இன்று தேசாபிமானி சுப்ரமணிய சிவா அவர்களின் 130வது ஜன்ம தினம். இந்த இழையை மீள்பதிவு செய்யவேண்டும் என சில நண்பர்கள் கேட்டதின் பேரில்:
இன்னம்பூரான்
அக்டோபர் 4,2014
அன்றொரு நாள்: அக்டோபர் 4
‘லொட்!லொட்! ‘லொட்!லொட்! ‘லொட்!லொட்!
இது என்ன ஊன்றுகோலா? அடிக்கற பெருந்தடியா? அதை விட்றா! அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே! அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா? சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.
(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)
[‘Saunters in Subramania Sivam (Sivam) (1884-1925), the spit-fire patriot clad in a loose shirt, furled dhoti and tilted turban tut-tuting his inseparable staff. The staff and his flowing beard remind one of a domineering Moses. Having shattered the calm in Navasakthi [4] office, he aggravates the situation by loudly hailing for the ‘castor-oil Mudaliyar’, his epithet for ThiruViKa. His other epithets for him are, ‘vendaikkai’ and ‘vazha vazha’, all insinuating that there is no ‘cut and thrust’ to his writings. A contributor to the weekly himself, he had come to tongue lash him for supporting an Indian marrying a foreigner. Rukmini Devi (1904-1986), the classical dancer, was marrying George Sidney Arundale (1878-1945), the Theosophist. Leading lights like the Hindu and Swadesamithran had deplored it.]
ஒழுங்கா இருக்கு! போங்கோ! திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.
அக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:
''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''
நான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம்! அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ? ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி!) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்! அவர் ஒரு புத்தகம் போட்டார், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' இல் படித்தது
"...சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது...
சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்''.
அணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)
"அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது...’
ஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:
வ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு? அவர் யார்? என்பதை நன்கு தெளிவாக்குகிறது.
தமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:
‘...சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.
இதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை...
...சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை...
...1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்...
சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்... சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.
1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்...தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்...1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.
சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்...அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.
காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்... தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்.
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011
உசாத்துணை:
சிலருடைய கருத்துக்கள்:
‘சத்தியம். பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் படிக்கச் சுவை. நன்றி பகிர்வுக்கு.’ (கீதா)
*
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011
*
சத்தியம்! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு! நன்றி! (ராஜம்)
-#-