சுவரொட்டி 4
ஸேம் ஸைட் கோல்!
இன்னம்பூரான்
மார்ச் 17, 2020
காலம் போகிற போக்கில் பார்த்தால், மனித குலத்தின் வாழ்வியலின் தடம் மாறுதல் கவலை தருகிறது. நமக்குத் தெரிந்ததை தானே எடுத்துக் கூற முடியும். தமிழ்நாட்டில் கள்ளும் சாராயமும் கரை புரண்டு ஓடுகின்றன. குடிமகன்கள் தடியெடுத்து அடிப்பது அன்றாட அவலக்காட்சி, எல்லா பேட்டைகளிலும். தாய்க்குலம் நசுக்கப்படுகிறது. குடும்பச்சிக்கல்கள் அதிகரிப்பதால், சிறார்களின் கல்வியும் தடை பெறுகிறது. அக்காலத்து முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்த போது, கெளரதை பார்க்காமல், பொதுநலன் நாடி, ராஜாஜி கருணாநிதி வீட்டிற்கு அழையா விருந்தினராக சென்று, அவ்வாறு செய்யவேண்டாம் என்று கெஞ்சினார். அது விருதாவாக
ப்போயிற்று. போதாக்குறைக்கு, சாராய விற்பனை அரசின் ஏகபோக வணிகமாகி, தற்காலம் அரசின் கருவூலமாக இயங்கிறது. இந்த அவலம் உலகில் வேறு எங்கும் கிடையாது. ‘நாய் விற்ற காசு குரைக்குமா?’ என்ற அசட்டுக்கேள்வி கேட்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இது நிற்க.
மத்திய அரசு நவம்பர் 8, 2016 அன்று பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. அன்று முதல் டிசம்பர் வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது. சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அவசர நிலையைக் கருதி செல்லாத நோட்டுகளை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றபடி வேறு எங்கும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வாங்க தடையிருந்தது.
இது இப்படி இருக்க, டாஸ்மாக் ஒரு வீரதீர செயலில் இறங்கியது என்பது அதனுடைய 2016-17 நிதியாண்டில் டாஸ்மாக் தாக்கல் செய்த வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில், நவம்பர் 9, 2016 நிலவரப்படி டாஸ்மாக் தொடக்க நிலுவை தொகையாக ரூ.84.23 கோடி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில், ரூ. 81.57 கோடி செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் என்பதும் ரூ. 2.66 கோடி மற்ற புழக்கத்தில் உள்ள செல்லும் நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. நவம்பர் 9 ஆம் தேதி வங்கி விடுமுறை என்ற பின்னணியை மறக்கக்கூடாது.
“..இதையடுத்து, நவம்பர் 10 முதல் டிசம்பர் 30, 2016 வரை ரூ. 3,490.21 கோடியை டாஸ்மாக் மூலம் வசூலிக்கப்பட்டது. அந்த ரொக்க வசூல் தினசரி அடிப்படையில் அதன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலகட்டத்தில், மொத்தம் வசூலிக்கப்பட்ட ரூ3,490.21 கோடியில் சுமார் 140 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டாஸ்மாக் டெபாசிட் செய்துள்ளது. அதில், நவம்பர் 9, 2016 நிலவரப்படி வசூலிக்கப்பட்ட பழைய நோட்டுகள் ரூ.81.57 கோடியைக் கழித்தால், மீதமுள்ள தொகை ரூ. 57.29 கோடி இடைப்பட்ட காலத்தில் வசூலிக்கப்பட்டது உறுதியாகிறது…இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், செல்லாத ரூ500 ரூ1000 நோட்டுகளை வாங்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் தகராறு செய்வார்கள், அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், அதனால்தான் வசூலித்தோம் என்று”.. - நாளிதழ் செய்தி.
சால்ஜாப்பு சொல்லியிருக்கிறார்கள். வருமான வரித்துறை இந்த கந்தரகூளத்தை
ஏற்கவில்லை.
குடிமகன்கள் தகராறு செய்வார்கள், சட்டத்தை மீறுவார்கள். அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், அதனால்தான் வசூலித்தோம் என்று ஒரு அரசு நிறுவனம் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், இந்த அணுகுமுறை குறிப்பால் உணர்த்தும் சமுதாய சீர்கேடு மக்களை எங்கே உதறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது அல்லவா?
இந்த அழகில் ஒரு டாஸ்மாக் கடை முகப்பில் 'வாழ்க வளமுடன்' என்ற பொன்வாக்கு மின்னலடித்தது. ஃ போட்டோ எடுக்கப்போனேன். அடிக்க வந்தார்கள்.
கொசுறு:
செல்லா நோட்டுக்களை உண்டியலில் போட்டதை தடுக்காமல், திருப்பதி, பழனி தேவஸ்தானம் போன்றவை அவற்றை காசாக்க முயன்றதும் நடந்த கதையே.
ஒம்மாச்சி காப்பாத்து.