அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29:
ரிக்கார்டு மனிதர்!
இன்றைய தினம் ஜனித்தவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான், ஜன்மதினம். அதுவே ஒரு ரிக்கார்டு. ஸ்வபாவமோ, பாவனையோ, அவரது ‘ராஜரிஷித்துவம்’ மற்றொரு ரிக்கார்டு; ‘நான் தான் ‘எவெர்’ ரைட்டு’ சுயச்சான்று மற்றொரு ரிக்கார்டு; கடிவாளமில்லாத, இடை விடாத, பிடிவாத எவெரஸ்ட் இவர் என்பது மற்றொரு ரிக்கார்டு; ‘வாக்கு சுத்தம்’ என்றால், வெட்டு ஒன்று: துண்டு பனிரண்டு! அதுவும் இடம், பொருள், ஏவல் பொருட்படுத்தாமல். இவர் பிரதமர் பதவி ஏற்றவுடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வாழ்த்துக்கூற வந்தார். தலைமை நீதிபதி பிரதமரை காண வருவது முறையன்று என்று மொழிந்தார்,இவர். இதுவும் மற்றொரு ரிக்கார்டு; உள்குத்து பகைவர்களால், ‘இது ஒரு கிறுக்கு/ நூறாம் பசலி/குரங்கு பிடி/... என்று அன்றாடம் சகஸ்ர நிந்தனை செய்யப்பட்டது, மற்றொரு ரிக்கார்டு; ‘சிறுநீராமுதம்’ பருகுவது மற்றொரு ரிக்கார்டு; படித்தது விஞ்ஞானம்; அவருக்கு பிடித்தது மெய்ஞ்ஞானமும், யோகமும். அதுவும் மற்றொரு ரிக்கார்டு; 21 வயதில் பிரிட்டீஷ் சர்க்காரின் உயர்பதவி -33 வயது வரை; அதையும் மற்றொரு ரிக்கார்டு என்று சொன்னால் மிகையாகாது. ஒரு காந்தியை நம்பி, அந்த பதவியை தொலைத்ததும், இன்னொரு காந்தியை நம்பி(?) அண்டி வந்த அரசியல் பதவியை தொலைத்ததும், மற்றொரு ரிக்கார்டு. இந்தியாவின் உயரிய விருது ‘பாரத ரத்னா’; பாகிஸ்தானின் உயரிய விருது ‘நிஷான் எ பாகிஸ்தான்’ இரு விருதுகளையும் பெற்ற பாரதமாதாவின் மைந்தன் இவர் தான் என்பதும் ஒரு ரிக்கார்டே.
உச்சகட்ட ரிக்கார்டு: 1977-79ல் இந்திய பிரதமராக இருந்த போது, உலக தேசீய தலைவர்கள் எல்லாரையையும் விட வயதில் மூத்தவர்் என்பதே. அந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விமான விபத்து. எதோ அன்றாட சம்பவம் போல் பாவித்து, இறங்கி வந்து விட்டார். ஒரு நிருபர் கேட்டதற்கு பதில்: பல் செட் உடைந்து விட்டது! (பேராசிரியரை நினைத்துக்கொண்டேன்!) இத்தனை சாதனை படைத்த ரிக்கார்டு மனிதர், நழுவ விட்ட ரிக்கார்டு: நூற்றாண்டு! இவருடைய பிறந்த தினம் 29 02 1896. மறைந்த தினம் 10 04 1995. பத்து மாதம் பொறுக்க மாட்டாரோ! இந்த மாஜியினால், அரசுக்கு செலவு, மாளிகை உபயம், தண்டச்செலவு ஒன்றும் இல்லை. வேலை போன பின், மும்பையில் மகனில் அபார்ட்மெண்டில், எளிமையாக வாழ்ந்தார். அது கூட ஒரு ரிக்கார்டு தான்.
எனக்கு இவரிடமிருந்து ஒரு ஏகலைவ பாடம். இவர் உதவி பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், நான் குஜராத் அரசு பணியில். இவரின் ஆளுமைக்கு அடியிலிருந்த சுங்க இலாக்காவோடு லடாய். இவருடைய பரம சிஷ்யரான ஹிது பாய் தான் எங்களுடைய முதல்வர். அவர் ஒரு நாள் என்னை கூப்பிட்டார். கையில் உதவி பிரதமரின் இரு வரி கடிதம். ‘ இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. உமது வழக்குக்கு வெற்றி. வாழ்த்துக்கள்’ அதன் பின்னணி, சுங்க இலாக்காவின் மீது நான் தொடுத்த தர்மயுத்தம். அது வெற்றி பெற்றால், எல்லா மாநிலங்களும் கோடிக்கணக்கில் பயன் அடையும். வழக்கோ இழுத்தடிக்கப்பட்டது. இவருக்கு, முதல்வரிடமிருந்து அனுப்புவதாக, ஒரு கடிதம் தயார் செய்து கொண்டு போய், முதல்வரிடம் போய் நின்றேன், சில மாதங்களுக்கு முன். ‘வேறு வினை வேண்டாம். சிபாரிசா கேட்கிறாய் என்று என்னை கோபிப்பார். நீ இலாக்கா-யுத்தம் நடத்து,ராஜா.’ என்றார், 'இ'ங்கிதமாக! அப்படியே நடந்தது. ஆறு மாத தாமதம். கெலித்த பின் தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய் ( இப்போது தான் பெயர் வருகிறது) வாழ்த்து அனுப்பினார். நோ சிபாரிசு என்றால் காந்திஜி, ராஜாஜி, மொரார்ஜி. இப்போதெல்லாம் 2ஜி! சிபாரிசு கந்தரகூளம். ஆண்டவா! எங்கள் நாட்டை இப்படி உருக்குலைத்து விட்டாயே. சிபாரிசு என்பது சர்வசாதாரணம். ஆனால், அது விஷவித்து. முதலில் குமாஸ்தா வேலைக்கு சிபாரிசு. அதுவே காலப்போக்கில் 2ஜி பகல் கொள்ளையாயிற்று. சிபாரிசுகளை தவிர்ப்பதில் மொரார்ஜி தேசாயின் கறார் பாலிசியில் ஒரு பின்னம் கூட மற்றவர்களால் காப்பாற்ற முடிவதில்லை.
ஐயா குஜராத்தின் பதேலி என்ற கிராமத்தின் மண். தந்தை பள்ளி ஆசிரியர். பலமுறை சிறை என்றவர். பழைய பம்பாய் மாகாணத்தில் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தவர். மத்திய அரசில் வணிகம் & தொழில் இலாக்கா அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்து, கட்சித்தொண்டுக்காக, பதவியிலிருந்து விலகி இருந்து, பிரதமர் பதவிக்கு 1964லிலும் 1966லும் போட்டியிட்டு தோல்வியுற்றார். எமெர்ஜென்சியின் போது கைதும் செய்யப்பட்டார். அது காலாவதியான பின் 1977ல் ஜனதா கட்சி பிரதமரானார். உள்குத்து, அவரை 1979ல் விலக வைத்தது. அவருடைய மகனால் இவருக்கு கெட்ட பெயரும் வந்தது. ஆதாரத்துடன் குற்றச்சட்டுக்கள் வந்ததாகத் தெரியவில்லை. இவருக்கும், அமெரிக்க வேவுத்துறைக்கும் தொடர்பு இருந்ததாக, ஸேமூர் ஹெர்ஷ் என்ற பிரபல இதழாளர் கூறினார். அதை ‘பைத்தியக்காரத்தனம்’ என்ற மொரார்ஜி ஒரு மிலியன் டாலருக்கு நஷ்ட ஈடு வழக்கு ஒன்று தொடர்ந்தார், அமெரிக்காவில். இருதரப்பிலும், உருப்படியாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை.
இவருடைய டாப் ரிக்கார்ட்: 1966லியே திருமதி.இந்திரா காந்தி ஆளுமை புரிய லாயக்கு இல்லை என்று சொன்னது. நின்னா ரிக்கார்ட்! உக்காந்தா ரிக்கார்ட்! அது தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய்!
இன்னம்பூரான்
29 02 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment