அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 20
“வாழ்க்கையின் இலக்கை விழுந்து விழுந்து நாம் தேடுகிறோம் என்று சொல்கிறார்கள். எனக்கு என்னமோ அப்படி தோன்றவில்லை. உயிரும் உடலும் ஒருங்கே வாழ்வதே பெரிய அனுபவம். உடலின் அனுபவங்கள், நம்முள் ஆழமாக உறையும் மனோபாவங்களுடனும், நிஜத்துடனும், அன்யோன்யமாக உறவாடும் போது தான் ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறி.” [The Rapture of Being Alive] புலப்படுகிறது.”
~ஜோஸ்ஃப் காம்ப்பெல்
இன்று திசை மாறி தென்றல் வீசுகிறது. நாலாயிரம் வருடங்கள் கடந்தது ~ பின்னோக்கி! இன்று நான் எத்தனை சிந்தனையாளர்களின் பினாமி என்று எனக்கு தெரியாது. தமிழாக்கம் செய்வதிலும், என் படைப்பில் குறுக்கிடுவதிலும் அபரிமித உரிமை எடுத்துக்கொண்டிருக்கிறேன். பொறுத்தாள்க. என் அனுபவம்: முதல் தடவை புரியாதது, இரண்டாவது தடவை படித்தால் புரிகிறது.
நாமொன்று நினைக்க, மனம் ஒன்று நினைக்கிறது. முரண் ஒன்றுமில்லை. ரயில் பாதை போல, சிந்தனைகள், இரு கோடுகளில். ‘அன்னிய’ அன்னை ஒருவரை பற்றி எழுத நினைத்தால், அவரின் ஆன்மீக யாத்திரை என்னை ‘எலெயூஸிஸ் யாத்திரை’ என்ற கிரேக்க மறைஞானத்திடம் இழுத்துச் செல்கிறது. டெலஸ்டெரியன் ஒரு பெரிய அறை. புனித ‘ெடமடர்’ சின்னங்களை பெருமளவில் கூடும் பக்தர்களுக்கு காட்டும் தினம் ஸெப்டம்பர் 20 எனலாம். ஒரு வார திருவிழா. பூசாரிணிகள் தொன்மங்களை உரைக்கின்றனரோ! ‘மரணத்திற்கு பிறகு வாழ்வு’ பற்றிய மர்மங்களை உணர்த்துகிறார்களோ! யாருக்குத் தெரியும்? எல்லாம் பரம ரகசியம். இந்த வருஷம், அந்த வருஷம் என்றெல்லாம் சொல்ல முடியாது, சார்.
1500 கி.மு. என்று தோராயமாக சொல்லலாம். காலெண்டர்களில் பல வகை. எனவே, ஸெப்டம்பர் 20 கூட ஒரு குத்து மதிப்பு தான்.
மறுபடியும் ஒரு க்வாண்டம் லீப்! 1500 கி.மு. ~ 1947 கி.பி. காலேஜ் சேர்ந்த போது, சொந்த சாஹித்யமும், சகவாசதோஷமும் ஒரு ரசவாதக்கலவையாக அமைந்து, பரிக்ஷைக்கு வராத விஷயங்களை மட்டும் படிக்கத் தூண்டும். அதன் அருந்தவப்பயனாக, அமெரிக்காவிலிருந்து ரோஸிக்ரூஷியன் தொன்மை இதழ் ஒன்று வரும். லவலேசமும் புரியாது. இன்று அவ்விதழில் 2009 ல் வந்த ‘எலெயூஸிஸ் யாத்திரை’ பற்றிய சுருக்கம். கொஞ்சம் ஃபாரின் மறைஞான யாத்திரை போய் வருவோமே! புரியவில்லையா? டோண்ட் ஒர்ரி. படிக்க, படிக்க, புரியும். மஹாபாரதத்தில்: பீஷ்மரும் வரார்; சகுனியும் வரார். தர்மரும், நாயும், தேரோட்டி கர்ணன் தர்மாத்மா. தேரோட்டி கண்ணன் ஞானாத்மா. அபிமன்யு கர்மவீரன். அந்த மாதிரி கிரேக்க மறை ஞானத்தையும் அனுபவிக்கலாம். மனசு வேணும்.
ஜோஸ்ஃப் காம்ப்பெல் அவர்களின் பொன்வாக்கை நினைவில் வைத்துக்கொண்டால், பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல. அவரை பற்றி ஒரு சொல்: ஒரு நேர்காணலில் ‘சச்சிதானந்தம்’ என்ற தன் வாழ்க்கைத்தத்துவத்தை சொன்ன இந்த முனிவரை ‘தூரத்து பச்சை’ என்று நினைத்திருந்தேன், அவரது மாணவி ஜூடித்தை சந்திக்கும் வரை. அவள் தான் சொன்னாள், இவர் பழகுவதற்கு எளிய மனிதர் என்று.
இனி ‘எலெயூஸிஸ் யாத்திரை’(எலிஸா கட்ஜான் சொல்வது):
“... எலெயூஸிஸ் கோயிலான டெலஸ்டெரியன் போனேன். எல்லாரும் காஷ்ட மெளனம். அதுவே பெருந்துணை. காதல் தேவதை அஃப்ரோடைட் கோயிலில் உழவாரப்பணி செய்யவேண்டுமோ? முள்புதர்! பிறகு ‘நகைச்சுவை’ பாலம் கடந்தோம்; எள்ளல் எல்லாருடைய ‘தற்பெருமை’பளுவை இறக்கி வைத்தது...‘பெர்ஸெஃபோன்’ என்ற கன்னிப்பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை என் உடல், ஆவி இரண்டையும் பாதித்தது. அன்னை கன்னிகையை இழந்தாள்;கன்னி அன்னையை இழந்தாள். என்னே இழப்பு! மனித இனம் இயற்கை அன்னையை படுத்துவதை பாருங்கள் என்று தெரியாமலா சொன்னார், உளவியல் மும்மூர்த்திகளில் ஒருவரான கார்ல் யுங்க்! (இடம், பொருள், ஏவல் சொல்ல, நிறைய எழுத வேண்டும். அது வரை பொறுத்தாள்க.).
என்னை ஆட்டிப்படைத்த நேரமது. பூசாரிணிகள், நான் அங்கிருப்பதை பற்றி, அந்த அனுபவத்தின் தாத்பர்யத்தை பற்றி, அது தரணியுடன் உறவாட செய்ததை பற்றி, அம்மா/பொண்ணு சொந்தம் கொண்டாடுவதை பற்றி, புரிந்து கொள்ளச் சொன்னார்கள். ‘பெர்ஸெஃபோன்’ க்கு புனர்ஜன்மம்! பெண்ணியத்துக்கு வெற்றி. எனக்கென்னெமோ இந்த புனித யாத்திரை நமக்கு பூமாதேவியை பூஜிக்க தகுதி அளிக்கும் என்று தோன்றுகிறது. எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். இந்த யாகசாலையின் வாசற்படிகள், நமது வரத்துப்போக்கினால் தேய்ந்தது போல, மனிதனின் சடங்குகள் பிரபஞ்சத்தில் கால் தடம் பதித்துள்ளன.
அம்பாள் தரிசனம்: சாயும் காலம். இரு மலை உச்சிகளின் ஊடே, கிணற்றில் மெதுவாக இறங்குவது போல, ஆதவன் இறங்கி மறைகிறான். அன்னையின் மார்பகம் என் உயிரின் ஊற்று அல்லவோ! அன்று உமா மஹேஸ்வரி ‘திராவிட சிசு’ திருஞான சம்பந்தருக்கு மறைஞானம் என்ற அடிசில் ஊட்டியதை மறந்தாயோ? என் அனுபவத்தைக் கேள்: கண்டேன்! ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறியை.” [The Rapture of Being Alive]. கண்டேன் அண்டை ~ அயலார் உறவு. கண்டேன் ஞானப்பழத்தை. கண்டேன் பெண்ணின் பெருமையை.
கற்றது கைமண்ணளவு: மதொரி தீவினிலே, ஏரிக்கரையினிலே அமர்ந்து நீச்சலடிக்கும் வாளை மீன்களை கண்டு, அவற்றுடன் ஒன்றிப்போனேன். பாய்ந்தோடும் மானை கண்டாலும், ஆகாசத்து ராணியான பருந்தை கண்டாலும், சிரித்து மயக்கும் சிசுவை கண்டாலும், இப்படி மெய் மறந்து போகிறேன், கண்ண பரமாத்மா! இந்த விநாடி நிரந்தரம். வேறு என்ன வேண்டும்?
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி: எங்கள் குழுவே சாகரத்தின் மடியிலே தஞ்சம்! பத்திரமாகத்தான் இருக்கிறோம். ஸ்தபதி சிலைக்குக் கண்மலர் திறப்பது போல் ஆத்மா, இந்த சரீரத்தில் புகுந்து விளையாடும் அனுபவம், எங்களுக்கு, இங்கே. அது வேறு எங்கு கிடைக்கும் அல்லது நீ ஜனித்ததை நீயே அறிவாயா?
சுழலாட்டம்: திக்குத் தெரியாத காட்டில், நீயும், நானும், எல்லோரும் தான், சுழன்று, சுழன்று ஆடுகிறோம். தலை சுற்றினாலும், அது ஒரு லாகிரி. ஒரு தோழி உனக்கு சமய ஞானம் இல்லை, மத போதனை அறியாதவன் என்று. அதா அன்று. ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறிக்கு சமயமேது, மதமேது! ‘நேதி’!..” [The Rapture of Being Alive]
பூர்ணமிதம்: பழங்கால சிற்பங்களை காண விழைந்து, மோச்லோஸ்சில் காலம் கடத்தினோம். பெளர்ணமி. சந்திரிகையை நாடினோம். அவள் ஓடி ஒளிந்து விளையாடினாள். ‘சட்’டென்று பூர்ண சந்திரிகை. கொஞ்சமா! நஞ்சமா! பத்து நிமிடங்கள் நிலா ஸ்நானம்! நிலா! நிலா! நில்லாமல் வா! மகிழ்ச்சியும் பூர்ணம்; நாங்கள் திளைப்பதும் அரியக்குடி பெருமாள் கோயில் குளத்தில் போல! வாழ்வும் முழுமை. அதன் நெறியும் பூர்ணமிதம். எனக்கும் பெளர்ணமியின் ஒளி, பெண்ணின் பெருமை, தொன்மை கலாச்சாரம் ஆகியவற்றின் ஆளுமையில் வாழும் நெறி புரிகிறது.
கதை கேளு! கதை கேளு!: எங்களுடன் ஒரு வானவியல் விஞ்ஞானிகள் வந்தனர். தொன்மை, பழங்கால வானவியல். தற்கால வானவியல், விஞ்ஞானம் எல்லாவற்றையும் விளக்கினார்கள். சமுதாயத்திற்கு சேதி சொல்லவேண்டும் என்று எங்களுக்கு ஆர்வம். அன்பர்களே! செவி சாய்க்கவும். வாழ்வியலை போற்றி பாதுகாக்கும் பழங்கால நெறிகளை மறந்து விட்டோம். நம்பிக்கைகளை தகர்த்து விட்டோம். நம்மை நாமே பாபிகள் என்று மாரடித்துக்கொள்கிறோம். தெய்வசான்னித்யம் நமக்குக் கொடுப்பினை இல்லை என்று பரிதாபித்துக் கொள்கிறோம். இயற்கையிலிருந்து விலகி, சகபடிகளை விலக்கி, தனித்து குப்பை கொட்டுகிறோம். கொஞ்சம் விவேகத்துடன் இயங்கினால் பேரின்பமல்லவா கிட்டும்! ஒரு சங்கிலித்தொடர், ஒரு பிணைப்பு, நீயும், நானும், அவரும், எவரும், 64 கலைகளும், அறிவியல்களும், தொன்மத்தின் தரவுகளும், அடடா! சாஸ்வத சந்துஷ்டி?
வேறு என்ன வேண்டும். பராபரமே!
இது ஶ்ரீ மோஹனரங்கன் ஸ்பெஷல்.
இன்னம்பூரான்
20 09 2011
உசாத்துணை: