தமிழ் சமுதாயம் 2067 [1]
இன்னம்பூரான்
14 05 2017
பிரசுரம் : http://www.vallamai.com/?p=76999
தமிழகம் என்பது தரணி முழுதும் பரவியுள்ள தமிழர் உலகம். தமிழ் நாடு என்பது திருவேங்கட மலையை வட எல்லையாகவும், மூன்று கடல்களை மற்ற மூன்று எல்லைகளாகவும் கொண்ட பிராந்தியம். தமிழ் தமிழர்களின் தாய்மொழி. எனவே, தமிழ் சமுதாயத்தை உலகளாவிய மக்கள் கூட்டமாகவும் , தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் மட்டுமே என்று இரு கோணங்களில் காணமுடியும். டாக்டர் சுபாஷிணி தமிழர் என்பதில் ஐயமில்லை. அவர் தமிழ் நாட்டில் பிறக்கவும் இல்லை; அங்கு வசிக்கவும் இல்லை. தமிழின் மேலாண்மையை உணர்ந்த மதுரையில் வாழும் டாக்டர் பாண்டியராஜா, தமிழ் மொழிக்கே தன்னை அர்ப்பணித்த தமிழர் என்பதில் ஐயமில்லை.
சூழ்நிலை பொருட்டு தமிழே அறியாத தமிழர்களும் உண்டு. பல இடங்களில், அவர்களின் தமிழார்வத்தை காண்கிறேன். மற்ற நாடுகளிலிருந்து வந்து தமிழராக மாறி விட்டவர்களும் உண்டு.
நம்மிடம் மொழி பற்று இருப்பது நியாயம் தான். மொழி வெறி தான் கூடாது. தமிழர் என்ற இனப்பற்று இல்லாவிடின், நாம் தாய்மொழியை இழந்துவிடுவோம். அதுவே இனவெறியாக மாறினால், நம்மையும் கூட இழந்து விடுகிறோம். சுருங்கச்சொல்லின், பற்றுக்கோல் வழி நடத்தும். வெறியாட்டம் வழியை மறிக்கும். இந்த தொடரின் மைய கருத்து இது தான்.
தமிழகம் தமிழரை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் அன்றாடம் நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளவேண்டும், விழிப்புணர்ச்சியுடன் நுட்பங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டும். அவ்வப்பொழுது தமிழ் நாட்டுக்கு பல வகைகளில் உதவவேண்டும். தமிழ் நாட்டுமக்களுக்கு தற்காலம் நன்றாக அமையவில்லை. ஆட்சியில் பல இன்னல்கள். செங்கோலாட்சியை தவறவிடுவதில், மக்கள் மிகுந்த ஈடுபாடுடன் செயல் பட்டுள்ளனர், ஐம்பது வருடங்களாக, படிப்படியாக சல்லிக்காசிலிருந்து பல கோடி ரூபாய் வரை. நாட்டிலும், உலகிலும் நமக்கு நல்ல பெயர் இல்லை. இங்கே என்ன என்ன தடுமாற்றங்களும், குழப்பங்களும் நடக்குமோ என்று மற்றோர் கவனித்து வருகிறார்கள். எல்லா துறைகளிலும் தலை குனிவு. முதற்கண்ணாக தமிழ் மொழியை பேணுவதில் செயல்படாத ஆணைகளும், தீர்மானங்களும். அதற்கு காரணம் உதட்டசைவை காரியத்தில் காட்டாத நடப்பு. அத்தகைய போலி வாழ்க்கையை எங்கும் காண்கிறோம். போலி மருத்துவர்களை சமுதாயம் காப்பாற்றுகிறது. கலப்படம் செய்பவர்கள் - பாலுடன் நீர், நீருடன் மாசு, மாசு கலந்த காற்று. ஐம்பூதங்களையும் கலங்க அடிக்கும் மனித பிசாசு, நமது சமுதாயத்தில், நம் கண் முன் அட்டூழியங்கள் செய்தவாறு, பீடு நடை போடுகிறான். கல்வித்துறையில் காலூன்றிய பணமுதலைகள், ‘படிப்பு தான் முக்கியம்’ என்று வாழ்ந்த மக்களை, பல ஊழல்களில் இழுத்து வைத்து, கல்வி என்ற சொல்லையே அவமதித்து விட்டனர். இத்தகைய சிலந்தி பின்னலில் தன்னை மாட்டிக்கொண்ட தமிழ் சமுதாயம் ஐம்பது வருடங்களுக்கு பிறகு எப்படி இருக்கும் என்ற வினா எழுவது இயல்பே. இப்படியே எழுதி கொண்டு போனால், அது எத்தனை தேவையான வினா என்பதை தெரிந்தும், வாசகர்களில் சிலர் ஓடி விடலாம் என்ற அச்சத்தில் ஒரு நற்செய்தியை பற்றி குறுக்கு சால் ஓட்டிவிட்டு, அடுத்த தொடரில், பின்னூட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தொடருவோமாக.
நற்செய்தி:
ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தின் அருகில் உள்ள கோபால ஐயங்கார் மெஸ் மிகவும் பிரபலம். திரு.கோபாலன் கல்லாபெட்டி மேஜை மீது மிகவும் புனிதமாக கருதி வைத்திருப்பது இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகள் (இன்று கலைக்டர் மார்க்கட்டில் அதற்கு மவுசு அதிகம்!); அத்துடன் ஜனாப் பாஹவுதீந் கபியா பேகம் நிழற்படங்கள். ஐம்பது வருடங்கள் முன்னால், மதுரை காஜிமார் தெரு இஸ்லாமியருக்கு இவர்கள் குடும்பம் நெருக்கம், இரு வீட்டு குழந்தைகளும் இரு வீட்டிலும் வளர்ந்தனர். அத்தகைய பாசம், மதவெறி இல்லாத, மதப்பற்றை விடாமல் போற்றி வந்த மதநல்லிணக்கம் திரும்ப வரவேண்டும். முழுவிவரம் 16 05 2017 தேதியிட்ட தி இந்து இதழில் கிடைக்கும்.
என் சிறுவயதில் அண்டை வீடு தலைமை ஆசிரியர் யாகூப் கான். பொதுக்கிணறு. அவருடைய மகள் நம் வீட்டு சமைலறையிலிருந்து சுவாதீனமாக வாப்பாவிற்கு ரசம் எடுத்துச்செல்வாள். இது நடந்தது அறுபது வருடங்கள் முன்னால். அண்மையில் பாண்டிச்சேரியில் தமிழாய்வு செய்து வரும் முனைவர் விஜயவேணுகோபால் என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் யாகூப் கான் என்று பெருமிதமாக கூறிய போது, நான் அவருக்கு சீனியர் என்றறிந்து, இருவரும் எங்கள் ஆசானை போற்றினோம்.
மத நல்லிணக்கம் எல்லா நல்லிணக்கங்களுக்கும் அடிதளம். தமிழ் சமுதாயத்தில் தற்காலம் சகிப்புத்தன்மை குறைவு. காழ்ப்புணர்ச்சி வெள்ளம். சாதிப்பிரிவினை அரசியலை ஆண்டு வருகிறது. சாதி பேதம் எங்கும் தென்படுகிறது. 2067ல் நாம் எப்படி இருப்போம்? முன்னோட்டம் என்னவாக இருக்கும்? பின்னடைவு என்னவாக இருக்கும்?
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: