண்டையும் போடுவார். இந்த உலக புருஷன், மற்றவர்கள் மாதிரித்தான். ஆனால், அவர் ஒரு தொடுவானம்!
இன்னம்பூரான்
15 02 2012
Cignaroli, Giambettino - The Death of Socrates - Rococo - Oil on canvas - ...
உசாத்துணை:
No comments:
Post a Comment