இதுவும் ஒரு பிருகிருதி: 6
சீசனுக்கு சீசன் மாறும் எங்கள் விளையாட்டுக்கள். ஆனா, எடுத்துண்டுட்டா, பயங்கர மும்மரமா ஆடுவோம். சோறு தண்ணி கிடையாது. கோலிக்குண்டெல்லாம் சிறுசா இருக்கச்சத்தான். அப்றம் தொட்டுக்கூட பார்க்கமாட்டோம். தம்பிமாருக்கு தானம் பண்றதுக்கு முன்னாலே 2ஜி ரேஞ்சுக்கு பேச்சு வார்த்தை நடக்கும். கசியும்!உடன்படிக்கைகள் போடப்படும். அவை மீறப்படும். தம்பியுடையவன் படைக்கு அஞ்சாமல் இருக்கலாம். ஆனா, என்னிக்கு தம்பி பாய்வோனோ என்று அச்சப்படவேண்டும். (சார்! நான் இன்றைய பாலிடிக்ஸ் பேசல்ல.) ஏன்னாக்க, பங்குச்சந்தை விலை ஒன்று, பங்காளிச்சந்தை விலை மற்றொன்று என்று கேட்லாக் போட்டு நம்ம ‘பினாமி்’ பெத்த பெருமாள் கிட்ட கொடுத்துடுவோம். அவன் கிட்ட பேசிக்கமுடியாது. சிரிச்சு சிரிச்சு பேசியே குடலை உருவி கைலே கொடுத்துருவான். அவன் தான் இன்னிக்கு தலை மாந்தன். கேளும் அவன் கதையை.
ஒரிஜினலா அவனோட பேரு, பெருமாள். அவன் பொறக்கச்சே கருடன் ஆகாய வீதிலே பறந்துச்சுன்னு அடுத்தாத்து ஜானம்மா எடுத்து விட, பிரசவம் பாத்த அத்தைக்காரி ‘பெருமாள்’ன்னு பேர் வச்சுட்டா. அது நிலைச்சுப்போச்சு. அவனோட அப்பா பேரு அய்யாசாமி, வக்கீல் குமாஸ்தா. அவனே பெருமாள் மாதிரி தான். நின்னுண்டே, உக்காந்துண்டே, படுத்துண்டே கட்சிக்காரன்கிட்ட வபையா கறந்துடுவான். வக்கீல் சுப்புராமய்யர் அவனுக்கு சம்பளம் கொடுக்கமாட்டார். எனக்கு மேலே ‘கிம்பளத்தில் அடிக்கிறான் ஓய்’ என்பார். ஆனா, அவர் ரொம்ப ஜபர்தஸ்த். கோர்ட் என்ன கோர்ட்? செகண்ட் க்ளாஸ் சப்மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு. ஜட்ஜ் தீக்ஷிதலு அப்றாண சாது. அடங்கின ஜந்து. கிராமத்துக்காரன் என்றால், இங்கிலீஷ்லே பிளந்து கட்டி, அவனை மடக்குவார், வக்கீல் சுப்புராமய்யர். ஜட்ஜ் கிட்ட தமிழ்லெ ஆர்குமெண்ட். பரிமேலழகரை எடுத்து விட்டார்னா, தட்டாமாலை தான். சுத்தி சுத்தி வருவார். என் கட்சிக்காரன் அப்பாவி என்பார். ஒண்ணும் புரியல்லைன்னு, ஜட்ஜ் மோட்டுவளையை பாத்துண்டு இருப்பார். கேஸ் இவர் பக்கம் தான் ஜெயிக்கும். ஏன்னா? அய்யாசாமியை அவுத்து விட்டார்னா, ஊரே நாறிப்போய்டும், அப்டி வதந்தி, கப்சா! எதிர்கட்சி வக்கீலுக்கே பயம்னா பாத்துக்கோங்கோ! அய்யாசாமியை பத்தி என் கிட்ட பத்மநாபசாமி கோயில் புதையல் மாதிரி சேதி இருக்கு. ஆராவது கேட்டா பாத்துக்கலாம்.
இப்படி சர்வ லோக எத்தன் ஆன அய்யாசாமி என்றைக்கும் இல்லாத திருநாளா, பிள்ளையாண்டனை, அவனோட பிறந்த நாள் அன்று ‘படா எத்தன் ஆன’ வக்கீலாத்துக்கு கூப்பிட்டுண்டு போயிருந்தார். எதுவுமே வக்கீல் சுப்புராமய்யருக்கு அலக்ஷியம். படிக்கறதா பேர் பண்ணிண்டிருந்த கேஸ்க்கட்லேர்ந்து தன்னுடைய முகாரவிந்தத்தை பராமுகம் ஆக்கி, வந்திருந்த வாண்டுவிடம் ‘உன் பேர் என்னடா’ என்று வினவ, அவனும் ‘பெருமாள்’ என்று பகர, ஐயர்வாளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர் தொடுத்தக் கணை, ‘ஓய் அய்யாசாமி! என்ன அனா.பினா? (அது லோக்கல் லிங்கோ: அனர்த்தம்=>அதிகப்பிரசங்கித்தனம்) தாராதம்யமில்லாத நாமகரணம்! அவன் என்ன முடுக்குத்தெரு மஹா விஷ்ணுவா? பெருமாளாம்! பெருமாள்! முதல்ல அத மாத்துங்கோ’.
பத்து நாள் கழிச்சு, குளத்திலே ஸ்னானம் பண்ணிட்டு வரச்சே அந்த பயல் வந்து துண்டை தலேலே சுத்திண்டு, முண்டமா நிக்கறது. ‘டேய்! இப்ப உன் பேர் என்னடா, வச்சான், உங்கப்பன்?’ ஜிவ்வு மாதிரின்னா இழுக்கிறான் பயல், ‘வக்கீல் மாமா! என் பேரு, ‘பெத்த பெருமாள்’!
இன்னம்பூரான்
09 07 2011
No comments:
Post a Comment