அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 3
அங்குமொரு அயோத்தியா மாநகரம்!
அங்கொரு அயோத்தியை. அதில் ஒரு சூரியோதை. அவள் ஒரு வீராங்கனை. சம்ஸ்கிருதமும், ராமாயணமும், பாரதத்தின் பண்பாடும் நிறைந்த ஆரோக்கியமான சூழல். ஆனால் இந்தியா அல்ல. நீங்கள் யூல் ப்ரென்னர் நடித்த The King and I சினிமா பார்த்திருக்கிறீர்களோ? (கவலையற்க. நாகராஜன் ஃபில்ம் காட்டுவார்.) கலாச்சாரங்களின் ரசவாதத்தை மென்மையாக, ஆனால், அழுத்தமாக சித்திரிக்கும் சினிமா அது. அதில் வரும் சயாம் என்னும் பிரதேசத்தில் தான் அயோத்தியையும், சூரியோதயையும். ஒரு நானூறே வருடங்களில் அல்பாயுசாக இருந்த அந்த நாட்டின் காலகட்டம்: 1350-1767. ஒரு சைனீஸ் வணிக குடும்பத்தில் பிறந்த ஊ தாங்க், அரசகுடும்பத்தில் பெண்ணெடுத்து, சோ ப்ரயா என்ற நதிக்கரையில் சரயூ நதிக்கரை அயோத்தியை போல ஒரு நகரை அமைத்து, அதே பெயரை அதற்களித்து, தன் பெயரையும் ராமாதிபோடி (இனி பல பெயர்கள் வடமொழி திரிபுகள். இல்லாத அர்த்தமும், மூலமும், வேரும், யாரும் தேடவேண்டாம் என்று பிரார்த்தனை.) என்று அமைத்துக்கொண்டு, 1360ல் தேரவாதா பெளத்த சமயத்தை அரசின் சமயமாக அறிவித்தார். புதிய சமயத்தை ஏற்புடைய வகையில் ஸ்தாபிக்க, ஈழத்திலிருந்து ‘சங்கம்’ என்ற துறவிகள் சமுதாயம் வரவழைக்கப்பட்டது. மன்னர் ராமாதிபோடி அவர்களும், ஹிந்து மதத்தின் தர்மசாஸ்திரத்தின் அடிப்படையில், தாய்லாந்தின் பழக்கவழக்கங்களுக்கு முரண் இல்லாத வகையில் ஒரு சட்ட நூலை அரசியல் இலக்கணமாக உருவாக்கினார். இந்தியாவின் தொன்மை மொழியான பாலி மொழியில், தேரவாதா மொழிநடையில் எழுதப்பட்ட அந்த நூல் தேவவாக்காகக் கருதப்பட்டது. 19ம் நூற்றாண்டு வரை அமலில் இருந்தது. இன்று பெரிதும் போற்றப்படும் மரபு தலமாகிய அங்கோர் பிரதேசத்தை, மன்னர் ராமாதிபோடி கைபற்றினார். ஆனால், நாலாவட்டத்தில், அந்த அரசபரம்பரையின் ஆளுமை குறைந்து விட்டது. சுகோதை என்ற பிரதேசம் எளிதில் அடங்கவில்லை என்றாலும், அயோத்தையின் ஆளுமையை சைனாவின் சக்ரவர்த்தி கூட ஒத்துக்கொண்டார். அயோத்தியின் இளவரசர்களின் உள்குத்து சண்டைகளால், அதனுடைய வலிமை குறைந்து விட்டது. இருந்தாலும், தாம்பரலிங்க பிரதேசத்தின் தெற்கு பகுதிகளில் இஸ்லாமிய தாக்கம் அதிகரித்தாலும், கடல் வணிகத்தில் அயோத்தியை முதலிடம் வகுத்தது. இது நிற்க.
மன்னர் மஹா சக்கிரபத் ஆட்சி புரிந்த போது, கடாரத்தின் (பர்மா) அரசன் 1548ம் ஆண்டு அயோத்தியை மீது படையெடுத்தான். ரத கஜ துரகதாதிகள் மோதினாலும், இரு சேனைகளிலும், யானைக்கா பஞ்சம்? திருவிளையாடற்புராணத்தின் மதுரைக்காண்டத்தில்
‘மின்னைவா ளென்ன வீசி வீங்குகார் தம்மிற் போர்மூண்
டென்னவான் மருப்பு நீட்டி யெதிரெதிர் புதையக் குத்தி
அன்னவா னென்ன வாய்விட் டதுவெனச் செந்நீர் சோரப்
பொன்னவா மகன்ற மார்பர் பொருகளி றாட்டு வார்கள்...’
என்று வர்ணித்த மாதிரி களிறுகள் மோதுகின்றன. பட்டத்து யானையின் மீதமர்ந்து மன்னர் மஹா சக்கிரபத் போரிடுகிறார். அவரை காப்பாற்றவேண்டும் என்ற திண்ணமான முடிவுடன் மஹாராணி ஸோம்தெத் ஃப்ரா ஸ்ரி சூரியோதை, ஆண் வேடத்தில், தன்னுடைய யானையின் மீதமர்ந்து, போரில் கலந்து கொள்கிறார். ஒரு வெட்டரிவாள் பாய்ந்து அவரை தாக்குகிறது. மஹாராணி சூரியோதை வீரமரணம் எய்தினார். அத்தினம் ஃபெப்ரவரி 3, 1548. அந்த நாட்டுமக்களுக்கு அவள் ஒரு காவல் தெய்வமாகிவிட்டாள். நாடோடி பாடல்கள், நினைவு சிலை, திரைப்படம் இத்யாதி.
இந்த கதை எதற்கு இன்று? இந்தியாவின் கலாச்சாரத்திற்குக் கடலும், மலையும் ஒரு எல்லை அல்ல. நாமும் இனபேதம், மொழி பேதம், மத பேதம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்கு.
இன்னம்பூரான்
03 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment