Monday, April 22, 2019

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5 ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5]


ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!



image.png
Courtesy: Wikipedia
இன்னம்பூரான்
ஏப்ரல் 13/16, 2019

பிரசுரம்: வல்லமை:

http://www.vallamai.com/?p=91621

டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்று பேராசிரியர் என்னுடைய மாமனார். மணிக்கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப்புனல் காலத்து செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது என் மனதில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டேன். அது மனதில் உதித்தது, இன்றும்.

“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும், கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும், கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிறநீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்...”

சில நூற்றாண்டு தினங்கள் சோகதினங்களாக அமையும். எல்லா வரலாறுகளும் அவற்றை புறக்கணிக்கமுடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன். காந்தீயவாதி. காந்திஜியின் சத்யாக்ரஹ துவக்கத்தின் தொடர்பாக நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத் தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின்  அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித்தீயாக பரிமளித்து, புருதிகுனலாக அமைந்து விட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று. நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்த சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறை சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுடீன் கிச்லூவும், டாக்டர்.சத்யபாலும் கைது செய்யப்பட்டு தரம்சாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.

[டாக்டர் சைஃபுடீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென, அவரை பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கி குத்திய வண்ணம், அவர் ஆவேசமாக பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947ல் இந்தியாவின் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்க்காரர், இவர் தான். அந்த கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்.] 

போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப்போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக, அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி. 

ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப்பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தாமாக. ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக் இல், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை.மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப்பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5 50லிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத்தள்ளினான். தாங்கமுடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிபுனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்து சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம் கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே இந்த குருதிப்புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்க தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார்.

2019ம் வருடம் ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது. நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்தத் தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.
-#-