அன்றொரு நாள்: ஜனவரி:20
புதிரவிழ்க்கப்போய்...
அதிரப்புகுத நனாக்கண்டேன், தோழி நான்!
சதிராடி, சதிராடி, வயல் தனிலே...
கதிரை அறுத்து, அறுத்து, ஐயகோ!
குதிர்-தானியத்தையும் கவிழ்த்துட்டாங்களே!
~ அவிழாத புதிருடன் இன்னம்பூரான்
“...ஜனநாயகத்தை எளிதில் அடையமுடியாது. கட்டுமானம் செய்ய நேரம் வேண்டும். தேர்தல்களால் மட்டும் அதை அடைய இயலாது..”
~ ஐ.நா. அதிபர் பான் கீ-மூன் 15 01 2012
சில நாட்கள் முன்னால் நம்மூர்காரரொருவர் நாளிதழில்: ‘முடியரசு இருக்கும் வரை, குடியரசுப் பேச்சு வீண்; ராணியம்மா யாருடைய பிரிதிநிதி?’. பாயிண்ட் மேட். ஆனால், பிரிதிநிதியான பிரதமரை விட,ராணியம்மா மக்களின் நாடியை துல்லியமாக அறிவார்கள் என்பது பிரிட்டீஷ் வரலாறு என்றும் சிலர் சொல்வார்கள்.
முதலில் ரொலாண்ட் ஸ்டர்ம் என்பவர் ஜெர்மானிய மொழியில் எழுதியதின் தமிழாக்கம்:
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்,ஜனநாயகம், ஆளுமையை பிரித்து செலுத்துவதில் உள்ளது. (மாண்டஸ்க்யோ: சட்டமன்றம், ஆட்சிபீடம், நீதிமன்றம்.) பிரிட்டனோ, அவற்றை, நற்கலவை செய்து அளிப்பதில், மக்கள் நலம் கண்டது. செங்கோல், பிரபுமன்றம், மக்கள் மன்றம் எல்லாம் சேர்ந்து எழுதா சாஸனம் நடாத்தும் இந்த வெஸ்ட்மினிஸ்டர் மாடல் ஜன நாயகம்...திறனுக்கும், ஆற்றலுக்கும், விரைவில் முடிவு எடுக்கும் திறமைக்கும், மக்கள் நலம் நாடாத ஆளுமைக் கணைகளை தட்டி விடுவதிலும், விடாக்கொண்டனாக இயங்குவதிலும், மக்களுக்கு தெளிவான வழிமுறைகளை போதிப்பதிலும், தேவை ஏற்பட்டால், பிரதமரை பதவியிலிருந்து விலக்கக்கூடிய நிவாரணங்கள் உடையது.
இந்த வெஸ்ட்மினிஸ்டர் மாடலிடம் இரவல் வாங்காத நாடு இல்லை என்பார்கள், இந்தியா உள்பட. ஆனால், பிரிட்டனைப் போல யாரும் அதை லாகவமாகக் கையாளவில்லை. அங்கும் பிரச்னைகள் உள்ளன. ஆனால், அவை ஹிமாலய பிரச்னைகள் அல்ல. ஜனநாயகம், மக்களாட்சி, பொதுவுடமை, குடியுரிமை என்றெல்லாம் விருதுகள் சூடி, சர்வாதிகாரமும், கொடுங்கோலும், அடக்குமுறையும், பகல் கொள்ளையும், உலகில் பல நாடுகள் ‘வெஸ்ட்மினிஸ்டர் மாடலை துஷ்பிரயோகம் செய்தனர்; செய்கிறார்கள்; செய்வார்கள். அந்த மாடலின் மையம் யாது?
‘வெஸ்ட்மினிஸ்டர் மாடல்.’ படி 1688ம் வருட ‘கீர்த்தி வாய்ந்த புரட்சி’க்குப்பின் படிபடியாக, ஐந்து படிநிலைகள் வலிமை பெற்றன:
- பிரதமரின் முதன்மையும், பொறுப்பேற்கும் அமைச்சரவையும்;
- நாடாளும் மன்றத்தின் மேலாண்மை;
- அரசு அதிகாரிகளின் ஏற்புடைய நடுநிலை; அதை பரிசோதனைக்கு உட்படுத்துவது;
- இவை யாவும் ஒன்றுசேர இயங்குவது;
- நியாயம் தான் உயர் வெண்குடை.
இந்த ஐந்தும் தாறுமாறாகக் கிழிந்துபோனால், அது வெஸ்ட்மினிஸ்டருமல்ல;ஈஸ்ட் இஸ்பேட் ராஜாவும் இல்லை. அதை கவனிக்கும் முன், இந்த மாடலின் வரலாறு காண, இந்த கல்லறைக்குப் போக வேண்டும்.
Here were buried the remains of
SIMON DE MONTFORT, EARL OF LEICESTER
pioneer of representative government who was
killed in the Battle of Evesham on 4 August 1265.
This stone brought from his birthplace the
Castle of Montfort-l'Amaury in France
was erected to commemorate the seven hundredth
anniversary of his death.
Unveiled by the Speaker of the House of Commons
and dedicated by
His Grace the Archbishop of Canterbury
on the 18th day of July 1965.
என்ன தான் இருந்தாலும், இந்த பிரிட்டீஷ்க்காரர்களின் மரபுணர்ச்சியை மெச்சவேண்டும். 700 வருடமான பிறகும், மக்களின் பிரிதிநித்துவ உரிமைக்காகப் போராடி, பிறகு ராஜாவினால் கொல்லப்பட்ட சைமன் டி மான்ஃபோர்ட் பிரபுவை, அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஜூலை, 18, 1965 அன்றைய ராணியம்மாவின் உரையை இன்றும் மக்கள் சிலாகிக்கிறார்கள். ஜனவரி 20, 1265 அன்று, ஸைமன் பிரபுவின் தலைமையில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இங்கிலீஷ் பார்லிமெண்ட் வெஸ்ட்மினிஸ்டரில் நடந்தது. 1215லேயே சம்மதமில்லாமல் வரி வசூலிக்கக்கூடாது என்ற மாக்னா கார்ட்டா பெறப்பட்டது. ஒரு முழுச்சுற்று முடிந்ததோ! மார்ச் 2012 ல், தனது 60 வருட 'ஆட்சி புரியா மாட்சிமை' நிறைந்த விழா எடுக்குபோது, ராணியம்மா பேசுவார்கள். மந்திரிமார் எழுதிக்கொடுத்த உரை அல்ல. அரண்மனை பிரகடனம்.
இப்படியாகப்பட்ட பார்லிமெண்ட் மாடல் தற்காலம் இந்தியாவில் எப்படி ‘இரவல்’ வாங்கி உருமாற்றப்பட்டுள்ளது என்று அறிய:
பெங்களூரில் உள்ள ‘ஜனநாயக சீர்திருத்த மையம்’ என்ற இடத்துக்குப் போகவேண்டும். சில வருடங்களுக்கு முன் அங்கு சென்று, அவர்களின் அரிய தொண்டை பார்க்க முடிந்தது.
ஜனவரி 10, 2012 அன்று அவர்கள் வெளியிட்ட புள்ளி விவரங்கள்:
- நூறு அமைச்சர்கள்: சமீபகாலத்துத் தேர்தல்களில் அவர்களே அளித்த பிரமாணங்கள் தான் ஆதாரம்;
- ஐந்து மாநிலதேர்தல்களில் நிற்கும் அமைச்சர்களில் மூன்றில் ஒருவர் மேல் கிரிமினல் வழக்குகள். 17 பேர் மீது கொலை சார்ந்த வழக்குகள்;
- உத்தரப்பிரதேசத்தில் 46% அமைச்சர்களின் மேல் குற்றச்சாட்டுக்கள்;
- 41% அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்;
- பஞ்சாப் -83%, கோவா-67% , உத்தர்பிர்தேசம் -37%: அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்;
- சராசரியாக ஐந்து மாநிலங்களில் ஒரு அமைச்சரின் சொத்து மூன்று கோடி ரூபாய்.
ஒரு மாநில அமைச்சர் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான ஏகரா நிலத்தை 20 ஆண்டுகளாக, ஆண்டுவந்தார் என்றும்,வருமானவரி இலாக்கா, பஞ்சாப்பில் மட்டும் தேர்தல் காலகட்டத்தில் 18.84 கோடி ரூபாயும், 36 லக்ஷம் மில்லி சாராயமும் கைப்பற்றியதாகவும், 15 01 2012 அன்றைய செய்திகள்!
என்னமோ அங்கலாய்ப்பு. எழுதி விட்டேன். என்றோ ஒரு நாள் ராமராஜ்யம் வரவேண்டும் சொல்லிக்கொண்டே இறந்து போனார் மஹாத்மா காந்தி.
ஹூம்!
~ அவிழாத புதிருடன் இன்னம்பூரான்
20 01 2012
உசாத்துணை:
Roland Sturm: Staatsordnung und politisches System; in: Hans Kastendiek u.a. (Hg.), Länderbericht Großbritannien, Bonn BpB 1994]
இது அரசியல் சாஸனத்தின் மூலாதாரமான நூல்.
No comments:
Post a Comment