Thursday, July 7, 2016

இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 2 ஜூலை 7, 1916

இன்னம்பூரான் பக்கம் 7 
நூறு வருடங்களுக்கு முன்னால் 2
ஜூலை 7, 1916



Friday, July 8, 2016, 4:50
பிரசுரம்: http://www.vallamai.com/?p=70195


இன்னம்பூரான்
ஜூலை 7, 2016

நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினம் பிறந்தவர், பேராசிரியர் Chia-Chiao Lin (C.C.Lin) உச்சாடனம் இப்படியே இருந்தால், பிரச்னையில்லை. அது இங்கு ஒரு பொருட்டும் அல்ல. அவருடைய 96 வருட வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். சைனா நாட்டின் இன்னல், பின்னல்களும், தீர்வுகளும் அவருடைய காலகட்டத்தில் எளியதாக அமைய வில்லை. மிகவும் பின் தங்கிய அந்த நாட்டிலிருந்து பெருமளவு கப்பம் கறக்கப்பட்டிருந்து, மேல் நாடுகளால். அமெரிக்கா கணிசமான அளவுக்கு, அதை திருப்பி அளித்தபோது, அந்த வரவு கல்வி மேன்மைக்கு பயன் படுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. அதன் மேல்வரவு தான் நமது பேராசிரியர். அவர் உலகத்திலேயே மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதையாக அறியப்பட்டார். அவருடைய வளர்ச்சி வியப்பை விளைவிக்கிறது. Tsinghua பல்கலையில் இரண்டாவது இடம் பெறும் மாணவனை பற்றித்தான் ஹேஷ்யம். முதலிடம் இவரது எப்போதுமே.
சிலருடைய வாழ்க்கைகளில் திருப்புமுனைகள் தெய்வாதீனமாக அமையும். அவ்வாறே, ஜப்பான் சைனா மீது படையெடுத்த போது, சைனாவின் விமானங்களால், ஜப்பானின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவரது ஆசான் Pei Yuan Zhou அவர்கள் இவரை தன்னுடைய ஆய்வை ஏரோடைனகிக்ஸ் பக்கம் திருப்பி, நாட்டின் பாதுகாப்புக்கு உழைக்க தூண்டினார். அத்துறை மேல்படிப்புக்காக, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்ற நமது பேராசிரியர் 1944ம் ஆண்டு அத்துறையில் அமெரிக்காவின் கால்டெக் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றதை விட, அது Werner Heisenberg என்ற உலகமே மிகவும் போற்றிய விஞ்ஞானி தனது முனைவர் ஆராய்ச்சியில் எழுப்பிய வினாவுக்கு விடை கண்டது என்ற சாதனை. இவரை மேல்நாட்டு விஞ்ஞானிகள் இடையே சமானமானவராக ஏற்றுக்கொண்டது ஒரு புகழுரை தான். ஏனெனில், ஹைஸன்பர்க் அவர்களை சிந்தனையை, இவர் தெளிவாக வெளியிட்ட அதிசயம் தான்.
இவரின் அடுத்த சாதனை, கணினி துறையில். ஒரு விருந்தில் இவருடன் சற்றே அளவளாவிய கணினி மேதை John von Neumann அவர்களுடன் சேர்ந்து அக்காலத்து ஐபிஎம் கணினியை உபயோகித்து, பெரும் விஞ்ஞான சிக்கல்களை அவிழ்த்தது.
கணக்கு சாத்திரத்தை நடைமுறை சாத்தியங்களுக்கு பயன் படுத்தியவர்கள் வரிசையில் இவர் இடம் பெறுகிறார். 1953ம் வருடம் விஞ்ஞானத்தின் மையமாகிய எம்.ஐ.டி. யில் இவர் பேராசிரியர் ஆனார். வாழ்க்கையின் இறுதி பகுதியை சைனாவில் தன் கல்லூரியில், தன் ஆசானை பெருமைப் படுத்தும் வகையில், விஞ்ஞான மையம் அமைத்து, அதை பேணுவதில் நிறைவு கண்டார்.
மேற்படி வரலாறு மண்ணில் புதைந்து கிடக்கும் மேதைகளில் சிலர் தலையெடுக்க எதிர்பாராத நிகழ்வுகள் உதவுவதை கூறுகிறது. ஒரு துறையின் சாதனைகள் மற்ற பற்பல துறைகளும் உதவும் என்பதற்கே இவரே சாக்ஷி.
இவரை நாம் யாவரும் வணங்க வேண்டும்.
கலைமகளை போற்றுவுமாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://ymsc.tsinghua.edu.cn/guanming/image/CCL.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 1 ஜூலை 6, 1916



இன்னம்பூரான் பக்கம் 7

நூறு வருடங்களுக்கு முன்னால் 1

ஜூலை 6, 1916

இன்னம்பூரான்
ஜூலை 6, 2016

பிரசுரம்: http://www.vallamai.com/?p=70172ஜூலை 6, 2016: 18 47

சமுதாயத்தில் நல்லதும் கெட்டதும் நடந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், நல்லது நடக்கவும், தீயது விலக்கவும், விழிப்புணர்ச்சி அளிக்கும் அறிவுரை மிகவும் உதவும். கொசு மருந்திலிருந்து விதவாவிவாகம் வரை, விழிப்புணர்ச்சியும், அதை பரப்பும் உத்திகளும், விளம்பரங்களும் வரவேற்கப்படுகின்றன.

நூறு வருடங்களுக்கு முன்னால், ஒரு நிகழ்வு. 1914ம் வருடம் தொடங்கிய முதல் உலக யுத்தத்தில் அமெரிக்கா பங்கு கொள்ள நிச்சயித்த காலகட்டத்தில், ராணுவத்துக்கு ஆள் பிடிக்க வேண்டியிருந்தது. ‘ நாம் தயார் நிலையில் இருக்கிறோமா? ‘ என்ற வினா எழுப்பி,ஜூலை 6, 1916 அன்று பிரசுரமான லெஸ்லி வாராந்திர இதழ் என்ற பத்திரிகையில், ‘இவர் தான் அமெரிக்க மாந்தர்‘ என்று குறிப்பிடும் வகையில், ஜேம்ஸ் மாண்ட்கோமரி ஃப்லாக் என்பவர் வரைந்த ‘அங்க்கில் சாம்‘ என்ற படம் பிரசுரம் ஆனது. அவர் அமெரிக்கர்களை யுத்த ஆயத்தங்களுக்கு அழைப்பதாக வாசகம் அமைக்கப்பட்டது. இதற்கு ஓஹோ என்ற ஏகப்பட்ட வரவேற்பு.  இரு வருடங்களுக்குள் 40 லக்ஷம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. மக்களும் திரண்டு உதவினர்.
நான் சமீபகாலத்தில், கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழிந்த பின்னும், இந்த முத்திரை சித்திரம் பயனில் இருப்பதைக் கண்டேன்.

யார் இந்த சராசரி அமெரிக்கனின் மாதிரி என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் கேட்டதற்கு, சிக்கனம் கருதி தன்னையே மாதிரியாக வைத்துக்கொண்டதாக அந்த ஓவியர் விளக்கம் அளித்தார். ஜனாதிபதியும், இது தான் அமெரிக்க குணாதிசயம் என்று பாராட்டினார். அது யாது என்றால், நடு நிலை நியாயம், பொறுப்பேற்கும் தன்மை, நாணயம், நாட்டுப்பற்று எல்லாம் உள்ள மனிதன். 

ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!

நாம் நம் நாட்டுக்கு எந்த மாதிரி பிரதிபலிப்பு முத்திரை சித்திரம் வரையலாம்?
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Unclesamwantyou.jpg


படித்தது: James Montgomery Flagg (1877–1960). Wake Up America! New York: The Hegman Print, 1917. Color lithographic poster. Prints and Photographs Division, Library of Congress (58D.6)



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com