அன்றொருநாள்: ஃபெப்ரவரி 14
வாய்ப்பூட்டு
அமர்நாத் திவாரியை ஒரு கும்பல் தாக்கியது; அதுவே அங்கு வன்முறை ரோந்து சுற்றுகிறது; போலீஸ் அமைதியில்; இது பாட்னாவில். திவாரி பி.பி.சி. நிருபர். லோக்கல் அரசியல் வாதியின் லஞ்சத்தை பற்றி எழுதினார்; அடி, உதை. டாக்டர்.வி.சாந்தா பிரபல புற்றுநோய் மருத்துவர். ஒரு சர்ச்சையில் தன்னுடைய துறை சார்ந்த கருத்தை அவர் சொன்னது பிடிக்காமல், அவர் மீது அபவாதங்கள். தேசாபிமானத்தை பறை சாற்றியதால், ராஜதுரோகி என்ற குற்றச்சாட்டு, அண்ணல் காந்தி மீது.
சில நிகழ்வுகள் அழியாத கறைகள், பகத் சிங்கை கழுவேற்றியது போல. மட்டுறுத்தல்கள், இற்செறிப்புக்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்வது, நல்ல படிப்பினையே. ஃபெப்ரவரி 14, 1974 அன்று இலக்கியகர்த்தா அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்சனை சோவியத் ரஷ்யா தேசத்துரோகி என்று பழித்தது: ரஷ்யன் கிரிமினல் சட்டம் 64 படி அவரை சுட்டுத்தள்ளலாம் அல்லது சொத்தை பறித்து, பத்து வருட கடுங்காவல். ஒரு நாள் முன்னால், குடியுரிமையை பறித்து, அவரை மேற்கு ஜெர்மனிக்கு நாடு கடத்தியது. ஏற்கனவே ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில், பேச்சுரிமையை நிலை நிறுத்தியதால், பத்து வருடம் சிறை வாசம் அனுபவித்தவர். இப்போதைய குற்றம்: ‘குலாக் ஆர்ச்சிபெலாகோ’ என்ற நூலில்,காவல் முகாம் கொடுமைகளை பற்றி எழுதி மேற்கத்திய நாடுகளில் பிரசுரித்தது. இவர் நோபெல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் 1972ல் நோபெல் பரிசு பெற்ற ஹைய்ன்ரிச் போலி அவர்களின் விருந்தினராக லான்கென்ப்ராய்ச் என்ற குக்கிராமத்தில் அவர் வந்து இறங்கியபோது, 250 நிருபர்கள் காத்திருந்தார்கள். இது எதிர்பாராதது என்றும் தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் சொன்னார். பிறகு,ஸ்விஸர்லாந்து, டென்மார்க், நார்வே எல்லாம் சென்று ‘ஶ்ர்வதேவோ நமஸ்காரோ கேசவம் ப்ரிதிகச்சதி’ என்பது போல அமெரிக்கா போய் சேர்ந்தார். சோவியத் மனித உரிமை பறித்தலை மட்டுமல்ல, முதலாளித்துவத்தையும் கடுமையாக சாடினார், அலெக்ஸாண்டர் ஸோல்ஷெனிட்சன். 1991ம் வருட சோவியத் வீழ்ச்சிக்கு பின், இவர் மேல் இருந்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. 1994ல் நாடு திரும்பினார்.
இன்று இவரை பற்றி ஏன்? இந்தியாவில் பேச்சுரிமையின் பாதையில் தனியார்களும், கட்டப்பஞ்சாயத்தும், சமூகமும், அரசும், கல்லும், முள்ளும், குப்பை, கூளங்களும் வீசுகிறார்கள். பேச்சுரிமை விழிப்புணர்ச்சி தேவை.
இன்னம்பூரான்
14 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment