பேஷ்! பேஷ்! சீரீஸ் [3]
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 24, 2018
ஆங்கிலத்தில் அதிகப்படியாக ஒரு மைல் நடக்கவும் என்பார்கள். அதாவது உம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமையையும், அனுமார் கடலை தாண்டின மாதிரி, தாண்டி செயல்பட்டால் தான் மேன்மை என்பார்கள். என்னுடைய அனுபவத்தில் இந்த நல்வரவை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அரசு உத்யோகம் என்று மட்டுமில்லை. யாவருக்கும் - தோட்டியிலிருந்து தொண்டைமான்- வரைக்கும் இது பொருந்தும்.
‘செல்வகளஞ்சியமாக’ அங்கங்கே காப்பரேட் ஆஸ்பத்திரிகள் மடியில் கை போடும் இன்றைய சூழ்நிலையில், சென்னை பொது ஆஸ்பத்திரியில் (ராஜீவ் காந்தி நாமகரணம் பிற்காலத்தில். 400 வருடங்களுக்கு மேலாக பணி புரியும் தர்மாஸ்பத்திரிக்கு) அவசர மருத்துவ துறை 24x7 பரபரப்பாக இருக்கும்; எங்கு பார்த்தாலும் ரத்தம், ஓலம், ஒரு மாதிரியான அக்கறையின்மை, கீழ்த்தட்டு மக்களிடம் கீழ்த்தட்டு மக்கள் பணம் பிடுங்குவது, சாவு, சாவு கிராக்கி வகையறா.
கடந்த ஏழு மாதங்களுக்குள் மெச்சத்தக்க முன்னேற்றங்கள். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேவையான தகவல் வருமுன் கொடுத்து விடுவதால், ஒரு டீம் தயார் நிலையில் வரவேற்று உரிய அவசர சிகிச்சை அளிக்கின்றனர். கத்திக்குத்துப்பட்டவரும், இதயக்கோளாறு நோயாளியும், சைக்கிளிலிருந்து விழுந்து லேசாக சிராய்த்துக்கொண்டவருக்கும் வரிசைப்படி ஒரே டீம் கவனிப்பு. அதற்குள் ஒருவர் செத்தால், அது அவர் தலைவிதி. அந்தக்காலம் போச்சு. அதி அவசரம்: சிவப்பு/அவசரம்: பச்சை/ அவசரமில்லை: பச்சை என்று மூன்று பிரிவுகள் தேவைக்கு ஏற்ப, செயல்படுகிறார்கள். நாட்தோறும் சரசரி 220 நபர்கள் வருகிறார்கள். ஏழுமாதங்களில், இறப்பவர்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டது. சிகிச்சை நபர் வந்த 2/3 நிமிடங்களில் துவங்கி விடுகிறது. அவசர சிகிச்சைக்கு வேண்டிய மருத்துவ சாதனங்கள் கைக்கெட்டிய தூரத்தில் பொருத்தப்பட்டிருப்பதால், உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த புதிய ஏற்பாடு மிகவும் போற்றப்படுவதால், இதை முன்மாதிரியாக வைத்து, பரவலாக, மாநிலம் முழுதும் செயல் படுத்த ஒரு திட்டம் இருக்கிறதாம். வாழ்க: சென்னை பொது ஆஸ்பத்திரி.
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com