கனம் கோர்ட்டார் அவர்களே [25]
இன்னம்பூரான்
Wednesday, February 17, 2016, 21:45
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p= 66455
இல்லறம் வாழ்வியலில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருப்பதாலும், அது பெரும்பாலோருக்கு உகந்ததாக அமைந்து இருப்பதாலும், ஆண்-பெண் உறவு போற்றப்பட்டதாக அமைகிறது. இங்கு திருமணவைபவம் முன் நிறுத்தப்படவில்லை. நற்றிணை போன்ற சங்கப்பாடல்களில் அந்தரங்க உறவு மேன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது . சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் காதல் – ஆணழகன் – பெண்ணரசி – உறவு என்பன அகம் எனப்படும். அகப்பொருளின் பாடு பொருள் ஆண் பெண் என்னும் இருபாலாரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது. தேவருலகங்களில் செங்கோல் ஆட்சி செலுத்துகிறது. உடைமையது இன்பம் தருவது. இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்.
எல்லாஉயிர்க்கும் இன்பம் என்பது
தானர்ந்து வருஉம் மேவற்றாகும்.
-தொல்காப்பியம் பொருளதிகாரம் – நூற்பா 27
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகம் புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது ‘ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம். . .’ என்றுதான் அவர் ஆரம்பிக்கின்றார். நாம் தான் அதன் காதில் ‘சிற்றின்பம்’ என்ற பூ சூட்டி விட்டு, தட் தடாவென்று தடை விதித்து விட்டு, ரகசியமாக, தடையை மீறுகிறோம். தொன்மை காலங்களிலிருந்து தற்காலம் வரை, தேவ வாக்குக்கள், அரசாணைகள், பிரகடனங்கள், சட்டங்கள் ஆகியவை ஆணும் பெண்ணும் பிரிந்தால் ஏற்படக்கூடிய குழந்தைகளின் தவிப்பு போன்ற சிக்கல்களை அலசி, ஆராய்ந்து, சில வழிமுறைகளை அமல் படுத்துகின்றனர்.
சில உண்மையான நிகழ்வுகள்:
மீனுவுக்கும் சீனுவுக்கும் 1978ல் திருமணம். பத்து வருடங்களில் மூன்று குழந்தைகள். அந்த காலகட்டத்தில், தான் இஸ்லாமியர் ஆகிவிட்டதாக சான்றுகள் காட்டி, மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான், சீனு.
அதே வருடத்தில் [1988] சீதாவை மணந்த கிஷோர், அவளை துன்புறுத்தினான். மூன்றே வருடங்களில், மற்றொரு பெண்ணுடன் உடன்போக்கு சென்று, பின்னர் இஸ்லாமியராக மதம் மாறி மணந்து கொண்டான்.
1992: கமலா என்போம், அவருடைய பெயரை, இங்கு. அவர் தாயகம் சென்று திரும்பினால், அவரது எட்டு வருட தாம்பத்தியம் நட்டாற்றில். அவரது கணவன் சந்திரன் விவாகரத்து வேண்டும் என்றான். திக்கிட்டுப்போன கமலாவின் மனம் உடைந்து விட்டது. அழுதுகொண்டே , மறுத்து விட்டாள். ஒரு வருடம் பொறுத்த பின், சந்திரன் தான் இஸ்லாம் மதத்தைத் தழுவி விட்டதாக கூறி, சாக்ஷியம் காட்டி, வேறு ஒரு பெண்ணை, புதிய மதம் அனுமதிக்கிறது என்று, மணம் செய்து கொண்டான்.
நீங்கள் நீதிபதியாக இருந்தால் என்ன தீர்வு சொல்வீர்கள்? மூன்றும் நடந்து விட்ட சம்பவங்கள். தீர்வும் வழங்கப்பட்டது. அது பின்னர்.
இரண்டு துணை வினாக்கள்: [1] சட்டவிரோதமாக பல இருதாரத்தினர் சகஜமாக உலவுகிறார்கள். சட்டம் அவர்களை என்ன செய்யும்?
[2] குஜராத்தில் மைத்ரீகரார் என்ற காந்தர்வ விவாகம், காண்ட்றாக்ட் என்ற முறையில், ‘தொட்டால் உண்டு; விட்டால் போச்சு.’ என்ற நடைமுறையில் இருந்தது. சட்டம் அவர்களை என்ன செய்யும்?
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com