அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1
இறை வணக்கம்:
‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;
சீர்பெற்றிட நீ யருள் செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும்
வானத்தையு முன் படைத்தவனே!
ஐயா, நான் முகப் பிரமா,
யானைமுகனே, வாணிதனைக்
கையாலணைத்துக் காப்பவனே,
கமலா சனத்துக் கற்பகமே.’
~ மஹாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை: விருத்தம்
குரு வந்தனம்:
பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி, அவ்வப்பொழுது, குட்டியும், தட்டியும், மஹாகவியை பற்றி, திலகர் மடலில், ‘அதிக’ பிரசங்கிக்க வைத்து, கல்விக்கனல் மூட்டிய பாலு சாரை நெடுஞ்சாங்கிடையாக தெண்டன் சமர்ப்பிவித்த விஞ்ஞாபனம். அன்றைய நாள் செப்டம்பர் 11, 1939/40? அல்லது அவருடைய ஜன்மதினம்? நினைவில்லை. ஆனால், ஒரு பெரியவர் மேடை ஏறி வந்து, என்னை ஆரத்தழுவி ‘ஓ’ என்று அழுதார். ஆனந்தக்கண்ணீர். ஆத்துக்கு வந்த பின், சித்தியாவும் அழுதார். அத்தையும், சித்தியும் சுத்திப்போட்டா. இப்போ புரியது, பாலு சார். கல்வியும் தொடருகிறது. கனலும் கணகணப்பு. பக்தியும் பரவசம்.
கவி வந்தனம்:
~ தமிழன்னையின் அருமந்த புதல்வனும்,
உயர் ஆஸனத்தில் அமர்ந்து எமையெல்லாம்
பாலிக்கும் கவிஞர் குல விளக்கும்
ஆகிய மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்
~ பராக்! பராக்!
~ ராயப்பேட்டை வேப்பமரத்தடி தமிழ் மொழியும், தேசபக்தியும் கலந்த திருக்கண்ணன் அமுதாகிய தேசபக்தன் இதழ் அச்சாபீஸ்ஸில். வந்துட்டார்! வந்துட்டார்! இது பரலி.சு.நெல்லையப்பர்.
வருணனை:வெ.சாமிநாத சர்மா.
போதிமரத்தடி தென்றல்: திரு.வி.க.
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி! ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!
(கவிதை நடை இல்லை. யதுகை? மோனை? பாலு சார் அதை சொல்லித்தரல்லை. வினோத்தின் மென்பொருள் வரலையப்பா, அப்போது! நான் என்றோ ஆங்கிலத்தில் பதித்த வருணனை:வெ.சாமிநாத சர்மா தான் மூலம். இது நிஜம்.)
இன்றைய தினம் 1921ம் வருடம் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அமரரானார். அவரை பற்றி எழுத பல சான்றோர்கள் இருக்கும் இந்த அவையில் மாணவனாகிய எனக்கு எழுத தயக்கம். காலதேசவர்த்தமானம் கருதி, ஒரு சொல் பேசி விட்டு, நகர்ந்து விடுகிறேன். பழித்து அறிவுறுத்துகிறார், ‘நடிப்புச் சுதேசிகள்’ என்ற கிளிக்கண்ணி கவிதை ஒன்றில். இன்று பாரதமாதாவை வற்புறுத்தி, இற்செறித்து, கண் கலங்க வைத்திருக்கும் நடிப்பு சுதேசிகளை என்றோ எடை போட்டு,
‘உரமும், திறமும் அற்றவர்கள், வாய்ச்சொல்லில் மட்டும் வீரம், கூவுவதோ பிதற்றல், அந்தகன், அலி, கண்ணிருந்தும் குருடன், மந்திரத்தில் யந்திரம் தேடுபவன், செய்வதறியாதவன், ஆன்மிகம் பேசும் நாத்திகன்,பேதை, அஞ்சி நடுங்குபவன், ஊமை, வாழத்தகுதியற்ற ஈனன், பொய்யன், ஆஷாடபூதி, அற்பன், செம்மை அறியாதவன், சோம்பேறி, வெத்து வேட்டு என்று பொருள்பட, வெளிப்படையாக, எளிய தமிழில், கண்டனம் செய்திருக்கிறார். ஈற்றடியில் ‘...அதை மனத்திற் கொள்ளார்’ என்று சாடியிருப்பதையாவது நாம் கவனத்துடன் பார்த்து, சுய விமரிசனம் செய்து கொள்வது சாலத்தகும்..
ஆம். நெஞ்சில் உரம் இருந்திருந்தால், ஊழல் மிகுந்திருக்காது. திறன் இருந்திருந்தால், லஞ்சத்தை ஒழித்திருப்போம். வாய்ச்சொல்லிலும் மட்டும் இல்லாமல், மனவுறுதியிலும், உடல் வலிமையிலும், வீரம் இருந்திருந்தால், அயலார் மிரட்டமுடியாது. பிதற்றி, பிதற்றியே, உலக அரங்கில் தன்மானமிழந்தோம். கண் கூடாக அதர்மங்களை கண்டும், கண்ணில்லா கபோதியென மண்ணில் வீழ்ந்து கிடந்தோம்.கட்டை பஞ்சாயத்துக்குத் தொடை நடுங்கினோம். சாதி மத பேதம் வளர்க்கும் பேதைகள் ஆனோம். முகமூடி அணிந்த கொள்ளையர் போல் சொத்து சேர்ப்பவர்களின் மெய்கீர்த்தி இசைத்தோம், வறுமை தீராதப் பாணர்களைப்போல அல்லாமல், அற்பத்தனமாய் ஏழையின் உணவை திருடுவோருடன் கூட்டு சேர்ந்தோம்.
இது எல்லாம் உண்மை, ஐயா! ஆனாலும், மார்க்கமொன்று உண்டு. மனமிருந்தால், குணமும் கூடினால், மஹாகவியுடம் சேர்ந்து, ‘...பாரத தேசமென்று தோள்’ கொட்டலாம். அதற்கு தகுதி: தேசாபிமானம், விழிப்பு, கல்வி, தர்ம போதனை, சான்றோர் வாழ்க்கை அறிதல், வாய்மையும், நேர்மையும். இவற்றை பெறுவது, நம் கையில்:
~ தனியார்: கற்கலாம்; சிந்திக்கலாம்; தொண்டாற்றலாம். மோசம் போகாமல் இருக்கலாம்.
~ குடும்பம்: சிறார்களுக்கு அறிவுரை; நடந்துக் காட்டுவது; பாசம் வளர்ப்பது.
~ சமூகம்: பெரிய குடும்பமாக இயங்கலாம்; நியாயம் பார்க்கலாம். நேசத்தைக் கூட்டலாம்.
~ சமுதாயம்: கல்வி, சுகாதாரம், மரபு, நற்பண்புகள் என இலக்குகள் வைத்து, வாழ்நெறி இயக்கமாக, சமுதாய மேன்மை நாடலாம். கிலேசத்தைத் தணிக்கலாம்.
~ அரசு: தர்மபரிபாலனம்; தேச சம்ரக்ஷணை.
மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ‘பலே பாண்டியா!’ என்று ஆசிகள் பல வழங்குவார். கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்ளேன் என்று சொல்லிவிட்டு ‘மாஜினியின் பிரதிக்கினை’ என்று பரவசமும் ஆவேசமும் கலந்துயர்ந்த குண்டலினி யோகத்திலே, பரமோனத்திலே பாடுவார்.
ஏனிந்த மாஜினிப்பாட்டு? வரலாற்றுப் போக்கில், மரபும், பண்பும், கலாச்சாரமும், நாகரீகமும் பளிச் என்று மிளிர்ந்த இத்தாலி நாடு அன்னியர் நுழைய, அழிய தொடங்கியது. அழுகல் துர்நாற்றம். அவயவங்கள் வாடி விழுந்தன. ஒற்றுமை பலிகடா ஆகி விட்டது. மக்களுக்கு தன்னம்பிக்கை ஒழிந்து போனது. இருந்தாலும், ஐரோப்பாவெங்கும் தேசாபிமானம் தலை தூக்கியது. ஃப்ரென்ச் புரட்சியின் தாகம் தீரவில்லை. தாரக மந்திரம்: விழிப்புணர்வு/ உரிமை போராட்டம்/ஒருமைப்பாடு/குடியரசு. மாஜினி, கரிபால்டி, கவூர் ஆகிய மூவர் இத்தாலி நாட்டுக்கு புத்துயிர் அளித்தனர். என்றைக்கு அவர்களை பற்றி எழுத முடியுமோ? Please read Sir Arthur Quiller-Couch: The Roll Call of Honour. மாஜினியின் எழுச்சி இன்றும் இந்தியாவுக்கு பாடம். எனவே, மஹாகவியின் ‘மாஜினியின் பிரதிக்ஞை’ யை இங்கே அளித்தேன்.
மாஜினியின் சபதம் பிரதிக்கினை
பேரருட் கடவுள் திருவடி யாணை, பிறப்பளித் தெமையெலாம் புரக்கும் தாரணி விளக்காம் என்னரு நாட்டின் தவப்பெய ரதன்மிசை யாணை பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின் பணிக்கெனப் பலவிதத் துழன்ற வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த விழுமியோர் திருப்பெய ராணை.
ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த சீருய ரறங்களி னாணை.
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென் வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின் ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ அத்தகை யன்பின்மீ தாணை.
தீயன புரிதல் முறைதவி ருடைமை, செம்மைதீர் அரசியல், அநீதி ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும் அரும்பகை யதன்மிசை யாணை தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய உரிமைகள் சிறிதெனு மில்லேன், தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம் துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்.
மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து மண்டுமென் வெட்கத்தி னாணை. முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று அச்செயல் முடித்திட வலிமை அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில் ஆர்ந்த பேராவலி னாணை. நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந் நலனறு மடிமையின் குணத்தால்.
வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண் வளர்ந்திடும் ஆசைமீ தாணை. மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின்மீ தாணை. மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை. பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும் புன்சிறைக் களத்திடை யழிந்தும்
வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும் மெய்குலைந் திறந்துமே படுதல் ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின் அன்னைமார் அழுங்கணீ ராணை. மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும் வகுக்கொணாத் துயர்களி னாணை. ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே யான்செயுஞ் சபதங்கள் இவையே.
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக் கட்டளை தன்னினும் அதனைத் திடனுற நிறுவ முயலுதல் மற்றித் தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம் உடனுறு கடமை யாகுமென் பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும் தடநில மிசையோர் சாதியை இறைவன் சமைகெனப் பணிப்பனேல் அதுதான்.
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத் தந்துள னென்பதை யறிந்தும் அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும் அன்னவர் தமக்கெனத் தாமே தமையல தெவர்கள் துணையு மில்லாது தம்மருந் திறமையைச் செலுத்தல் சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்,
கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும் கருதிடா தளித்தலுந் தானே தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு தளர்விலாச் சிந்தனை கொளலே பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற் பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும், அருமைசால் சபத மிவைபுரி கின்றேன் ஆணைக ளனைத்து முற்கொண்டே.
என்னுடனொத்த தருமத்தை யேற்றார் இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம் தத்தமா வழங்கினேன்; எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச் சுதந்திரம் பூண்டது வாகி இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக் குடியர சியன்றதா யிலக.
இவருடன் யானும் இணங்கியே யென்றும் இதுவலாற் பிறதொழி லிலனாய்த் தவமுறு முயற்சி செய்திடக் கடவேன். சந்ததஞ் சொல்லினால், எழுத்தால், அவமறு செய்கை யதனினால் இயலும் அளவெல்லாம் எம்மவ ரிந்த நவமுறு சபையி னொருபெருங் கருத்தை நன்கிதன் அறிந்திடப் புரிவேன்.
உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கமென் பதுவும் செயம்நிலை யாகச் செய்திடற் கறமே சிறந்ததோர் மார்க்கமென் பதுவும், பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற் பேணுமா றியற்றிடக் கடவேன், அயலொரு சபையி லின்றுதோ றென்றும் அமைந்திடா திருந்திடக் கடவேன்.
எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும் இச்சபைத் தலைவரா யிருப்போர் தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து தலைக்கொளற் கென்றுமே கடவேன், இங்கென தாவி மாய்ந்திடு மேனும் இவர்பணி வெளியிடா திருப்பேன் துங்கமார் செயலாற் போதனை யாலும் இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.
இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன் மெய்யிது, மெய்யிது; இவற்றை என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக. அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க அசத்தியப் பாதகஞ் சூழ்க நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம்யா னுழலுக மன்னோ!
வேறு
பேசி நின்ற பெரும்பிர திக்கினை மாசி லாது நிறைவுறும் வண்ணமே ஆசி கூறி யருளு! ஏழையேற்கு ஈசன் என்றும் இதயத் திலகியே.-
இன்னம்பூரான்
11 09 2011
பி.கு: சாமியோவ்! மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.
|