அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 4
அமெரிக்கா! அமேரிக்கா!
இன்றைய தினம், பல துறைகளில் உலகின் முதன்மை ஸ்தானம் வகிக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் (பொதுவாக ‘அமெரிக்கா’ எனப்படுவது) வரலாற்றில், பொன் எழுத்துக்களால் போற்றப்படவேண்டிய திருநாள். அந்த நாட்டின் தனிப்பெருமையே, பல நாடுகளிலிருந்து திரவியம் தேடி இந்த ஜூனியர் நாட்டில் புகலடைந்த மனித இனம் சீரும், செனப்புமாக வாழ்வதுடன், அமெரிக்க தேசாபிமானத்தை வளர்த்துக்கொள்வதும், இனபேதங்களை அறவே ஒதுக்கி விடுவதும், தான தருமங்களுக்கு மதிப்பு இருப்பதும், கல்வியின் உன்னதம், தகுதிக்கு அரியாசனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். குறைகள் இல்லாமல் இல்லை. முரண்கள் தலை தூக்காமல் இல்லை. அவற்றை பற்றி எழுத வேண்டிய இடம் இது இல்லை. அமெரிக்க பழங்குடிகளின் கெளரதை, தன்மானம், பண்பு ஆகியவை பற்றியும், இங்கிலாந்திலிருந்து ‘ஓட்டையில்லாத’ ‘மேஃப்ளவர்’ கப்பலில், சமய புத்துணர்ச்சியுடன் யாத்ரீகர்கள் வந்திறங்கியதும், கலோனிய மனப்பான்மை பிறந்த மண்ணிலிருந்து தூசிப்படலமாக வீசியதும், பாஸ்டன் தேயிலை கவிழ்ப்பு ஒரு புரட்சியின் சின்னமாக தலையெடுத்ததும், அமெரிக்க வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகள் தான். என்றோ ஒரு நாள், நான் எழுத இயலவில்லை என்றாலும்,மற்றவர் யாராவது எழுதட்டுமே. இன்று அமெரிக்காவில் ஜனநாயகத்தின் தூண்கள் அமைந்த விதத்தில், ஒரு சிறிய பகுதி மட்டும் இடம் பெறுகிறது.
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களால், ஒரு மனதாக, ஏகோபித்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியும், அமெரிக்க அரசியலில் போட்டியின்றி ஆதரிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதியும் ஆன ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்க்டன் அவர்கள் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினம், ஃபெப்ரவ்ரி 4, 1789. 1797 வரை அந்த பதவியில் செயலாற்றினார். 1792லிலும் அவருக்கு சதவிகித ஆதரவு. இங்கிலாந்தை வென்று வாகை சூடிய ராணுவத்தலவர், அவரே. 1787ல் அமெரிக்காவின் அரசியல் சாஸனத்தை எழுதிய குழுவின் அரசியல் தலைவரும், அவரே. உறுதி படைத்த, கஜானா நிரம்பிய தேசீய அரசை அமைத்தார். ஐரோப்பிய போர்களில் சிக்கிக்கொள்ளாமல் நடு நிலை வகித்து, ராஜ தந்திரம் பேணினார். ஆங்காங்கே தலையெடுத்த சில்லரை உள்குத்துக்களை அடக்கினார்.நிர்வாக சீர்திருத்தங்களை, மக்கள் நலம் நாடி, ஏற்புடைய வகையில் நிலை நிறுவி, எல்லா தரப்பு மக்களாலும் போற்றப்பட்டார். இவர் தான் அமெரிக்க தேசபிதா என்ற ஒருமித்த கருத்து நாடெங்கும் நிலவுகிறது. அதா அன்று. நாடாளுமன்றம் உவகையுடன் அளித்த $ 25,000/- சம்பளம் பெற மறுத்தார். ஆனால், செல்வமற்றவர்கள் அப்பதவியை நாடுவதில் சிக்கல் அளிக்கும் மரபுகள் வேண்டா என்று அதை ஏற்றுக்கொண்டார். ராஜாங்க ஹோதாக்களை தவிர்த்து, எளிய ஜனநாயக மரபுகளை ஆதரித்தார். அவர் திறன் மிகுந்த நிர்வாகி. வேலை பங்கீடு, பொறுப்பு அளிப்பது, வேலை வாங்குவது, பேசி, கருத்துக்கேட்டு இயங்குவது, கட்டுக்கோப்பான, தெளிவான ஆணைகள் பிறப்பிப்பது ஆகியவகையில் நிகரற்றவராக இருந்தார். அவர் இரண்டாவது முறை பதவி ஏற்றதே, தயக்கத்துடன். மூன்றாவது முறை தேர்தலில் நிற்க மறுத்து விட்டார். 1792லிம், 1796லிம், பதவி மோகம் பற்றிய அவருடைய சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார், அவர். அமெரிக்காவும், உலகும், ஏன், இன்றைய இந்தியாவும், கிளிப்பிள்ளைப் போல, படித்து, படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய ஆவணம், அது. அந்தக்காலத்தில், நீட்டி, முழக்கி, வக்கணையாக மடலிடுவது வழக்கம். அது 22 பக்கங்கள் கொண்ட நீண்ட ஆவணம்.தேசாபிமானம், ஒற்றுமை, அரசியல் சாஸனத்தின் அருமை, சட்டத்தின் மேலாண்மை, அரசியல் கட்சிகள் செய்யக்கூடிய தவறுகள், மக்களாட்சியின் இலக்கணம் ஆகியவற்றை பளிங்கு நீர் தெளிவுடம் ஆராய்ந்த அந்த திறந்த கடிதத்திலிருந்து, இரு மேற்கோள்கள்:
1.தார்மீகம் தான் மக்களாட்சியின் அமுதசுரபி;
2. அரசு கையாளும் நிதி மக்களுடையது; சிக்கனமும், கணக்கு சொல்வதும் முக்யம்.
முடிந்தால், சில நாட்களில், இதன் தொடராக, அந்த திறந்த கடிதத்தின் சாராம்சம் அளிக்கும் கட்டுரை ஒன்று எழுத வாய்ப்பு கிட்டலாமோ, என்னமோ?
இன்னம்பூரான்
04 02 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment