அன்றொரு நாள்: ஜனவரி:16
“பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே”
காலச்சக்கரத்தின் சுழற்றலில் தலைகள் உருளும்; கிரீடங்கள் கவிழும்; தண்டல்காரன் தடியெடுப்பான். அவனும் அழிவான். சக்கரம் சுழலும். சுழண்டு கொண்டே இருக்கும். நசுங்குவது என்னமோ, பாமர மக்கள், ஒவ்வொரு சுழற்சியிலும்!
1970: ஜனவரி 16: மன்னர் இட்ரிஸ் ஷா முடி கவிழ்ந்தார். கர்னல் கடஃபி பதவியேற்றார்:
லிபியா ஒரு பழம்பெரு நாகரீகம். சஹாரா பாலைவனம் பசுமை பூமியாக இருந்தது, ஒரு காலம். தற்கால லிபியா ஒரு இத்தாலிய கலோனிய ஆளுமைக்கு அடி பணிந்து 1912 லிருந்து 22 வருடங்கள் சுருண்டு கிடந்தது. உடும்புப்பிடி. பேயரசு. மேலும் பத்து வருடங்களுக்குப் பிறகு, 1944ல் ஓடிப்போயிருந்த மன்னர் இட்ரிஸ் ஷா திரும்பினார், தயக்கத்துடன். தண்டலெடுத்தவனெல்லாம் குழப்பம் மிகுந்த மேலாண்மை செய்த பின், 1951ல் இட்ரிஸ் ஷாவின் ஆட்சி துவங்கியது. அவருடைய யதேச்சிகாரமும், மேற்கத்திய நாடுகளுக்கு அவர் கொடுத்த அதிகப்படி சலுமைகளுமே, 28 வயதே ஆகிய கர்னல் கடஃபியை, அவரை கவிழ்க்கத் தூண்டியது. லிபியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒரு மன்னர்; அவரும் மண்ணைக் கவ்வினார் ~ 1970: ஜனவரி 16. லிபியாவின் சாபம் அத்துடன் விடவில்லை. இந்த கடஃபி இழைத்தக் கொடுமைகள் கணக்கில் அடங்கா. அசடு, கிறுக்கு, திமிரு, தடாலடி, அடக்குமுறை, ஊழல் எல்லாவற்றிற்கும் உறைவிடம், அந்த சர்வாதிகாரி. இவருடைய போக்கைப் பார்த்த மற்ற இஸ்லாமிய நாடுகள், கொஞ்சம் அச்சத்துடன் விலகியிருந்தன. கலோனியத்தை எதிர்க்கும் வகையில் நன்றாக புரட்சியை துவக்கினாலும், லிபிய மக்களை பாடாய் படுத்தினார். தன் வன்முறையால், உலகையும் ஆட்டிப்படைத்தார். எல்லாம் ‘எண்ணெய் தகரியம்’. 2011ல் இவர் கொல்லப்பட்டதும் யாவரும் அறிந்ததே.
மற்ற நாடுகளின் ஆளுமையில் தலையிடுவது, கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது, எரிய வீட்டில் ஆதாயம் பிடுங்குவது எல்லாம், அமெரிக்கா உள்பட, மேற்கத்திய நாடுகளின் தொட்டில் பழக்கம். 1970லிருந்து 2011 வரை, லிபியாவில், மேற்கத்திய நாடுகளின் முரணும், நப்பாசையும், மக்களாதரவும் கலந்த செயல்முறைகள் சர்ச்சைக்குரியவை.
1979: ஜனவரி 16: மன்னர் ஷா பஹ்லவி ஓடோடி ஒளிந்தார். ஈரான்.
ஈரான் ஒரு பழம்பெரு நாகரீகம். முதல் வம்சாவளி 2800 கி.மு. பெர்சியா என்றாலும் ஈரான் தான். அந்த நாட்டுக்கொள்ளைக்காரனும், மன்னனும் ஆன (முக்காவாசி மன்னர்களுக்குக் கொள்ளை அடிப்பதில் கொள்ளைப் பிரியம்!) நாதிர்ஷா தான், இந்தியாவின் மயில் சிம்மாசனத்தை அடித்துக்கொண்டு போனவன். 1925ல் மன்னரை கவிழ்த்து தன்னையே மன்னராக முடி சூட்டிக்கொண்ட ரேஜா பஹ்லவியின் மகன் முகம்மது ரேஜா பஹ்லவி, 1941ல் அவரை கவிழ்த்து,அமெரிக்காவின் தொண்டரடிப்பொடியாக, நாளொரு தரகு பிடிப்பதும், பொழுது ஒரு லஞ்சமாக, ஆண்டு வந்தார். ஊதாரி. அவருக்கு எங்கிருந்தோ இருந்து வந்த பிரதமர் மொஸ்ஸதாக் அவர்களின் ஆளுமை எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. மனுஷன் பிச்சு உதறி விட்டார். எண்ணெய் கிணறுகளை தேசீயமயமாக்கி, மண்ணின் மைந்தனாகப் போற்றப்பட்டு, மேற்கத்திய நாடுகளின் பகையை சம்பாதித்து, அவர்களின் சூழ்ச்சிக்கு பலியானார். சர்ச்சிலும், ஐஸன்ஹோவரும், சூழ்ச்சிகள் பல செய்து, முறையாக தேர்ந்தெடுப்பட்ட பிரதமரான மொஸ்ஸாதக்கை சாகும் வரை சிறையில் அடைத்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டனர். (மொஸ்ஸாதக் வரலாறு ஒரு நாள் எழுத வேண்டும்.) அவர்களுக்கு துணை போனது, மன்னன் முகம்மது ரேஜா பஹ்லவி. அடக்குமுறை, வேவு எல்லாம் அதிகப்படி. பிற்காலம், அவரை எதிர்த்த கோமனி ( Ruhollah Musavi Khomeini)என்ற மதகுருவை நாடு கடத்தினார். அவரும் 14 வருட வனவாசத்திற்கு பிறகு திரும்பி வந்து 1978-79 களில், முகம்மது ரேஜா பஹ்லவியை வீழ்த்தினார். பஹ்லவி நாடு நாடாக ஓடினார். புற்று நோய் வேறு. அமெரிக்கா முகம்மது ரேஜா பஹ்லவியை கை கழுவியது. எகிப்து அடைக்கலம் கொடுத்தது. 1980ல் அங்கு செத்துப்போனார். யாருமே அழவில்லை. கதை ரொம்ப பெரிது. ஒரு நாள் சங்கதியே நீண்டுவிட்டது.
மற்ற நாடுகளின் ஆளுமையில் தலையிடுவது, கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது, எரிய வீட்டில் ஆதாயம் பிடுங்குவது எல்லாம், அமெரிக்கா உள்பட, மேற்கத்திய நாடுகளின் தொட்டில் பழக்கம். ஈரானில் மேற்கத்திய நாடுகள் செய்த அடாவடிக்காரியங்களை, வரலாறு கண்டித்தது. அமெரிக்கா ~ஈரான் லடாய் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கே போய் நிற்குமோ, யார் கண்டார்கள்?
2001: ஜனவரி 16: லாரண்ட் கபிலா படுகொலை. மகனார் ஜோசஃப் பதிவியேற்றார். காங்கோ.
காங்கோவின் ஊடே பூமத்தியரேகை என்றும், காங்கோ நதி அகன்ற மஹாநதி, இயற்கை வளமும், தாது வளமும் மிகுந்த நாடு இது என்று ஆறாவது வகுப்பில் படித்தது நினைவில் இருக்கிறது. ஒரு பெரிய குறை. மக்கள் உலக்கைக்கொழுந்துக்கள். இனவெறி பேயாட்டம் அங்கு ஒரு தொடர்கதை. நாற்பது வருடங்களாக, நிலையான வாழ்க்கை இல்லை, மக்களுக்கு.ஒரே ஒரு தலைவர் தேசியவாதி (அன்றொரு நாள்: ஜூலை 2:) அவரை கொன்று விட்டார்கள். ஒரு டைம்லைன் பாருங்கள்.
*
1960: பெல்ஜியம், அடித்துப்பிடித்துக்கொண்டு, முன்னதாகவே விடுதலை அளித்து விட்டனர். ‘அடங்கா’கடாங்கா கலாட்டா.
1961: சட்டப்படி பிரதமரான லுமும்பா கைது செய்யப்பட்டு, இம்சை செய்யப்பட்டு, ராணுவத்தால் சுட்டுக்கொலை. உள்கை: பெல்ஜியம், அமெரிக்கா.
1965: மொபுட்டு என்பவரின் சூழ்ச்சி. ஆட்சி பறித்தார், அவர்.
1970: மொபுட்டு அதிபர் ஆன ‘வைபவம்’. வெளிப்படையாகவே, ‘தீவட்டிகொள்ளை ராஜ்யம்’ என்று சொல்லப்பட்டது. குழந்தைகள் கூட கடும்பட்டினி. எப்போதும் மின் தடை. அதுவே இழிச்சொல் ஆகிவிட்டது.
1994: சின்ன ரவாண்டா நாட்டின் இனவெறி பேயாட்டம். பெரிய காங்கோ நாடு தலை குனிவு.
1997: ரவாண்டா நாட்டின் உதவியோடு மொபுட்டு விரட்டப்பட்டது. புரட்சித்தலைவன் லாரண்ட் கபிலா தலையெடுத்தார்.
2000: உகாண்டுவும் ரவாண்டாவும் காங்கோவின் கிஸங்கனி என்ற இடத்தில் கடும்போர்.
2001: ஜனவரி 16: லாரண்ட் கபிலா படுகொலை. மகனார் ஜோசஃப் பதிவியேற்றார்.
2011: டிசம்பர் 11, ஜோசஃப் தேர்தலில் வெற்றி. (49%) எக்கச்சக்க வன்முறை, கலாட்டா.
*
அங்கு ஐ.நா.வின் சமாதானப்படை இருக்கிறது, இந்தியா உள்பட. உலக அபிப்ராயம்: இத்தனை செலவும் சரி, அத்தனையும் வீணானதும் சரி. இந்த வேஸ்ட் உலக ரிக்கார்ட்.
ஏ.ஜே.பி. டேய்லர் என்ற பிரபல வரலாற்று ஆசிரியர் ‘ நாட்கள் நெருங்க, நெருங்க, வரலாறு கனத்துப் போகிறது. பளு தாங்குவது கடினம்’ என்றார். சரி தான். மற்ற நாடுகளின் ஆளுமையில் தலையிடுவது, கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது, எரிய வீட்டில் ஆதாயம் பிடுங்குவது எல்லாம், பெல்ஜியம் உள்பட, மேற்கத்திய நாடுகளின் தொட்டில் பழக்கம். காங்கோவை முறைகேடாக ஆட்சி செய்து, பொறுப்புணர்ச்சியில்லாமல், ஓடிய நாடு பெல்ஜியம் என்று வரலாறு சொல்கிறது.
இன்னம்பூரான்
16 01 2012
ஈரானும், லிபியாவும்
காங்கோவும், லிபியாவும்
உசாத்துணை:
No comments:
Post a Comment