அன்றொருநாள்: ஃபெப்ரவரி 19
“...கடு மா தாங்க...”
இவர் என்ன கல்கி அவதாரம் மாதிரி இருக்கிறார்? என்னே கம்பீரம்! என்னே வேகம்! என்னே பக்தி! என்னே! என்னே!...என்று சொல்லிக்கொண்டே போகலாம். அப்பா சொல்வார், இவருடைய படைவீரர்கள் சத்துமா மூட்டையுடன்,’ கடு மா தாங்க’ பறந்து செல்வர்; ஆற்றோரம் நின்று மாவை பிசைந்து உண்பர். மடியிலும் கனம் இல்லை; மனத்திலும் இல்லை. பெண்பாலாரை அன்னையென மதி என்று கட்டளை. மேலும் சொன்னார். பகைவனின் பட்டாளம் பெரிது; மனைவிமாரும், நாட்டியமாதுகளும் கூண்டு வண்டிகளில், ஆடி, அசைந்து வருவர். கூட வருவது பெரிய சோற்றுக்கடை, கான்சாமா (தவசிப்பிள்ளை படை), கோழி, ஆடு, மாடு. யானையும், குதிரையும், தேரும், பீரங்கியும், காலாட்படையுமாக, மலை போல் மேனி; ஸ்லோ மோஷன்! நகர்வதற்குள், அமாவாசையே வந்து விடும். நம்ம ‘சத்துமா’ பட்டாளம், ஒளிந்திருந்து பக்கவாட்டில் திடீரென தாக்கி, பகைவனை பாடாய் படுத்தி விடுவார்கள். அவனை பட்டினிப்போட்டு, விருந்துண்பர். தாத்தாவுக்கு இவருடைய புலிநகத்தை பற்றி புகழ்ந்தாக வேண்டும். நடித்துக்காட்டுவார். லட்டுக்கூடையிலிருந்து ‘பாதுஷா’வுக்கு அல்வா கொடுத்தக் கதை சொல்லிச் சிரிப்பார். அதற்கு பிறகு தான் கல்யாணங்களில் சல்லிசா பண்ணுவாங்களே, அந்த ‘பாதுஷா’ என்ற இனிப்புப்பண்டம் வந்தது என்று ஜோக்கடிப்பார், தாத்தா. ‘அன்றொரு நாள்: நவம்பர் 10: வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!’ இழையை யாரும் படித்ததாகத் தெரியததால், கொஞ்சம் அரைத்த மாவு. புளித்தது அனுபந்ததில்.
‘வாகை’ என்றவுடன்,பதிற்றுப்பத்தில், நமது சங்கக்கால புலவரொருவர் ஒருவர் (பெயர் அறியோம்.) இவரை பற்றி முல்லைத்துறையில், “காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு” எனக்கூறியிருக்கிறார் என்று நான் ஓரிடத்தில் கூறியது நினைவுக்கு வந்தது. எல்லாரும் என்னை விசித்திரமாக பார்த்தார்கள்! 81 வது பாடல்; பாடினேன். கேளும்:
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின்,
வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல்
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து,
கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து,
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள,
களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப,
அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து,
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்,
மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத்
தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும்
முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ,
கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார்,
இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப,
நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி;
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி,
கட்டளை வலிப்ப, நின் தானை உதவி,
வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!-
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து,
சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த்
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி,
காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர்,
கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும்,
சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப்
பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து,
மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து,
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள,
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப்
பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து
மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள்,
பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்!
முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது,
தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு
தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு,
துஞ்சா வேந்தரும் துஞ்சுக!
விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே!
மேற்கிந்திய மலைத்தொடரை எளிதில் கடக்க முடியாது. அடர்ந்த வனாந்திரம், மேடு பள்ளம், காட்டு மிருகங்கள், பாம்பு போன்ற அன்றாட தொல்லைகளினால், மஹாராஷ்ட்ர பிராந்திய மக்கள் கொஞ்சம் கரடுமுரடான ஆசாமிகள் தான். அந்த இனத்தை உய்விக்க வந்த சத்ரபதி சிவாஜி மஹராஜின் ஜன்மதினம் இன்று: ஃபெப்ரவரி 19, 1630. வரலாறுகள் பல உளன. பற்பல பேசுகின்றன. சமீபத்தில், ஸர் ஜாதுநாத் சர்க்கார் 1929ல் திருத்தியமைத்த ‘சிவாஜியின் காலகட்டம்’ என்ற நூலின் மூன்றாம் பதிப்பைப் படித்தேன். அடிசலை பகிர்ந்து கொள்கிறேன்.
- முல்க்-கிரி என்றால் படையெடுத்து அண்டை நாடுகளை பிடிப்பது. இந்த விஷயத்தில், முஸ்லீம் மன்னர்களுக்கும், சிவாஜிக்கும் அதிக வித்தியாசமில்லை. சொல்லப்போனால், சிவாஜி ஒரு படி மேல்;
- அவரால் மராட்டா மேலாண்மையை, ஒரு நீண்டகாலத்திற்கு நிலை நாட்ட முடியவில்லை; பத்தே வருடங்கள் ஆட்சி; அது ஒரு காரணம். அவருடைய அரசியல் வெற்றியே, பத்தாம்பசலி மத வேறுபாடுகளை கெட்டித்து, தோல்வியை தழுவியது (ப.388). மத மாச்சிரியங்கள் நிறைந்த நாட்டில் அவர் இயலாததை இயக்க முயன்றார்; தோல்வி. என்ன தான் இருந்தாலும், சிவாஜியின் யதேச்சிதிகாரமும், பலவீனம் தான்.
- அவருடைய காலகட்டத்தில் தேசாபிமானத்திற்கு உரிய மதிப்பு இல்லை. அவரவர்களின் மண்ணுக்குக் கொடுத்த மரியாதை பிராந்தியத்துக்கு மறுக்கப்பட்டது. ஒற்றுமை லவலேசமும் கிடையாது. சிவாஜியின் தீர்மானங்களோ தேசாபிமான அடிப்படையில் ஆகவே, உள்குத்துப் பகை பெருகியது.
- சொத்துப்பத்துக்களாக்காக, நாட்டை பணயம் வைக்கும் மக்களிடையே, தேசாபிமானியாக நடக்க, சிவாஜி பிரயாசைப்பட்டார். (ப.395)
- மராட்டியர் நாடு ஒரு Krieg Staat (யுத்த பூமி) ஆக இருந்தது. அவர்கள் பொருளியல் நிலைமையை வலுப்படுத்த முயலவில்லை.
- உள்குத்து வல்லுனர்கள் நிரம்பிய மராட்டாவில், சிவாஜி போர் வீரனுமாக இருந்தார்; ராஜதந்திரியாகவும் இருந்தார்.
- தன்னுடைய பிரத்யேக வாழ்க்கையில், சிவாஜி நற்பண்புகளின் உறைவிடமாக, விளங்கினார்; அடங்கிய தனயன், அன்புக்கணவன், கனிவான தந்தை...சிறந்த ஒழுக்கம், தீய வழக்கமின்மை, சமய நூல்களுக்கு மரியாதை, மதத்தை நல்வழிக்கு வழிகாட்டியாக அமைத்துக்கொண்டு, வெறியை விலக்கி வாழ்ந்தார்; எம்மதமாயினும் குருநாதர்களை போற்றினார்; பெண்ணினத்தை அவர் போற்றிய விதம் கண்டு பகைவர்களே அதிசயித்தனர்;
- பிறவியிலேயே தலைமாந்தன்; வசீகரன்;மனிதர்களை எடை போடுவதில் அலாதி திறன்; நிர்வாஹம் கெட்டி; ராணுவம் கட்டுக்கோப்பானது;ஒற்றர் படை அபாரம்.
- களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க/ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப/ அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து... என்பது சாலப்பொருந்தும்.
- சிவாஜி ஒரு ஒரிஜினல். இந்தியாவின் சரிதத்தில் புதியதொரு ராஜபாட்டை படைத்தார். மொகாலாய சாம்ராஜ்யத்தின் மேலாண்மை ஓங்கியிருந்த போது, அவர்களுக்கு சவால் விட்ட குட்டி ஜாகீர்தாரின் பையன். கவூர் பிரபு என்ற இத்தாலிய தேசாபிமானி கூறிய ‘tact des choes possibles’ (எது நடக்கக்கூடுமோ அதை பிடித்துக்கொள்வது) தந்திரத்தில் நிகரற்றவர். தீரன். திட்டமிடும் தீரன். அவர் மக்களுக்கு நிம்மதி, திறனான நிர்வாஹமும் அளித்தார். (ப.399 -402). ஹனுமத் ஜயந்தி அன்று,50 வயதில் மறைந்த இந்த தலைமாந்தனை பற்றி சொல்ல, இன்னும் சொல்ல பல செய்திகள் உளன.
இன்னம்பூரான்
19 02 2012
என்னே தீக்ஷண்யமான பார்வை!
உசாத்துணை:
Sarkar, Jadunath (1929): III Edition: Shivaji And His Times: Calcutta: M.C Sarkar.
அனுபந்தம்:
*
அன்றொரு நாள்: நவம்பர் 10
வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!
போர்க்களம் என்றாலே வரலாறு படைக்கப்படுகிறது என்பது திண்ணம். ராமாயணத்தில் யுத்த காண்டம். மஹாபாரத குருக்ஷேத்ரத்தில் கீதோபதேசம். பிரதாப்கட் போரில், பாரத பூமியின் வீறு கொண்டெழுந்த அவதார புருஷனொருவன், நவம்பர் 10, 1659 அன்று தேசாபிமானத்தின் கண்மலர் திறந்தான் என்றால், அது மிகையன்று. மலையெலி ஒன்றை சிம்மத்தை வீழ்த்தியது என்றால், அது பொருத்தமான உவமையே. வீரமாமுனிவர் ‘தேம்பாவணியில்’ நேரில் கண்டதை போல், ‘பெரிய குன்றமோ பேயதோ பூதமோ வேதோவுரிய தொன்றிலா வுருவினை’க்கொண்டகோலியாத் என்ற இராக்கதனுக்கும் ‘கடவுளை நகைப்பவேட்டலால் விளி விழுங்கிய கயவன்’ யாரென்று முழங்கிய தாவீது என்ற தெய்வாம்சம் பொருந்திய சிறுவனுக்கும் நடந்த சண்டையில், தாவீது வெற்றி பெற்றதை வருணிப்பார். நமது கதாநாயகனுக்கு முற்றும் பொருந்தும் உவமை அது. இருதரப்பும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. உள்நாட்டுப்போர் என்றாலும், இந்த யுத்தம் தேசாபிமானத்திற்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே நடந்தது, பவானி அம்மனின் அருளும், நற்றன்னை ஜீஜிபாயின் அரவணைப்பும், குரு சமர்த்த ராமதாஸ் அவர்களின் ஆசியும் பெற்ற சத்ரபதி சிவாஜி மஹராஜ் மராட்டா பிராந்தியத்தில் முகலாய சாம்ராஜ்யத்தையும், அதனுடைய குறுநிலமன்னர்களையும் கருவேலமுள்ளென குத்திக்கிழித்தார். மொகலாயப்படை என்றால் சொகுசும், படோடாபமும், சோத்துக்கடையும், இல்லறமும், களவியலும் கூடி, ஆங்காங்கே டேரா போட்டுக்கொண்டு, ஆடி அசைந்து வரும். சிவாஜியின் மின்னல் படையோ, சத்துமாவு முடிச்சுடன், விரைந்து செல்லும் புரவிப்படை. நதிகளிலிருந்து சத்துமாவுடன் நீர் சேர்த்து உணவு. பெண்களை தொடக்கூடாது என்று விதி. எதிரியை முன்னால் போகவிட்டு, பின்னால் வரும் சோத்துக்கடையில் கை வைத்தால், அறுசுவை உணவு. இப்படியாக, இரு தரப்பும் இயங்கும் தருணத்தில், சிவாஜியின் சகோதரரை வஞ்சகமாகக் கொன்ற பீஜப்பூர் தளபதி அஃப்ஸல்கான் தலைமையில், அடில்ஷாஹி தர்பார், ஒரு படையை அனுப்ப, அவனும் சிவாஜிக்கு வலை விரிக்கவேண்டி, துல்ஜாப்பூர் கோயிலை உடைத்தான். பண்டர்பூர் விட்டலர் கோயிலை தாக்க விரைந்தான். சிவாஜியின் முகாம்: பிரதாப்கட் கோட்டை. மின்னல் தாக்குதல்களுக்கு செல்ல உகந்த இடம். வலிமை மிகுந்த கானோஜி ஜேதே, சிவாஜி பக்கம் சாய்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவருடைய தலைமையில் சிவாஜியின் படைகள், அஃப்ஸல்கானின் 1500 துப்பாக்கி வீரர்களை துவம்சம் செய்தனர். அஃப்ஸல்கானின் தளபதி மூசேகானை திடீர்தாக்குதல் செய்து விரட்டியடித்தனர். சிவாஜியின் தளபதி மோரோபந்த் அஃப்ஸல்கானின் பீரங்கிப்படையை மின்னல் தாக்குதலில் செயலிழக்கச்செய்தான். அவர்கள் நம்பியது பீரங்கிப்படை. அது புஸ்வாணப்படையாக மாறவே, அஃப்ஸல்கானின் வீரர்கள் வீரமிழந்தனர். கையோடு கையாக, சிவாஜியின் தளபதி ரகோ ஆத்ே ரேயின் புரவிப்படை, அஃப்ஸல்கானின் புரவிப்படையை மின்னல் தாக்குதலில் நாசமாக்கியது. அஃப்ஸல்கானும் சாமான்யப்பட்டவன் அன்று. படை குண்டு. நடமாட்டமே மந்தம். ஓட்டமாவது! ஆட்டமாவது! அவ்வளவு தான். இருந்தும் பக்கத்தில் இருந்த ‘வாய்’ கிராமத்தில் ஒரு படை ரிஸர்வில் வைத்து இருந்தான். அங்கு ஓடினர், தப்பிய தம்பிரான்கள். வழி மறிக்கப்பட்டு, தோற்றுப்போயினர். மிஞ்சியவர்கள் பீஜாப்பூர் நோக்கி ஓட, துரத்திய சிவாஜியின் படைகள் 23 அடில்ஷாஹி கோட்டைகளை கைப்பற்றின. கோல்ஹாப்பூரின் அடில்ஷா கிலேதார், தானே முன்வந்து சாவியை கொடுத்து சரணடைந்தார்.
புள்ளி விவரம்: அடில்ஷாஹி ராணுவம் இழந்தது 5000 வீரர்கள், 65 களிறுகள், 4000 குதிரைகள், 1200 ஒட்டகங்கள், மூன்று லக்ஷம் பெறுமான நகை, நட்டுகள், ஒரு லக்ஷம் பணம், துணிமணி, கூடாரங்கள். 3000 வீரர்கள் படுகாயம். மற்றவர்கள் தலை குனிந்து வீடு திரும்பினர்.
நீங்கள் கேட்கவிரும்பும் கதை சொல்கிறேன். சிவாஜி சமாதான தூது அனுப்பினார். அவரும் அஃப்ஸல்கானும் பிரதாப்கட்டில் ஒரு ஷாமியானாவுக்கு அடியில் சந்தித்தனர். நிராயுதபாணி என்ற நிபந்தனையில் இருவருக்கும் நம்பிக்கையில்லை. அஃப்ஸல்கான் ஒரு கட்டாரியை ஒளித்து வைத்திருந்தான். சிவாஜி ‘புலிநகம்’ என்ற ஆயுதத்தை ஒளித்து வைத்திருந்தார். கவசமும் அணிந்திருந்தார். ஏழு அடி உயரமான அஃப்ஸல்கான் சிவாஜியை முதுகில் குத்த, அவருடைய கவசம் காப்பாற்றியது. அவரோ, ஒரு கிழித்தலில், அவனுடைய குடலை உருவினார். அஃப்ஸல்கானின் மெய்காப்பாளர் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி சிவாஜியை காயப்படுத்தினார். மற்றொரு மெய்காப்பாளர் சயீத் பண்டாவும் சிவாஜியை தாக்கினார்.சிவாஜியின் மெய்காப்பாளர் ஜீவா மஹலா அவனை வெட்டிப்போட்டார். அஃப்ஸல்கானும் மாவீரன். தன் குடலை அமுக்கிக்கொண்டு பல்லக்கில் ஏறி வெளியேறினான். அவனை தப்பவிடாமல் சாம்பாஜி கவிஜி கொண்டால்கர் பாய்ந்து சென்று அவனுடைய சிரம் கொய்தார். பழி வாங்கும் படலங்கள் நிறைவேறும்போதே, சிவாஜியின் ஆணைப்படி பீரங்கிகள் வெடித்தன. கானகத்தில் ஒளிந்திருந்த மராட்டா காலாட்படைக்கு அது ஒரு சங்கேதம். அவர்கள் உடனே அடில்ஷாவின் ராணுவதளங்களை தாக்கத்தொடங்கின.
இரண்டு பாயிண்ட்:
1.ஹிந்து-முஸ்லீம் காழ்ப்புணர்ச்சி தலை தூக்கவில்லை. இரு தரப்பிலும் இரு மதத்தினரும் இருந்தனர். அஃப்ஸல்கானின் மெய்காப்பாளர் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி. சிவாஜியின் மெய்க்காப்பாளர் சித்தி இப்ராஹீம்.
- உள்நாட்டு போராயினும், இந்தியாவின் முதல் தேசாபிமான யுத்தம் பிரதாப்கட் போர்: நவம்பர் 10,1659.
இன்னம்பூரான்
10 11 2011
|
No comments:
Post a Comment