குல்லா மனிதன்: 17 01 2016
இன்னம்பூரான்
17 01 2016
“ சர்வ வல்லமையுடைய பரமபிதாவே! தரணியாளும் தேசாபிமானமுள்ள நாடுகள் யாவற்றிலும் சுதந்திரப்பற்றுடன் கூட மனித உரிமைகளை பற்றிய முழுமையான அறிவும் நீ அருளவேண்டும். அப்போது தான் தத்துவ வாதி ஒருவன் உலகின் எந்த பாகத்திலும் பாதம் பதித்து, இது என்னுடைய நாடு என்ற சொல்ல முடியும்.’
~ குல்லா மனிதன்
எனது அருமை நண்பர்களுடன், அதுவும் ஆத்யந்த நண்பரான பக்கத்து வீட்டுக்காரருடனும் அளவளாவும் போது, இந்த ஏக்கம் வெளிப்படும். தக்கதொரு விடை கிடைக்காமல் நாங்கள் தவிப்போம். எங்கு பார்த்தாலும் சண்டையும், சச்சரவும், மதபேத பிதற்றல்களும், வகுப்பு வாத கதறல்களும், மற்றும் பல குஸ்திகளும் சின்ன சின்ன குடியிருப்புகளிலும் கூட ‘முதல் தாம்பூலம்’ பெற்றுக்கொள்வதால், குல்லா மனிதனின் பிரார்த்தனை ஏட்டுசுரைக்காயாக பலருக்கு தோன்றும். அது தவறு.
300 வருடங்களுக்கும் முன்னால் 17 01 1706 அன்று ஜனித்த ‘குல்லா மனிதர்’ ஒரு அரசாளும் மேலாண்மை படைத்தவர், ராஜ தந்திரவாதி, எழுத்தாளர், விஞ்ஞானி, படைப்பாளி, தத்துவ ஞானி. இன்றைய அமெரிக்காவின் சுதந்திரமும், அரசாளும் சாஸனங்களும் கரையேறுவதற்கு நல்வழி வகுத்தவர்களில் ஒருவர்.
ஏழைக்குடும்பம். பெரிய குடும்பம். 17 குழந்தைகள். தந்தை சோப்பும், மெழுகுவர்த்தியும் செய்து குடித்தனம் நடத்தினார். நமது கதாநாயகன் பள்ளிக்கல்வி கற்றது சொற்பம். இவரோ சின்ன வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். படிக்கத்தொடங்கியது அதற்கும் முன்னால், என்று சொல்ல தேவையில்லை. சும்மா கிடக்க விரும்பாத மனிதன் 1723ல் ஊரை விட்டோடி லண்டன் வந்து பற்பல விஷயங்களை கற்ற பின், 18 மாதங்களுக்குள் நாடு திரும்பி, ஒரு இதழ் தொடங்கி புகழ் அடைந்தார். 15 வருடங்களில் சொத்துப்பத்து சேர்ந்த பின், வணிகத்தைத் துறந்து விஞ்ஞானி ஆனார். நவீன அடுப்பும், மின்னல் தாங்கியையும் கண்டுபிடித்து, மின்சாரத்தின் தந்தையானார். கையோடு கையாக அரசியலில் புகுந்து, சீர்திருத்தங்கள் செய்தவாறு புகழேணில் விரைவாக ஏறி, லண்டனில் சில பிராந்தியங்களின் பிரதிநிதியாக பணி புரிந்து, ஆங்கிலேய கலோனியத்துவத்தின் ஆதிக்கத்தை விலக்குவதற்காக, தாய்நாடு திரும்பினார். அமெரிக்கன் தத்துவவாதி மையத்தைத்துவக்கியவர், இவரே. கல்வித்துறையில் பணி புரிந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு வித்திட்டார்.
அவர் திரும்பும் காலகட்டத்தில் அமெரிக்காவின் சுதந்திரப்போர் தொடங்கி விட்டது. சுதந்திர பிரகடனத்தை வரைந்து கையொப்பமிட்ட இவருக்கு ஒரு விசனம். மனைவியாகாத மற்றொரு மாதுவிடம் பிறந்த இவருடைய மகன் வில்லியம் ஆங்கில விசுவாசியாகத்தான் இருந்தார்.
மற்றபடி, கல்வியாளாராகுவும் இருந்த நம் குல்லா மனிதர், ஃபிரான்ஸில் அமெரிக்க தூதுவராக அனுப்பப்ட்டார். இரு நாடுகளுக்கு இணக்கம் உருவாக்கி, அதன் துணையினால், சுதந்திர போருக்கு முடிவு கண்டார். பின்னர் அமெரிக்கா திரும்பி வந்து பல முன்னேற்றங்களுக்கு வித்திட்டு, அரசியல் சாஸனத்தை எழுத உதவினார். அவர் 1790 ம் ஆண்டில் மறைந்தார். இன்றளவும் அமெரிக்காவில் போற்றப்படும், இவரது கனவை நனவு ஆக்குவதில் நாம் எல்லாரும் ஈடுபடவேண்டும்.
அடடா! மறந்து போனேனே! இந்த அதிசய குல்லா மனிதரின் பெயர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geekadelphia.com/wp-content/uploads/2014/02/1-ManyHats_CARTOON-highres-650x1535.jpg
உசாத்துணை:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com