அன்றொருநாள்: ஃபெப்ரவரி 20
உதய தாரகை
உதய தாரகை ஈழத்தின் முதல் இதழ். அதன் ஆசிரியராக பணி புரிந்த ஜே. ஆர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (J.R. Arnold) ஒரு தமிழறிஞரும், தமிழாசிரியரும், புலவரும் கூட. 15 வயதில் கிருத்துவராக மதம் மாறிய சதாசிவம் பிள்ளை அக்டோபர் 11, 1820 ல் மானிப்பாயில் பிறந்தவர். ஃபெப்ரவரி 20, 1896ல் மறைந்தார். அவர் எழுதிய நூல்களில், பாவலர் சரித்திர தீபகம் பெரிதும் போற்றப்பட்டது. அதுவும், இல்லற நொண்டி (1887, நொண்டி ஒருவன் உத்தம ஆடவர், நற்குணப் பெண்டிர், துர்க்குணப் பெண்டிர் ஆகியோரின் இயல்புகளைக் கூறுவதாக அமைந்துள்ளது), மெய்வேட்டசரம், திருக்கடகம், நன்நெறிமாலை, நன்நெறிக்கொத்து, Carpotacharam, வெல்லை அந்தாதி (சிறுவர் நூல், 16 பக்கங்கள், 1890) ஆகிய மற்ற நூல்களும் மின்னாக்கம் செய்யப்பட்டு ‘நூலகம்’ என்ற அருமையான தொகுப்பில் கிடைக்கின்றன.
உசாத்துணை:
*
சமுதாய நீதி
கோபன்ஹேகனில் 1995ல் ஒரு சர்வதேச மாநாடு உலகளவில் சமுதாய முன்னேற்றத்தை பற்றி தீவிரமாக விவாதித்தது. ஏழ்மையை ஒழிக்கவேண்டும் என்றார்கள், ஏகோபித்த குரலில். வேண்டாம் என்று சொல்வார்களா? என்ன? அப்படி, இப்படி, மறந்ததெல்லாம், பின்னூட்டம் செய்து நினைவுறுத்துக்கொண்டு, நவம்பர் 26, 2007 அன்று 192 நாடுகள், மறுபடியும், ஏகோபித்து, ஐ.நா. வின் சார்பில், ஒரு பிரகடனம் செய்தார்கள்: 2009ம் வருடத்திலிருந்து ஃபெப்ரவரி 20 அன்று ஏழ்மை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, பெண்ணுரிமை, சமத்துவம் ஆகிய நல்வழிகளை பற்றி பேசுவோம், விழிப்புணர்வை அளிப்போம், திட்டமிடுவோம் என்றார்கள்.
ஐ.நா. வாழ்க.
உசாத்துணை:
*
ஜனநாயகம்: தேர்தல்: வன்முறை
ஃபெப்ரவரி 20, 1983 அன்று மாநில தேர்தலை முன்னிட்டு பயங்கர மோதல்கள். நூற்றுக்கணக்கில் கொலைகள் விழுந்தன. பல கிராமங்கள் கொளுத்தப்பட்டன. மாணவர்கள் தேர்தலை எதிர்த்தனர். சட்டவிரோதமாக, பங்களா தேஷிலிருந்து இந்தியாவுக்கு புலன் பெயர்ந்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்ததை எதிர்த்து, இந்த மோதல்கள், அஸ்ஸாமில்.
மரியாதைக்குரிய ஹிந்து இதழ் தேர்தலை தள்ளிப்போடவேண்டும் என அறிவுரைத்ததை பிபிசி குறிப்பிட்டது. தேர்தலை நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று கோஷித்தார், பிரதமர் இந்திரா காந்தி.
உசாத்துணை:
இன்னம்பூரான்
20 02 2012
No comments:
Post a Comment