தருமமிகு சென்னையில் வைகறை புலர்ந்தது,
‘அருணன் இந்திரதிசை அணுகினான்...’
‘கூவின பூங்குயில்..,’ நீ ‘இலக்குமி’ என்றான். புனித
நீராட்டி, பொட்டிட்டான். வண்ணமலர்களும் சூடினான்.
பின் நின்றுத் தொட்டு வணங்கி, ‘அன்னையே’ என்றான்.
‘செல்வம் தா’ என்றான். நானும் ‘அம்மா’ என்றேன்.
அவனது சிறுமகன் பின் தொடர, நடந்தோம் நடு வீதியில்.
ஒத்தைக்கொம்பு பாடையாம் அது! அதில், சிறுவன் நந்தினியைக்
கட்டிக்கொணர, கட்டினோம் நடையை, பார்ப்பனச் சிட்டர் அகம் நோக்கி,
கண்ணெதிரே நீரூற்றி, பிணம் காட்டி, பால் கறந்தான், படுபாவி
கோனானும், ஏமாந்த அய்யரும், ‘வந்தாள் காமதேனு’ என மனமகிழ்ந்தார்;
‘டிக்ரி’ காஃபியும் பருகி, விட்டாரே ஏப்பம், அது முவ்வுலகும்
எதிரொலிக்க!
அத்துடன் விட்டதா என் துன்பக்கேணி? அல்ல! அல்ல! முதலியார் இல்லம், மரைக்காயர் வீடு, கன்யாஸ்திரீ மாடம் என்றெல்லாம்.
பாலும், குருதியும் கலந்து அளித்தேன்; ஐய்யயோ! மடியை பிசைகிறான்.
பால் போத வில்லையாம். விட்டானா யாதவக்கோன்? வழியெல்லாம் வாய் பிதற்ற, கழியால் அடித்து வந்தான்.
மானிடனும், ஆசை விலக்கி, பசித்துண்டு, கொடுமையற்ற விலங்காவது
எப்போது, தாண்டவக்கோனே? மதி கெட்ட மாந்தரும், புலனடக்கி,
நாவடக்கி, பண்பு நிறைந்த விலங்காவது எப்போது?