Wednesday, January 3, 2018

அன்றும் இன்றும் [3]


அன்றும் இன்றும் [3]
-இன்னம்பூரான்
ஜனவரி 3, 2018
பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=82542



அன்பினால் இவ்வுலகத்தை ஆட்படுத்தவேண்டுமானால், முதல் படியில் கால் வைப்பது மக்கள்தான். அரசனோ, யதேச்சதிகாரியோ, ஜனநாயகத்தின் தலைவனோ, யாராக இருந்தாலும், அவன் ஒரு கருவிதான்.  ‘யதா ராஜா ததா பிரஜா’/ ‘யதா பிரஜா ததா கூஜா’/ ‘யதா கூஜா ததா பூஜா’  போன்ற பொன்வாக்குகள் ‘ஈயத்தை பாத்து இளித்ததாம் பித்தளை’ என்ற மாதிரி பொலிவு இழந்து பல நூற்றாண்டுகள் கடந்து போயின; இறந்தும் போயின, அண்ணாகண்ணன். ‘தெய்வாம்சம்’ பொருந்திய வம்சாவளி அரசர்களின் கரகாட்டம், தற்காலம் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, அரசியல்வாதிகளின் குடும்பநிதிசேகரம் பொருட்டு, மக்கள் நலம் என்ற ‘தோண்டியை போட்டுடைத்த’ கம்பங்கூத்தாடியாகப் பேயாட்டம் ஆடுகிறது. மஹாகவி பாரதியார் பாடிய வகையில் ‘பாப்பானுக்குத் தொப்பை சுருங்கியதோ இல்லையோ’ பிரதிநிதித்துவம் என்ற ஜனநாயகத்தூண் உடைந்தே போனமாதிரி தான் நாடகங்கள் நடந்தேறுகின்றன. இவ்விடம் ‘நாடகமே உலகம்’ என்று கூறினால், அது அடக்கி வாசிப்பது எனலாம். பித்தலாட்டமே நம் உலகம் என்றால் அது மிகையல்ல.

இந்தியா விடுதலை அடைந்தபோது நான் பாலகன். தந்தையின் நாட்டுப்பற்று எனக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அவர்தான் என் தகவல் மையம். சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ஏப்ரல் 28, 1942 அன்று தேகவியோகம் ஆனது பற்றிப் படித்தபோது, அந்த நிகழ்வை என்னிடம் 9 வயதில் என் தந்தை சொன்னது நினைவில் இருப்பதை கவனித்தேன். தேகவியோகம் என்ற சொல் பசுமரத்தாணி அடித்தது போல் நினைவில் இருக்கிறது. தமிழ்த்தாத்தாவின் பெயர் நினைவில் இல்லை. ஒரு காரணத்துடன் தான் நான் இதைச் சொல்கிறேன். பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும் பசுமரத்தாணி அடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிலவரிகள் கல்வியைப் பற்றி இப்போதைக்கு. பெற்றோர்களுக்குள் கல்வி, திரவியம் ஆகியவை ஒரே மாதிரியாக அமைவதில்லை. திரவியம் இல்லாதவர்களுக்கு நிதி உதவி செய்யலாம். கல்வி இல்லாத பெற்றோர்களுக்கு யார் வழிகாட்டமுடியும்? சில கிராமங்களில், பள்ளி ஆசிரியர், தபாலதிகாரி, கோயில் அர்ச்சகர் போன்றோர் ஓரளவு வழி காட்டமுடியும்; செய்யவும் செய்தார்கள். தற்காலம் ஏராளமான பள்ளி மாணவர்கள்; ஏராளமான படித்து முன்னேறிய மனிதர்கள்.ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வழிகாட்டி/மார்க்கபந்து அமைவது நடக்கக்கூடியதுதான். அதற்கு பிறகு வருவோம்.

அன்பு ஒரு தளை. அது எல்லா ஜீவராசிகளிடமும் தென்படும் நற்பண்பு. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. புலியோ, சிங்கமோ, நம் வீட்டு நாயோ தன் குட்டிகளைப் பொத்திப் பாதுகாப்பதை நாம் அறிவோம். அது தான் அன்புத் தளை. நமது சமுதாயத்தில் மக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டால், கட்டப்பஞ்சாயத்தும் வராது; கந்து வட்டியும் மிரட்டாது. ஆனால், அவையும், சாதி மத பேதமும், இன பேதமும், நிற பேதமும், பாலியல் கொடுமைகளும் புதியவை அல்ல; அவை காலம்காலமாக கொடுமை நிகழ்த்தியுள்ளவை என்பதை நினைக்கும்போது, என் மனம் மிரண்டு போகிறது. அன்பு ஒரு மாயையா? அல்லது அன்பும், காழ்ப்புணர்வும் உடன் பிறந்தவர்களோ? இன்பமும் துன்பமும் மாங்காய்ப் பச்சடியாக கலந்து வருவதுதான் வாழ்வின் இயல்போ என்ற கவலைகள் எழுகின்றன.

அன்பே சிவம் என்று இயங்கும் நிகழ்வுகளையும் காண்கிறோம், அவை சொற்பமாக இருந்தாலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ஸேரா கியரிங் (Sarah Gearing) என்பவருக்கு ஓர் அரிய வியாதி ~ சிதறிக்கொண்டிருக்கும் மூளை. பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய அத்தியாவசியம். இல்லையேல் அவருடைய உயிருக்கு ஆபத்து. அவரை முன்பின் அறியாத ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்கள் மொத்தமாக 12 கோடி ரூபாயை, எறும்பு போல் சிறுகச்சிறுகச் சேமித்துக் கொடுத்தார்கள். அவரும் சில அறுவை சிகிச்சைகள் முடிந்து, புன்சிரிப்புடன் நன்றி கூறுகிறார் என்று இண்டிபெண்டண்ட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. எங்கிருந்து வந்தது அந்த அன்பு?

(தொடரும்)

இன்னம்பூரான்

Tuesday, January 2, 2018

அன்றும் இன்றும் [2]


அன்றும் இன்றும் [2]
“The arc of the moral universe is long, but it bends towards justice.” 
‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’


இன்னம்பூரான்
ஜனவரி 2, 2018
பிரசுரம்:http://www.vallamai.com/?p=82521

அகஸ்மாத்தாக என் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு முன்சாக்கிரதை மனிதர். வயது 92 என்பதால் எல்லாம் முன்கூட்டியே செய்து விடுவார். அடுத்த க்ஷணம் யார் கண்டா என்பார். 2019 வருட வாழ்த்துக்களை இப்போதே அளித்து விடுவார். அவர் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும் கம்பீரமாக நின்று நம்மை எடை போடும். அத்தனை அழகிய கையெழுத்து. ஆடாமல் அசையாமல் வாடா என்பார். வந்து கட்டியம் கூறும். அவர் எனக்கு பொங்கல் வாழ்த்துக்களை இன்றே எழுதி கொடுத்து விட்டார். அதற்கு பிறகு வருவோம். ‘கொற்றையருள்’ என்ற தன் புனைப்பெயரால் எழுதிய கவிதை ஒன்றை நீட்டினார். நம்ம ருத்ரனே அசந்து போகிறமாதிரி நீரோட்டம். இந்த தொடருக்கு உகந்த கருத்துக்கள்:

இன்னாளில்
அன்பினால் இவ்வுலகம் ஆட்படவேண்டும்
அறநெறி ஓங்க வேண்டும் பிறநெறி நீங்கவேண்டும்
தன்னலம் காத்தலோடு பொதுநலம் பேணவேண்டும்
பழியிலாப் பொருளீட்டிப் பயனுற வழங்கவேண்டும்
நல்லன எண்ணிடில் நல்லன விளைந்திடும்
நல்லன மொழிந்திடில் நட்பது மிகுந்திடும்
நல்லன ஆற்றிடில் நானிலம் உய்யுமால்
நல்லன எண்ணி, நல்லன மொழிந்து நல்லன ஆற்றுக!
நலமோங்க வாழ்க! நாடொறும் வாழ்க!
கொற்றவையருள்

எளிய தமிழில் வழங்கப்பட்ட கவிதை தான். எனினும், உள்ளே தொக்கி நிற்கும் பொருட்களஞ்சியம் கண்டு களித்து பேணத்தக்கது. சாங்கோபாங்காமாக அடுத்தத் தொடரில் அலசலாம்.

(தொடரும்)
-x-




















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, December 31, 2017

அன்றும் இன்றும் [1]


அன்றும் இன்றும் [1]
இன்னம்பூரான்
ஜனவரி 1, 2018
பிரசுரம்: http://www.vallamai.com/?p=82449#respond

இன்றைய உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வருங்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு வாழும் கலையை கற்றுக்கொடுக்கும் ஆற்றல், கணிசமான அளவுக்கு, நம்மிடமும், நமது மூதாதையரிடமும் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் தத்துவரீதியில் அமைவதும், வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமாகவும், தோழமையுடன் அளவளாவுதலாகவும் அமைவதும் நலம் பயக்கும். அத்துடன் நிற்காமல், பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய ‘நல்வழி’ ராஜபாட்டையில் தொன்மை, புதுமை, நவீனம், எத்திசையிலிருந்து தென்றலாக வீசும் சான்றோர் வாக்கை சிந்தனையில் அடை காக்கவைத்து தெளிவடைவது போன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும், பெருமளவிலும் நடக்கவேண்டும் என்ற அவா எழுத்திலக்கியத்திலும், சொற்பொழிவுகளிலும், மற்ற ஊடகங்களிலும் தென்படுகிறது. நானும் அதற்கு விலக்கல்ல.

2018 வருடத்தை வரவேற்கும் தருணத்தில், இந்தியா பல நல்வழிகளில் முன்னேறவேண்டும், தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக அமையவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கவேண்டும், மக்களிடம். வரலாற்றையும், அது அளித்த இன்பதுன்பங்களை மறப்பது எளிதல்ல என்றாலும், அதன் பாடங்களை நாம் இனம் காணமுடியும்; எச்சரிக்கையாக இயங்கமுடியும். அலை ஓசை ஓய்வதில்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்வதற்கு எல்லையும் இல்லை.
அருவமான மனம் வடிவியல் ( ஜீஆமட்ரீ ) சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், அஞ்ஞானத்திற்கும், ஏன் ? ஞானத்திற்கே அப்பாற்பட்டது.  மூளையோ ஒரு அற்புதமான அவயவம். அவை இரண்டுடன், நினைவாற்றல், சிந்தனை, அசை போடுதல், மாற்றி யோசிப்பது, பிரஞ்ஞை போன்ற ஏழு குதிரைகளை பூண் பூட்டிய ரதமாக அமையட்டும், 2018. ஆதவன் அத்தகைய ரதத்தில் தான் ஒளி மயமாக ஜொலித்துக்கொண்டே பிரபஞ்சத்தில், நாள் தவறாமல் பவனி வருவதாக ஐதிகம் கூறுகிறது. வானவியல் அந்த பவனியை பறை சாற்றுகிறது. அந்த உவமை இங்கு ஒத்துத்தான் போகிறது. சுருங்கச்சொல்லின், இந்த பூவுலகத்து வாசிகளான சகல ஜீவராசிகளையும் சகலவித போஷாக்குடன் வளர்த்து உய்விக்கும் திறன் கொண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்ள நாட்தோறும் எழுதினாலும், ஒரு வருடம் போதாது; மாமாங்கமும் போதாது. ஆகவே புத்தாண்டை வரவேற்க, உலகில் மிகவும் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு வரியை மட்டும், இன்று எடுத்துக்கொள்கிறேன்.

“The arc of the moral universe is long, but it bends towards justice.” என்றார் தியோடர் பார்க்கர் (1810 -1860) என்ற மத போதகர். விவிலியத்தின் கூற்றுக்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதவர். அதனால் ஏற்பட்ட இன்னல்களை சகித்துக்கொண்டார். அதுவே முதல் பாடம் என்க. அவர் மேற்கல்வி கற்ற விதமே அலாதியானது.  வறுமையின் காரணத்தால் அவருக்கு ஹார்வேட்டில் படிக்க இடம் கிடைத்தபோதிலும் அங்கு சேரமுடியவில்லை. தந்தையின் பண்ணையில் ஊழியம் செய்து கொண்டே வீட்டிலிருந்து படித்து, மூன்று வருட தேர்வுகளை முதல் வருடமே கெலித்த 19 வயது இளைஞனவர். இந்த எடுத்துக்காட்டு 65 வருடங்களுக்குப் பின் என் கண்களில் இப்போது தென்படுகிறது. இன்று என் அறையை சுத்தம் செய்தேன். என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு ஆவணம் தற்செயலாக கிட்டியது. அதில் ஆழ்ந்து விட்டேன். அது நான் ஜனவரி 1, 1953 முதல் ஓரிண்டு வருடங்கள் எழுதிய நாட்குறிப்பு. நான் அதை எடுத்துப்பார்த்த ஞாபகம் சில மாமாங்களுக்கு முன்னால். அக்காலம் டைரி கிடைப்பது குதிரை கொம்பு. பெண்ட் செய்யப்பட்ட நோட்டுப்புத்தகம் வாங்கவே காசு இல்லை. தினசரி இதழ்கள் வரும் சாணிப்பேப்பர் எனப்படும் மலிவான காகிதம் வாங்கி அதை நோட் புத்தகமாக தைத்து எழுதியிருக்கிறேன். அடிக்கடி முனைந்து படிக்கவேண்டும், நேரம் வீணாக்கலாகாது, வெட்டிப்பேச்சு வேண்டாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். நான் அப்படித்தான் நாட்தோறும் இயங்கினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முதலுக்கு மோசம் போகவில்லை என்று இப்போது ஞானோதயம் உதிக்கிறது! இது நிற்க.

நான் அடிக்கடி சுய விசாரணைக்கு உட்படுத்தும் எடுத்துக்காட்டு, அடிக்கடி அப்ரஹாம் லிங்கனாலும், மார்ட்டின் லுதர் கிங் என்ற அமெரிக்காவின் காந்தியினாலும் அடிக்கடி கூறப்பட்டது. அவர்கள் இருவரின் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் வித்திட்டது. அது தான்:

“The arc of the moral universe is long, but it bends towards justice.” 
பொருட்கூறப்போனால் ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும் எனலாம்.சொற்களை மாற்றி பிரயோகித்தாலும் பொருள் மாறப்போவதில்லை. பொழிப்புரை என்று சொன்னால் பலரும் பலவிதமாக கூறலாம். ‘சத்யமே ஜயதே’ என்று தலை மேல் அடித்து ஆணையிட்டு விட்டு, பொய்யுரைப்பதையே வாழ்விலக்கணமாக அமைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். அவ்வாறு இப்போது பேசிக்கொண்டு போவது திசை மாறி விடும். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’
எல்லா மனிதர்களுக்கும் எது நல்லது/ எது தீயது என்பது நன்றாக தெரியும். சிலர் அப்போது கூட தீயதையே செய்து தன்னலத்தை மட்டும் காபந்து செய்து கொள்வார்கள்; அதற்காக மற்றவர்களை வேரோடு சாய்த்து விட்டு, சுதாரித்துக்கொள்வார்கள். அதை நியாயப்படுத்துவார்கள். தியோடர் பார்க்கர் அவர்கள் இந்த அநீதி நிலைத்து நிற்க போவதில்லை. தருமம் தலை காட்டும் என்கிறார். காந்தி மஹானின் வாழ்க்கையே தியோடர் பார்க்கர் வாக்கை நிரூபிக்கிறது. மேலும் பார்க்கலாம்.
-#-
பி.கு. சென்னையில் பயணம் செய்யும் போதெல்லாம் எந்த நிமிடமும் விபத்தில் உயிர் இழக்க நேரிடலாம் என்று அச்சப்படும் அளவுக்கு எதிர்வாடையில் பயங்கரவேகத்தில் மோட்டார் சைக்கிளில் விவரம் தெரிந்த மூடர்கள் கூட வருகிறார்கள். டாணாக்காரர்களும் தூங்கி வழிகிறார்கள். இதை பார்க்கும் போது, இது கலிகாலம். நீதிக்கும் ஒரு வில் உண்டு. அது வளையாது; உடைந்து விடும் என்று தோன்றுகிறது. இது மக்களே மாற்றிக்கொள்ள வேண்டிய அசட்டுத்தனம் அல்லவோ? நீங்கள் என்ன சொல்வீர்களோ?


(தொடரும்)


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










2018

WISH YOU A HAPPY & PROSPEROUS NEW YEAR 2018
Innamburan