Tuesday, February 18, 2014

கனம் கோர்ட்டார் அவர்களே ! : 21

கனம் கோர்ட்டார் அவர்களே ! : 21
  1. Wednesday, February 19, 2014, 6:17
  1. Featured, இலக்கியம், பத்திகள்
  2. 1 comment


இன்னம்பூரான்
18 02 2014

தருமமிகு சென்னைக்கு அருகே உள்ள வைணவ தலமாகிய ஶ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு அருகில் மாஜி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டுக் கொலையுண்டார். அந்தக் கொலையை யாரும் நியாயப்படுத்தாவிடினும், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனை ஆயுள் தண்டனையாக, இன்று [18 02 2014] உச்சநீதி மன்றத்தால், Transferred Cases (Criminal) no.2 & 3 0f 2012 என்ற தீர்ப்பில் குறைக்கப்பட்டது. இது நான் எதிர்பார்த்தது தான். சொல்லப்போனால், சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இதற்கு பச்சைக் கொடி காட்டியது. ‘அறம் வென்றது’ ,‘நீதி கெலித்தது’, ‘தமிழகம் போற்றும் தீர்வு’ என்றெல்லாம், இதற்கு அரசியல் அரிதாரம் பூசாமல், சட்ட நுட்பங்கள், இந்திய அரசியல் சாஸனத்தின் தீர்க்கதரிசனம் ஆகிய நோக்கில், சற்று முன் பிரசுரமான அந்த தீர்ப்பு [இங்கே] அலசப்படுகிறது.
முதற்கண்ணாக கொலையுண்டது யார் என்பது ஒரு பொருட்டு அல்ல, தண்டனை அளிக்க. பிச்சைக்காரனுக்கும் பிரதமருக்கும் ஒரே நீதி தான். அடுத்தபடியாக, இந்தியாவில் தூக்குத்தண்டனை சட்டப்படி செல்லும். ஆகவே ஒரு கொலையாளிக்கு அதை அளித்து விட்டு, மற்றவருக்கு அதில் இருந்து விடுதலை அளிப்பது நியாயம் இல்லை. எனினும், மிகவும் அரிதாகவே, பல பின்னணிகளை மனதில் கொண்டு தான் அந்த மீளமுடியாத தண்டனை அளிக்கவேண்டும் என்ற சட்ட மரபு நடைமுறையில் உள்ளது. இந்த பின்னணியில் நோக்கினால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர் தப்பியதற்கு காரணம் குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து நீதி வழங்கப்பட்டது இல்லை. சட்டமும், நீதி மன்றமும் அவர்களுக்கு மரண தண்டனை தான் விதித்தது. சட்டரீதியான விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் அவர்களுக்கு ஜனாதிபதியிடம் கருணை மனு செய்ய வழி ஒன்று இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மனுக்கள் 11 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தன. Justice Delayed is Justice Denied. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பது வரையப்பட்ட சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆனால், சட்டப் புத்தகம் என்பது வரையப்பட்ட சட்டம் + அதற்குட்பட்ட ஆணைகள் + நீதி மன்ற தீர்ப்புகளின் அறிவுரைகள். அந்த வகையில் போனால், இந்த முடிவு என்றோ எடுக்கப்பட்டது எனலாம்.
திரு.ராம்.ஜேத்மலானி என்ற பிரபல வக்கீல் மனுதாரர்களுக்காக தாக்கல் செய்த ஆவணங்களும், வாதமும் இனி நம் சட்ட வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. மரணதண்டனை விதித்து விட்டு, வருடக்கணக்காக அந்தக் கைதிகளை இற்செறிப்பது வன்முறை, டார்ச்சர் என்பதை குழந்தை கூட புரிந்து கொள்ளும். ஆனால் 11 வருடங்கள் அவற்றை கிடப்பில் போட்டிருந்த ஜனாதிபதிகள் குழந்தைகள் இல்லையே !
இப்படி அவர்களை தவிக்க விட்ட நிர்வாகத்தின் போக்கு இந்திய அரசியல் சாஸனத்தின் 21வது ஷரத்தை மீறுகின்றது, இந்தியா கையொப்பமிட்ட சர்வதேச நியதிகளை மீறுகின்றது என்ற வாதம், அவருடையது. அந்த வாதம் கெலித்தது.
எதிர்வாதம் புரிந்த (புரியாமல் புரிந்த !) அரசு வக்கீலின் வாதம் விந்தையானது. கேலிக்குரியது. அது:
அரசு தரப்பில் (ஜனாதிபதி உள்பட) தாமதம் அதிகம் இல்லை ! அப்படியே வைத்துக்கொண்டாலும் மனுதாரர்கள், ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இங்கு செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. 11 வருடங்கள் தாமதத்தில், கரீக்டாக முன்பாதி உள்நாட்டு அமைச்சரகத்தில். ஒரு அதிகாரியின் கோப்புப் பையில் இந்த கருணைமனு கும்பகர்ண உறக்கத்தில் கிடந்தது !
அடுத்த 5 1/2 வருட தாமதத்தை நியாயபடுத்த வழி ஒன்றுமில்லை !
1974ல் எடிகா அன்னம்மா என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் ‘ மரண தண்டனை கைதிகள் காத்திருக்கும் வேளையில் நடைபிணம் போல’ என்ற எச்சரிக்கை மேற்படி அதிகாரிகளுக்கும், அரசு தலைமைக்கும், மாஜி ஜனாதிபதிகளுக்கும் தெரியவில்லை போலும் !
ஈற்றடி 1: இந்த தீர்ப்பு வரவேற்கப்படவேண்டிய மைல்கல் தீர்ப்பு.
ஈற்றடி 2: உண்மையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர்களைக் காப்பாற்றியது
மேற்படி அதிகாரிகளும், அரசு தலைமையும், மாஜி ஜனாதிபதிகளும்.
ஈற்றடி 3: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்கள் கருணை மனுக்களில் திரும்பத், திரும்ப, அவரவர்கள் நடை பிணமாக வாழ்வதை பரிதாபமாகக் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த நிலையிலிருந்து அவர்களை, மனுவை நிராகரித்து, அதன் அடுத்தக் கட்டத்தில், அவர்களை உய்வித்த தற்கால ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
ஈற்றடி 4: இனி செக்ஷ்ஷன் 432 & 433A : Criminal Procedure 1973 க்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கலாம்.

சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/3211/208/1600/john_abraham_bird_free.jpg


பிரசுரம்: வல்லமை மின்னிதழ்: http://www.vallamai.com/?p=42227

Monday, February 17, 2014

PUDUMAI PIHAN: KADAVULLUM KANDASAMI PILLAIYUM [3]

PUDUMAI PIHAN: KADAVULLUM KANDASAMI PILLAIYUM [3]