=அன்றொருநாள்: மார்ச் 1
‘விநாசகாலே விபரீத புத்தி’
அரசு ஆணையிடலாம். அது அத்துடன் வெத்துவேட்டாக பிசுத்துப்போகலாம், மக்களின் ஆதரவு இல்லையென்றால். மக்களின் ஆதரவை திரட்டுவது ஒரு கலை. உத்திகள் பல உண்டு. அவற்றில் ஒன்று: ஆவணச்சான்றை காலதேசவர்த்தமானத்திற்கேற்ப, டைம் பாம்ப் ஆக வெளி கொணர்வது. 1914 ல் தொடங்கிய முதல் உலக மஹாயுத்தத்திலிருந்து தள்ளியே நின்றது, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (யூ.எஸ்.ஏ.). அந்த காலம்! யூ.எஸ்.ஏ. மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாததும், யூ.எஸ்.ஏ.யின் தேவைகளுக்கு முதன்மை ஸ்தானம் அளிப்பதும் வெகு நாட்களாக, அந்த நாட்டின் அடிப்படை கோட்பாடு. அதிலிருந்து பிறழ்வதை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். எனினும், இந்த யுத்தம் போகிற போக்கை பார்த்தால், அமெரிக்கா தலையிடுவதை தள்ளிப்போடமுடியாது என்று அமெரிக்கா அரசு கருதியது. அதில் குறியாக நின்றது பிரிட்டன், நிழலில். போறாத காலம், ஜெர்மனிக்கு. ‘விநாசகாலே விபரீத புத்தி’ என்ற ஆரியவாக்குக்கொற்ப, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சரான ஜிம்மர்மேன் ஜனவரி 19,1917 அன்று மெக்சிகோவுக்கு ஒரு தந்தி அனுப்பினார்,
“... ஃபெப்ரவரி 1,1917 லிருந்து நீர்மூழ்கி கப்பல்கள் மூலமாக யுத்தம் வலுக்கும். அது எங்கள் திட்டம். அதே சமயத்தில், அமெரிக்காவை யுத்தத்தில் எங்கள் பகையுடன் சேராமல் இருக்க, முயல்வோம். அது தோல்வியடைந்தால், அமெரிக்காவை கட்டிப்போட ஒரு யுக்தி. ஜெர்மனியும், மெக்சிகோவும் கூட்டு சேருவோம். சண்டையும், சமாதானமும், இணைந்து செய்வோம். காசு தாரோம். மெக்சிகோ, அமெரிக்காவிடமிருந்து அரிசோனா, டெக்சாஸ், ந்யூ மெக்சிகோ பிராந்தியங்களை பிடுங்க உரிய தருணம். உங்களுடன் மல்லுக்கட்டவேண்டிய நிர்பந்தத்தால், அமெரிக்கா உலக யுத்தத்தில் இறங்கமுடியாது. ஜப்பானுக்கும் வலை போடலாம்...இங்கிலாந்தை மண்டி போட வைப்போம். என்ன சொல்கிறீர்கள்?..”
இந்த மாதிரியான போக்குவரத்துக்கள், தலையை சுற்றி மூக்கைப் பிடிப்பது போல, நடுநிலை நாடுகள், தூதர்கள் வழியாக செல்லும். ஸ்காண்டிநேவியா வழியாக அனுப்பட்ட இந்த ‘விநாசகாலே விபரீத புத்தி’ தந்தியை, பிரிட்டீஷ் வேவுத்துறை வழி மறித்து, பஹு காரியமாக, அமெரிக்காவுக்கு ஃபெப்ரவரி 24,1917 அன்று தத்தம் செய்தது. தாத்பர்யம் யாதெனில், அமெரிக்காவை போரில் இழுக்க, பிரிட்டன் ஏதாவது ஒரு பிரமேயத்திற்காக காத்திருந்தது. ‘பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல’ இந்த தந்தி அமைந்தது. இது அமெரிக்காவின் வேவுத்துறையின் கைங்கர்யம் என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ, ஃபெப்ரவரி 24,1917 அன்றே அதனுடைய ‘கிரஹபலன்களை’ புரிந்து கொண்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், இதை மார்ச் 1, 1917 அன்று ‘விக்கிலீக்’ செய்துவிட்டார். அதிகார பூர்வமாகத்தான்.
மெக்சிகோவும், ஜப்பானும், ‘எங்களுக்கு சம்பந்தம் இல்லை’ என்றனர். ஜிம்மெர்மன்னோ மார்ச் 3ம் தேதி, தான் அனுப்பியது தான் என்று ஒத்துக்கொண்டார். அமெரிக்காவில் ஒரே ஷாக். மக்களுக்கு கடுமையான ஆத்திரம். வேறு என்ன வேண்டும் அதிபர் வில்சனுக்கு? அமெரிக்காவை போரில் இணைத்துக்கொள்வதற்கான தீர்மானத்திற்கு பாராளும் மன்றத்தில் அமோகமான ஆதரவு. ஒரே ஒருவர் மட்டும் தான் எதிர்த்தார்.
விக்கிலீக்குக்கு முன்னோடி இது மாதிரியான காலதேசவர்த்தமான கசிவுகள், நாடியா டேப் அம்பலத்துக்கு வந்த மாதிரி. 2ஜி/எஸ் ஜி/கறுப்பு ஜி/ ஆடிட் ரிப்போர்ட் லீக்/எண்ணெயில் மீன் பிடிக்கிற லீக் அப்டி, இப்டின்னு எத்தனை லீக்குகள் நம்மீது கரப்பான் பூச்சி மாதிரி மேயப்போவுதோ? கடவுளே!
இன்னம்பூரான்
01 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment