அன்றொரு நாள்: டிசம்பர் 31:
தெரில்லெ சாமி கதை
நகைச்சுவையுடன், அப்பா ஒரு கட்டுக்கதை சொல்லுவார். திருச்சியில் கலைக்ட்டராக பதவி ஏற்குமுன், ஊர் சுற்றிப்பார்க்க விரும்பினார், வில்சன் துரை. வடிவேலு தான் துணை, மொழிபெயர்ப்பு, டூரிஸ்ட் கைட், ஜட்கா வண்டியோட்டி எல்லாம். ஒரு கல்யாண ஊர்வலம் போகிறது. வில்சன் இது என்ன என்று கேட்டார். யாரோ வடிவேலுவை எச்சரித்திருக்கிறார்கள். ஆயிரம் கேள்வி கேட்பான், ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் என்று. ‘தெரில்லெ சாமி’ என்றான், ரத்னசுருக்கமாக. மதிய உணவுக்கு பின் ஒரு ரவுண்டு. ஒரு பிரேத ஊர்வலம். அதே கேள்வி! அதே பதில்! வில்சன் தொரை கேட்டாரு, ‘என்னப்பா இது? தெரில்லெ சாமிக்கு இன்னிக்கே கல்யாணம்; இன்னிக்கே சாவா!’ என்று. அந்த மாதிரி: டிசம்பர் 30 மணம்; டிசம்பர் 31 மரணம்: வருடங்கள் தான் வேறே.
இது சும்மா அறிமுகத்தின் முதல் பத்தி. கிட்டத்தட்ட ஒரு கண்டம் போல விசாலமான, ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கால்களை ஊன்றியிருந்த ரஷ்யாவின் ஜார் அரசர்களை போல கொடுங்கோலர்கள் வரலாற்றில் மிகக்குறைவு. 22.5 மிலியன் சதுரமைல்கள் பரப்பு, இந்த உலகிலேயே பெரிய நாட்டுக்கு. ஜனத்தொகை முழுதும் அடிமைகள். சாது மிரண்டது 1917. ஒரு மாபெரும் புரட்சி. கெரன்ஸ்கி, ட்ராட்ஸ்கி, லெனின், ஸ்டாலின், குருஷேவ்,ப்ரெஷ்னெவ், கோர்பஷேவ், யெல்ட்ஸின், புடீன், போல்ஷிவிக், கம்யூனிஸ்ட், இரும்புத்திரை எல்லாம் பற்றி எழுத நாள் பிடிக்கும். பக்கம், பக்கமா எழுதணும். யார் படிப்பா? சொல்லுங்கோ. அதனால், வந்ததையும், போனதையும் சொல்லிட்டு போயிண்டே இருக்கேன். வருஷம் வேறே முடியப்போறது.
ஜார் கொடுங்கோலாட்சி மார்ச் 1917ல் கூறு போடப்பட்டது. தற்காலிக அரசினால், லெனினுடைய போல்ஷ்விக் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அக்டோபர் புரட்சி என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட புரட்சி மூலம் ஆளுமையை அவர்கள் கைபற்றினர். முதல் உலக யுத்தத்திலிருந்து சோவியத் ரஷ்யா விலகியது. உள்நாட்டுப்போர் என்னவோ 1917லிருந்து 1923 வரை ஓயவில்லை. வெளிநாடுகளின் தலையீடு,ஜார் நிக்கொலஸ் IIம் அவன் குடும்பமும் சிரச்சேதம், 1921ம் வருட பஞ்சம் (5 மிலியன் மக்கள் சாவு), போலண்ட், ஃபின்லாண்ட், எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியாவுடன் சண்டை,சச்சரவு. இத்தனை பிச்சல் பிடுங்கலுக்கு நடுவில் ரஷ்யா, காகசியா, உக்ரேன்,பைலோரஷ்யா ஆகியவற்றின் கூட்டுக்குடித்தனங்கள் ஸோவியத் குடியரசுகளின் ஒருமித்த ராச்சியத்தை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான உடன்பாட்டையும், பிரகடனத்தையும் ‘அதிகாரபூர்வமாக்கிய’ தினம், டிசம்பர் 30, 1922. துரிதகதியில் ஒரு வல்லரசாகி, அமெரிக்காவுக்கு ஓயாத தலை வலி கொடுத்தது. உலகெங்கும் கம்யூனிசம் பரப்ப, இல்லாதததும், பொல்லாததும் செய்தது. ஆரம்பகாலத்தில் ஈ.வே.ரா. ~ நேரு எல்லாரையும் வளைத்துப்போட்டது. இந்தியாவும் கூஜா தூக்கியது. லெனினும், ஸ்டாலினும், ஜார் மன்னர்களை மிஞ்சினர். குருஷேவ் போன்ற கோமாளிகளையும், யெல்ஸ்டீன் போன்ற மிடாக்குடியன்களையும் விடுங்கள். கோர்பஷேவ் என்ற மிதவாதி 1985ல் தலைமை ஏற்று, செல்வநிலையை சரி செய்ய முயன்றபோது தான், பிரிவினை வாதங்கள் தலையெடுக்கத் தொடங்கின. தொடக்கம்: ஹெல்சின்கி உடன்பாடு என்ற மூன்றே நபர்கள் அமைத்த கம்யூனிசத்தை எதிர்க்கும் பின்லாந்து அமைப்பு: ஜூன் 1986. டிசம்பர் 1986 ~ லாட்வியாவில் முந்நூறு பேர் ஊர்வலம். கஜகஸ்தானில் கலாட்டா: மூவாயிரம் பேர். 1987-88: பால்டிக் மாநிலங்கள் பல்டி! கோர்பஷேவ்வின் ஆளுமையும் சுரத்தும் ‘விர்ரென்று’ இறங்க, பெரும்பாலான மாநிலங்கள் கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டுப் போல விலகி விட, ரஷ்யா தனித்து விடப்பட்டது. கோர்பஷேவ் ராஜிநாமா: டிசம்பர் 25, 1991. இந்த உருக்குலைதலை ஐ.நா. அங்கீகரித்து, சோவியத் ரஷ்யாவுக்கு பதில் தனித்து விடப்பட்ட ரஷ்யா தான் அங்கத்தினர் என்றது, டிசம்பர் 31, 1991 அன்று. ‘சோவியத்’ என்ற அடைமொழி மறைந்த நாளும் அதுவே. இந்த 70 வருட இடைவெளி (1922 ~1991) ஒரு நாட்டின் வரலாற்றில், காலையும்,மாலையும் போல ~‘1922ல் மணம் & 1991ல் மரணம் என்றால்: ‘தெரில்லெ சாமி’ போல! இல்லெ!
இன்னம்பூரான்
31 12 2011
உசாத்துணை:
Daniels, RV:The Rise and Fall of Communism in Russia: Yale University Press
No comments:
Post a Comment