அன்றொரு நாள்: ஜனவரி: 3
ஜக்கம்மா
“ போர்தேவதையின் கோயிலில் பூசாரியே பலி கடா; பலிகடாவே பூசாரி.”
~ கார்ல் மார்லண்டே(2011) ‘போருக்கு செல்வது எப்படி இருக்கிறது?’:கார்வெஸ் பதிப்பகம்.
இந்த நூலுக்கு மதிப்புரை எழுதிய பிரபல இதழாளர், மாக்ஸ் ஹேஸ்டிங்க்ஸ்: ‘போரிலிருந்து திரும்பிவரும் சிப்பாய்களில் பலர் மனதளவில் தோற்றவர்கள் ’ என்கிறார். போர் என்றால் இரு தரப்புகள்; இரண்டும் ஆவேசம் கொள்ளும்; நியாயம் பேசும்; வரலாறு எழுதும். ~மஹாபாரதப்போரிலிருந்து தற்கால லிபியா எழுச்சி வரை. இது நிற்க.
இன்று தமிழ்நாட்டின் வீரத்தின் சின்னமாக திகழும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள். அவர் ஜனித்த தினம்: ஜனவரி 3, 1760. ஆற்காட்டு நவாப்பின் ஆடம்பர செலவுகளுக்கு கடன் கொடுத்து, அரசு ஆளுமையை பறித்துக்கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் கை ஓங்கியிருந்த காலகட்டம். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து 33 பாளையங்களில் ஒன்றான பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக ஃபிப்ரவரி 2, 1790ல் பதவி ஏற்று, கும்பனியாருடன் இடைவிடாத போர் நடத்தி, எதிரிகளால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரமரணம் எய்தவர். இந்த மாவீரரின் வரலாறு எழுதுவது கடினம். இணைய தளத்தில் அவரை பற்றிய கட்டுரைகளை படித்தால் தலை சுற்றும். சில நூல்களிலும் அப்படியே. அந்த அளவுக்கு புனைவுகள், கற்பனைகள், ஒரு தலை பக்ஷ இன வாதங்கள், தமிழ் வாணனின் ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்’ கருத்துக்கள் போன்றவை, சுவை மிகுந்த நாட்டுப்பாடல்கள், அவற்றில் புதைந்திருக்கும் உண்மைகள், சில ஆவணங்கள், அவற்றை சுழட்டி அடித்து, நிலை நாட்டப்படும் அபிப்ராயபேதங்கள். கலைக்டர் ஜேக்ஸனுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் உள்ள பகை, செப்டம்பர் 10, 1798 அன்று ராமநாதபுரத்தில் வெடித்தது. அந்த நிகழ்வும், பதவியிலிருந்து ஜேக்ஸன் விலக்கப்பட்டதும், ஆவணங்களிலிருந்த போதும், அந்த முக்கியமான திருப்புமுனையை பலவிதமாக, கம்பளத்தார் இனமும், தேவர் குலமும், வரலாற்று முரண்கள் பல புகுத்தி, பதிவு செய்துள்ளனர். சொல்லப்போனால், எட்டையபுரத்து மறுபக்கம் பற்றி சீதாலக்ஷ்மியும், சுபாஷிணியும் விவரமாக எழுதாவிடின், அந்த வரலாற்று செய்திகள் மக்கிப்போயிருக்கும். ஆய்வு செய்யும் ஆவலுடன் பல உசாத்துணைகளை தேடிய எனக்கு, நா. வானமாமலை அவர்கள் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, கட்டபொம்மன் கதைப்பாடல் (நாம் தமிழர் பதிப்பகம்) ஆகியவை இங்கு கிடைக்காததால், தமிழ்நாட்டு வரலாற்றின் சில முக்கியமான நிகழ்வுகளை பற்றி இன்று ஆதாரபூர்வமாக எழுத இயல வில்லை. எனவே ஒரு மரபு சார்ந்த செய்தியை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு உச்சிகால பூஜையின் போது அடிக்கப்படும் மணியோசை கேட்டபின் தான், பக்திமான் ஆகிய வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு அருந்துவார் என்று படித்திருக்கிறேன். அந்த மணி அவருடைய தந்தை திக்குவிஜய கட்டபொம்மனால் வழங்கப்பட்டது என்றும், கடந்த நூறு வருடங்களாக அது ஒலிக்கவில்லை என்றும், ஜூலை 2, 2009 அன்று, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, அந்த மணி ஒலிக்கப்பட்டது என்றும், அதையொட்டி, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன என்ற செய்தி (உபயம்: திரு.அண்ணாமலை சுகுமாரன்) மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான வரலாறுகளும் ‘கிண்’ என்று மணி ஒலித்த வண்ணம் வருகை புரியவேண்டும். எனவே, வாசகர்கள், கூடிய சீக்கிரம், ஆதாரபூர்வமான செய்திகள், செவி வாய் செய்திகளும், அவற்றின் நம்பகத்தன்மை பற்றியும், இவ்விழையில் எழுதினால், ஃபிப்ரவரி 2, 2012 அன்று தொடர இயலலாம்.
இன்னம்பூரான்
03 01 2012
உசாத்துணை:
- த.ம. அ: http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=359&Itemid=472
- மின் தமிழில்: ஸுபாஷிணி: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்;
- மின் தமிழில்: சீதாலக்ஷ்மி: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
- மின் தமிழில்: அண்ணாமலை சுகுமாரன்: மின்செய்தி மாலை (ஜூலை 7, 2009)
- மின் தமிழில்: கே.சரவணன்:ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன்
- http://ta.wikipedia.org/wiki/பேச்சு:வீரபாண்டிய_கட்டபொம்மன்
- http://www.thevarthalam.com/thevar/?p=1472
- http://rajakambalam.com/kattabomman%20tamil.htm
- த. ஸ்டாலின் குணசேகரன் : தொகுப்பாசிரியர்: (2000) விடுதலை வேள்வியில் தமிழகம்:: வே.மாணிக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஆ.மோஹன் தாஸ்: தளபதி சுந்தரலிங்கம், இல, செல்வமுத்து குமாரசாமி: ஊமைத்துரை.
No comments:
Post a Comment